Ticker

6/recent/ticker-posts

கத்தாரும் 22வது FIFA காற்பந்தாட்டத் தொடரும்!

த்தார் என்பது  மேற்காசியாவில் உள்ளஇறையாண்மைமிக்க ஒரு நாடாகும்.  1916ம் ஆண்டில் இருந்து  1971ல் தான் விடுதலை பெறும் வரை, இது பிரித்தானியாவின் பாதுகாப்புப்பெற்ற நாடாக விளங்கியது.

ஷேக் ஜசீம் பின் முகமது அல் தானி கத்தார் அரசின் நிறுவனர் ஆவார். இதன் தலைவராக ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இருந்து வருகின்றார்.

1995ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய சிற்றரசர் ஷேக்  தமீம் பின் ஹமத் அல் தானியின் தந்தை  ஷேக்  ஹமத் பின் கலீஃபா அல் தானியின் அரசியல் மாற்றத்துக்குப் பிறகு, கத்தார் எழுச்சி பெற்ற நாடாக மாறத் தொடங்கியது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதாவது 1922ம் ஆண்டில், ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம் மக்களையும், 12,000 கிலோ மீட்டருக்கும் குறைவாக, மக்கள் குடியிருப்புக்கு ஒவ்வாத நிலத்தையும்   கொண்டிருந்த  கத்தார், மீனவர்கள், முத்துக்குளிப்பாளர்கள் கொண்ட குடியிருப்பு நாடாக இருந்தது.  பெரும்பாலான இக்குடிமக்கள், அரேபிய தீபகற்பத்தின் பரந்த பாலைவனங்களில் இருந்து நாடோடிகளாக வந்து குடியேறியோர்களாவர்.

காலம் செல்ல,  அடிப்படையில் சிறிய நாடாக இருந்தாலும், இந்நாடு உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கியபோது, 2017ல் சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சில வளைகுடா நாடுகள்       தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும், அண்டை நாடுகளின் உள்நாட்டுச் செயற்பாடுகளில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டி, தமது உறவுகளைத் துண்டித்துக் கொள்ள முற்பட்டன!
தற்போது கத்தார் உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் கொண்ட நாடாகும். இது தனி நபர் வருமான அடிப்படையில் உலக நாடுகள் இடையே முதலிடம் வகிப்பதோடு,  ஐக்கிய நாடுகள் அமைப்பு இதனை சிறப்பான மனித வள வளர்ச்சி அடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே  முன்னேற்றம் கண்ட ஒரு நாடாகவும் கருதுகின்றது!

கத்தாரின் அமோக வளர்ச்சியும், தைரியமும் 2022- FIFA உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியை, முற்றிலும் இஸ்லாமிய விழுமியங்களுக்குள் - பிரச்சாரப் பின்னணியை இலக்காகக் கொண்டு  நடாத்தும் துணிச்சலை அதற்குக் கொடுத்துள்ளது. அதே நேரம்  இப்போட்டியை நடாத்தும் முதல் அரபு நாடு என்பதில் இந்நாடு பெருமிதமடைகின்றது!

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ( FIFA ) என்பது காற்பந்தாட்ட விளையாட்டுக்கான கட்டுப்பாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் "சூரிச்" நகரில் அமைந்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் முக்கியமான காற்பந்துப் போட்டிகளை ஒழுங்கு செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பு இவ்வமைப்பைச் சாரும்.

இவ்வமைப்பில் 211 தேசியக்காற்பந்தாட்டக் கழகங்கள் உறுப்பினராக உள்ளன. உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் அணிக்கு "காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்" வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு, இறுதியாக  வெற்றி பெற்ற அணியே வெற்றிக்கிண்ணத்தைப் பெறும். 

இப்போட்டி நிகழ்வானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்று வரை நான்கு ஆண்டுகளுக்கொருதடவை நடைபெற்று வருகின்றது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இப்போட்டி நடைபெறவில்லை. 2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஜேர்மனி வெற்றியீட்டியது.

ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகவும் திகழ்கிறது. 

உலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. ஜெர்மனியில் 2006ம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.

