Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-33


செல்வத்தைச் சேமிக்கும் வழி
பணம் ! பணம் ! பணம் ! அதைத் தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கின்றான். எவ்வளவு வந்தாலும் இந்தப் பாழும் மனம் மட்டும் நிறைவதில்லை.

பணம் சேர்க்கத் தன் ஆரோக்கியத்தைத் தியாகம் செய்கிறான். பின் இழந்த ஆரோக்கியத்தை மீட்க சேர்த்தப் பணத்தை எல்லாம் தியாகம் செய்கிறான். இதுதான் மனித வாழ்க்கை என்று ஆகிவிட்டது இன்றைய கால கட்டத்தில்.நலமுடனும் வாழ வேண்டும். வளமுடனும் வாழ வேண்டும். அதற்கு என்ன வழி? நாம் தான் யார் சொன்னாலும் கேட்க மாட்டோமே ! நமக்குத் தோன்றியதை நாம் செய்வோம். பிறகு எப்படி நலமும், வளமும் சேமிப்பும், புண்ணியமும் கிட்டும்.

நாமும் என்னென்னவோ சொல்கிறோம். படிக்கிறோம். கேட்கிறோம். ஊஹூம் முடியல ! ஆனா, கீழே பாருங்க அத்தனையையும் நம் வள்ளுவத் தாத்தாரெண்டே வரியில சொல்லிப்புட்டார். படியுங்க!

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி (குறள் 226)

அதாவது, ஏழைகளின் கொடிய பசி நோயை நீக்குவதே ஒருவன் தான் பெற்ற செல்வத்தைச் சேர்த்து வைக்கத்தக்க இடமாகும் என்கிறார். என்னே! ஒரு தீர்க்க தரிசனப் பார்வை. இதோ! ஒரு உண்மைச் சம்பவம்.

வீடு வீடாகப் பொருட்களை விநியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால், கையில் பணமே இல்லை. பசியால் மயக்கம் வருவது போல் இருந்தது.

அருகில் இருந்த வீட்டில் ஏதாவது கேட்டு, வாங்கிச் சாப்பிடக் கேட்கலாம் என நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம்... வெட்கம்... மனம் கேட்கத் தயங்கியது. “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா குடிக்க?” நாக் குழறியது. தயக்கத்துடன்கேட்டான்.

அந்தச் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனிக்கிறாள். உள்ளே சென்றவள் ஒரு பெரிய கப் நிறைய பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை வாங்கி வயிறு நிறையப் பாலைக் குடித்து முடித்தான். மடமடவென்று பாலைக் குடித்துப் பசியாறிய சிறுவன் சொன்னான். நன்றி தாயே! நான் எவ்வளவு கடன் பட்டிருக்கின்றேன்? என்று.

“கடனா? அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” என்று அப்பெண் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அச்சிறுவன் மருத்துவம் படித்து அந்நகரிலேயே மிகப்பெரிய மருத்துவர் ஆகிவிட்டான்.

அச்சமயத்தில் அப்பெண்ணுக்கு ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணி ஆற்றிய மருத்துவமனையிலேயே அப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அதே அந்த மருத்துவரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.

மெடிக்கல் ரிப்போர்ட்டில் அப்பெண்ணின் ஊர், பெயரைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு மின்னல், விரைவாகப் போய் வார்டில் அப்பெண்ணைப் பார்த்தார். சிறு வயதில் தன் பசியாற்றியதாயுள்ளம் கொண்டவள் அவள்தான் என்பதை அறிந்தார்.

அன்று முதல் தன் முழு கவனம், உழைப்பை நல்கி, நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறோம் என அப்பெண் திகைத்துப் போனாள். ஆனால், அப்பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்த வாசகம்,"நீங்கள் பணம் கட்ட வேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுவதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவள் கண்கள் பனித்தன... அச்சிறுவன் வேறு யாருமல்ல... அமெரிக்காவில் மிகப் பிரபல மருத்துவரான பாக்டர். ஹோவட்கெல்லி (1858-1943) தான் அவர்.

வறியவரின் பசியைப் போக்குங்கள். அதுதான் நாம் பெற்ற செல்வம் பிற்காலத்தில் சேர்த்து வைக்கும் இடமாகும். நலம் பெற்று நீடு வாழ்வோம்!
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று மட்டும் நினைத்து விடாதே..

சில சமயம் நடக்காதது
கூட உன் நல்லதுக்குத் தான் மறந்துவிடாதே
(தொடரும்)



 


Post a Comment

0 Comments