புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 137

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 137


வனவாசிகள், இறந்தவர்களை அழகிய முறையில் நீராட்டி, வனத்துக்குள் கிடைக்கின்ற வாசனை மலர்களைத் தூவி, மரப்பட்டைகளில் சுற்றி,  ஆழமான குழி தோண்டி அதற்குள் வைத்து மூடிவிடுவதையே ஆதிகாலம் தொட்டு வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

இறந்தவர்களை அவர்கள் ஒருபோதும் இறந்தவர்களாகக் கருதுவதில்லை; ஏதோ ஒருவகையில் புதைகுழிக்குள் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே அவர்கள் கருதிவருகின்றனர்.

இறந்தவர்களது ஆவி உலகிற்குள் திரும்பி வந்து கஷ்டப்படும் என்பதாலோ அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கஷ்டங்களைத்தரும் என்ற பீதியினாலோ, வாழ்ந்து கொண்டிருப்போரில் குறிப்பிட்ட சிலர் இறந்தவர்களை எரிப்பதாக இர்வின் ஒருமுறை தன்பக்கமுள்ள நியாயத்தைக் குறிப்பிட்டதை செரோக்கி மறந்துவிடவில்லை!

செரோக்கியும் அவனது நண்பன் மங்குவும் விடியட்காலையில் களியாட்ட மைதானத்திற்கு வந்து, அங்கு வரிசையாக இருந்த தமது முன்னோர்களின் புதைக்குழிகளுக்கருகில் குழியொன்றினைத் தோண்டினர்.

தாம் மறைத்துவைத்திருந்த சடலத்தை நீராட்டி, தம்மோடு எடுத்துவந்த  மலர்களைக் கொண்டு சடலத்த அகங்கரித்து, மரப்பட்டைகளில்  சுற்றி, கிராமத்தின் மூத்தோர்கள் வந்து இறுதிக் கிரியைகளைச் செய்யும்வரைக்கும்   புதைக்குழிக்கருகில் காத்திருந்தனர்.

இன்றைய தினம் கானகத்துப் பழங்குடியினரின், தீமூட்டு தினமாகும். அந்திசாயும் நேரத்தில் கிராம மக்கள் ஒன்று திரள ஆரம்பிப்பார்கள்.

அதற்கு முன்னர் இந்த சடலத்தின் இறுதிக் காரியங்களை  முடித்துக்கொள்ள வேண்டுமென்று செரோக்கி நினைத்தான்.

வேறுபட்ட நூற்றுக்கணக்கான  பழங்குடியினர் வாழும் இவ்வனத்தில், தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வாழ்ந்த  ஒரு இறுதி மனிதரின் இழப்பை நினைத்துக் கவலைப்பட எவருமில்லா நிலையிலும், காரியங்கள் சிறப்பாக இடம்பெறுவதை நினைத்து செரோக்கி பெருமிதமடைந்தான்!
(தொடரும்)




 


Post a Comment

Previous Post Next Post