கத்தாரில் நடைபெற்றுவரும் 22வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட முதல் சுற்றில் 2வது தோல்வியை எதிர்கொண்ட வரவேற்பு நாடான கத்தார், முதலாவது நாடாக உலக கிண்ணப் போட்டியிலிருந்து நொக் அவுட் செய்யப்பட்டதன் மூலம், உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் பங்குபற்றிய நாடு என்ற வகையில், உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சுற்றுடன் வெளியேறும் இரண்டாவது வரவேற்பு நாடாகியமை கவலை தரும் விடயமாகும்.
கத்தார் அணி

2010ல் தென்னாபிரிக்கா தனது சொந்த மண்ணில் முதல் சுற்றுடன் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.  அத்துடன் லீக் சுற்றில் இரண்டு போட்டிகள் மாத்திரம் நிறைவடைந்த நிலையில் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் முதலாவது நாடும் கத்தாராகும்.

FIFA World Cup 2010  உலக சாம்பியனான, தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் ஸ்பைனை,  தரவரிசையில்  22 வது இடத்தில் இருக்கும்  மொரோக்கோ பெனால்டி முறையில் வென்று, கால் இறுதிக்கு வந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் 32 நாடுகளில் போட்டித் தொடரை நடாத்தும் கட்டார் உட்பட சவுதி அரேபியா, ஈரான், செனகல், துனிசியா, மொரோக்கோ ஆகிய ஆறு இஸ்லாமிய நாடுகள் பங்கேற்றியிருந்த போதிலும், காலிறுதிக்கு வந்துள்ள ஒரே இஸ்லாமிய நாடாக மொரோக்கோ தெரிவானதாகும்.
மொரோக்கோ அணி

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றால் உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்குச் செல்லும் "முதல் ஆபிரிக்க அணி" என்ற பெருமையைப் பெற்றுவிடும்.

1966க்குப் பின்னரான உலகக்கிண்ண கால்பந்து வரலாற்றில் நோக்கௌட் சுற்றில் அதிகம் பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பெனால்டி சூட்டௌட்டில் சொதப்பிய இரண்டு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

2022 உலகக்கிண்ண நோக்கௌட் சுற்றில் பந்தை 77% தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு ஸ்பெயின் மொரோக்கோவிடம் தோல்வியடைந்துள்ளது!

77% பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து 1019 தடவைகள் பந்தை எறிந்த  ஸ்பெய்னால் பெனால்டி சூட்டௌட்டில்  ஒரு முறையாவது பந்தை கோல்போஸுக்குள் செலுத்த முடியாது போய்விட்டது!

ஒரு பெனல்டி கிக்கை வெற்றிகரமாகப் பயன்படுத்தத் தெரியாத நிலையில், "நாங்கள்தான் பந்தை அதிகம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்” என்று தம்பட்டம் அடிப்பது, முன்னாள் உலகச்சாம்பியன் என்ற பட்டத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதாக கால்பந்தாட்ட விளையாட்டுப் பிரியர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

2022ம் ஆண்டின் ஆண்கள் உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழா  நவம்பர் 20ல்  கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள அல்பாய்த் அரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகியது.

அதே அரங்கில் 2 மணித்தியாலங்களின் பின்னர், அதாவது இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு இச்சுற்றுப்போட்டியின் முதல் போட்டியில் கத்தாரும் ஈக்குவடோரும் மோதியதில் கத்தார் தோல்வி கண்டது.

திசம்பர் 18 வரை நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் பிரான்ஸ் உட்பட 32 அணிகள் பங்குபற்றுகின்றன.

இவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் முதல் சுற்றுப் போட்டிகள்  நடைபெற்றன. தோஹாவிலுள்ள 4 அரங்குகள் உட்பட மொத்தம் 5 நகரங்களிலுள்ள 8 அரங்குகளில் போட்டிகள் நடைபெற்றன.

உலகக் கிண்ண போட்டிகளை நடாத்தும் 18வது நாடும், இச்சுற்றுப்போட்டியை நடத்தும் முதலாவது அரபு நாடும், முதலாவது மத்திய கிழக்கு நாடும் கத்தாராகும்.

"வரவேற்பு நாடு" என்ற அடிப்படையில் இச்சுற்றுப் போட்டிக்கு கத்தார் அணியும் தகுதி பெற்றுள்ளது. இதற்குமுன் உலக கிண்ணப் போட்டிகளுக்கு கத்தார் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1971 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து கத்தார் சுதந்திரம் பெற்றது.  அதற்குமுன் 1970ல் பஹ்ரைனுக்கு எதிரான போட்டி மூலம் சர்வதேச கால்பந்தாட்டத்தில் கத்தார் அறிமுகமாகியிருந்தது.

உலகக் கிண்ண வரலாற்றில் பல புதிய அம்சங்கள் இம்முறை அறிமுகமாகின்றன.

'ஓவ்சைட்' தீர்மானங்­ளை விரைவாகவும் துல்லியமாகவும் தீர்மானிப்பதற்கு தன்னியக்கத் தொழில் நுட்பம் இம்முறைதான் முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டிகளின்போது அறிமுகமாகின்றது.
பந்தையும் வீரர்களின் அவையங்களையும் பின் தொடரும் "சென்சார்" தொழில்நுட்பம் இதுவாகும்.

அத்துடன், முதல் தடவையாக பெண் மத்தியஸ்தர்கள் அறிமுகமாகியுள்ளனர். 36 மத்தியஸ்தர்களில் மூவர் பெண்கள். ஒவ்வொரு போட்டியிலும் 5 மாற்று வீரர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னர் 3 மாற்று வீரர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 26 வீரர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது. முன்னர் 23 பேர்  அனுமதிக்கப்பட்டனர்.

முதல் தடவையாக நவம்பர், டிசெம்பர் மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றமையும் ஒரு  குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2022 நவம்பர்  மாதம் 20ம் தேதி கத்தாரில் தொடங்கிய இக்காற்பந்தாட்டத்தொடரில் 32 நாடுகளின் குழுக்கள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான இரண்டாவது சுற்றுக்கு நுழையும்.

நெதர்லாந்து, செனகல் (ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்), பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில்,  நடந்து முடிந்த நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் - நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில், மொரோக்கோ, போர்ச்சுக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

கத்தார் 2022 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றது.
குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்ற முதல் போட்டி, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு எடியுகேஷன் சிட்டி அரங்கில் நடக்கவுள்ளது.

சனிக்கிழமை விடியல் 12.30 மணிக்கு  லுசைல் அரங்கில் நடக்கவுள்ள அடுத்த போட்டி நெதர்லண்ட்டுக்கும் ஆர்ஜன்டீனாவுக்குமிடையிலும், இரவு 8.30 மணிக்கு மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்குமிடையேயான போட்டி அல்துமாமா அரங்கிலும் நடக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்குமான காலிறுதியின் இறுதிப்போட்டி திசம்பர் 11ம் திகதியன்று விடியலில் 12.30 மணிக்கு அல்பைத் அரங்கிலும்  நடக்கவிருக்கின்றன.

இதில் வெற்றி பெறும் 4 அணிகளே  அரையிறுதிக்குத் தகுதிபெறும் நிலையில்,  "வெற்றிக்கிண்ணம் " வழங்கும் வைபவம்  டிசம்பர் 18ல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது!

உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்குபற்றும் அணிகளுக்கு பரிசுகளை அள்ளி வழங்கவுள்ள FIFA மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டொலர்களை  இதற்காக ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2018 உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்பட்டதைவிட 40 மில்லியன் டொலர் அதிகமானதாகும்.

போட்டிகளுக்கு முன்பாகவே, தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் தயார் படுத்தல்களுக்காக தலா 1.5 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன.

இது தவிர, சுற்றுப்போட்டியில் கடைசி இடங்களைப் பெற்று வெளியேறும் அணிகளுக்கும் குறைந்தபட்சம் 9 மில்லியன் டொலர்களும், 16 அணிகள் கொண்ட முன் கால் இறுதி சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்குத் தலா 13 மில்லியன் டொலர்களும், காலிறுதியுடன் வெளியேறும் அணிகளுக்குத் தலா 17 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும்.

4ம் இடத்தைப் பெறும் அணிக்கு 25 மில்லியன் டொலர்களும், 3ம் இடத்தைப் பெறும் அணிக்கு 27 மில்லியன் டொலர்களும்   2ம் இடத்தைப் பெறும் அணிக்கு 30 மில்லியன் டொலர்களும்  வழங்கப்படும் அதே நேரம்,  சாம்பியனாகும் அணிக்கு 42 மில்லியன் டொலர்களுடன்  வெற்றிக்கிண்ணமும்  வழங்கப்படும்.

'தங்கக் காலணி' விருது.

இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் Golden Boot என்னும் 'தங்கக் காலணி' விருது எந்த விளையாட்டாளருக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்வதில் விளையாட்டுப் பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்  அதிக கோல்களைப்போடும் விளையாட்டாளருக்குக் கொடுக்கப்படும் கௌரவ விருது இதுவாகும்.

இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில்   Golden Boot  விருதைக் கைக்கெட்டிய தூரத்தில் வைத்திருக்கும் வீரராகத் தற்போதுவரை, பிரான்ஸைச் சேர்ந்த கிலியன் இம்பாப்பே (Kylian Mbappe) காணப்படுகின்றார். இவர் 5 கோல்களை  அடித்து முன்னிலை வகிக்கும் நிலையில்,இங்கிலாந்தைச் சேர்ந்தவார்களான மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் (Marcus Rashford), புகாயொ சகா (Bukayo Saka) ஆகியோரும், ஆர்ஜென்ட்டினாவின் லயனல் மெஸ்ஸி (Lionel Messi), நெதர்லந்தின் கோடி காக்போ (Cody Gakpo), போர்ச்சுகலின் கொன்ஸாலொ ராமோஸ் (Goncalo Ramos) பிரேசிலின் ரிச்சார்லிஸன் (Richarlison) ஆகியோரும் தலா 3 கோல்கள்  அடித்து  அடுத்த நிலையில் உள்ளனர்.


லயனல் மெஸ்ஸி

FIFA காற்பந்துப் போட்டிகளில் இதுவரை அதிகமான Golden Boot விருதைப் பெற்ற விளையாட்டாளர் லயனல் மெஸ்ஸி ஆவார். இவர் 6 முறைகள்  இவ்விருதைப் பெற்றுள்ளார்..

இதுவரை உலகக் கிண்ணத்தைவென்ற நாடுகள்:
காற்பந்து விளையாட்டில் FIFA உலகக் கிண்ணப் போட்டியில் வெல்வதே உச்சநிலைச் சாதனையாகக் கருதப்படுகிறது.உலகக் கிண்ணத்தை வென்ற அணிகள் மக்களின் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடிக்கின்றன.

இதுவரை உலகக் கிண்ணத்தைத் தட்டிச் சென்ற அணிகள்:
பிரேசில் (Brazil)- (1958, 1962, 1970, 1994, 2002) 
இத்தாலி (Italy) - (1934, 1938, 1982, 2006)
ஜெர்மனி (Germany) - (1954, 1974, 1990, 2014)
உருகுவே (Uruguay) - (1930, 1950)
பிரான்ஸ் (France) - (1998, 2018)
அர்ஜென்ட்டினா (Argentina) - (1978, 1986) 
இங்கிலாந்து (England) - (1966)
ஸ்பெயின் (Spain) - (2010) 

அரை இறுதிக்குத் தகுதி பெறும் குரோஷியா. 

குரோஷியா அணி

நேற்று நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  4:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் குரோஷியா அரை இறுதிக்கு  தகுதி பெற்றுள்ளது.

கத்தாரின் அல்ரையான் நகரிலுள்ள எடியூகேசன் சிட்டி அரங்கில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை.  மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது, ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் அணித்தலைவர் நேய்மார் கோல் புகுத்தினார்.

எனினும், 117வது நிமிடத்தில் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் புகுத்திய கோலின் மூலம் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது. பின்னர் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டபோது குரோஷியா 4:2 விகிதத்தில் வெற்றி பெற்றது.

குரோஷியா சார்பாக நிகேலா விலாசிக், லொவ்ரோ மேஜர், லூகா மெட்றிக், மிஸ்லாவ் ஓர்சிக் ஆகியோர் கோல்கள் புகுத்தினர்.

இப்போட்டியில் புகுத்திய கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது!

செம்மைத்துளியான்.


 


Post a Comment

0 Comments