திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 7

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 7


பயனில சொல்லாமை--20
தேவையற்ற சொற்களைப் பேசாதே 

வெறுக்கும் சொற்களைப் பேசுபவன்
பழிக்கப் படுவான் உலகத்தில்!

நட்பில் தீமை செய்வதினும்
பண்பற்ற சொற்கள் கொடிதாகும்!
பயனற்ற பேச்சைப் பேசுவோரை
மக்கள் வெறுத்தே ஒதுக்கிடுவார்!

பயனில் லாத சொற்களையே
பலரிடம் பேசிப் பழகுவது
நல்ல குணங்களை நீக்கிவிடும்!
அறத்தின் வழிக்கும் பொருந்தாது!

இப்படிச் சான்றோர் பேசினாலும்
மதிப்பும் சிறப்பும் போய்விடுமே!
பயனற்ற சொற்களைப் பேசுபவன்
மக்களில் பதர்தான் உணர்ந்திடுவாய்!

சிறப்பற்ற சொற்களைப் பேசினாலும்
பயனற்ற சொல்லைப் பேசாதே!
பயன்பா டறிந்த அறிஞர்கள்
பயனற்ற சொல்லைப் பேசமாட்டார்!

மாசே இல்லாச் சான்றோர்கள்
மறந்தும் வீண்சொல் பேசமாட்டார்!

பயன்தரும் சொற்கள் அமுதாகும்!
பயனற்ற சொற்கள் நஞ்சாகும்!

தீவினை அச்சம்-21
தீமை செய்ய பயப்படு

தீயவர் தீமை செய்வதற்கோ
கொஞ்சம் கூட அஞ்சமாட்டார்!
கடுகளவு தீமை செய்வதற்கும்
சான்றோர் இங்கே பயப்படுவார்!

தீங்கு விளையும் என்றேதான்
தீமை செய்ய அஞ்சவேண்டும்!
நமக்குத் தீமை செய்தாலும்
நன்மை செய்தல் சான்றாண்மை!

துன்பம் செய்ய நினைத்தாலோ
அறத்தின் கடவுள் தண்டிக்கும்!
வறுமைப் பிணியில் துடித்தாலும்
கொடுஞ்செயல் நாடக் கூடாது!
நாடிச் செய்தால் ஏழ்மையோ
தேடி வந்தே நமைச்சூழும்!

துன்பம் தனக்கு வருவதையே
விரும்பா தவனோ மற்றவர்க்குத்
தீங்கைச் செய்தல் கூடாது!
எப்பகை வரினும் தப்பிக்கலாம்!
தீவினைப் பகையோ தொடர்ந்துவந்து
நம்மை அழிக்கும் சக்தியாகும்!

தன்நிழல் தொடரும் தன்மைபோல்
தீமை செய்யும் வஞ்சகரை 
அழிவும் தொடர்ந்தே அழித்துவிடும்!
தன்மேல் அன்பைக் கொண்டவனோ
பிறர்க்குத் தீமை செய்வதில்லை!
இப்படித் தீமை செய்யாதோன்
வாழ்வில் கேடில் லாதவனாம்!

ஒப்புரவு அறிதல்-22
மற்றவர்க்கு உதவி செய்தல் கடமை

உயிரைக் காக்கும் மழையிங்கே
கைம்மா றெதையும் கேட்பதில்லை!
மழைமனச் சான்றோர் அதுபோல
உதவிகள் செய்வார் உலகத்தில்!

உழைத்துச் சேர்த்த பொருள்களையோ
தக்கவ ருக்குக் கொடுக்கவேண்டும்!
உழைக்க இயலா தவர்களுக்கே
உதவிகள் செய்யும் நற்செயல்போல்
இங்கும் தேவர் உலகிலுமே
காண்பது என்பதே அரிதாகும்!

உதவிகள் செய்பவன் வாழ்பவனாம்
செய்யா தவனோ செத்தவனாம்!
உதவும் மனிதனின் செல்வங்கள்
தண்ணீர் நிறைந்த ஊர்க்குளமாம்!

இப்படிப் பட்ட செல்வங்கள்
ஊரின் நடுவில் இருக்கின்ற
பழுத்த மரத்தைப் போன்றதிங்கே!

உதவும் மனத்தைக் கொண்டவர்கள்
சேர்த்த செல்வம் மருந்துமரம்
போலப் பயன்படும் இவ்வுலகில்!

செல்வம் இல்லா நிலையினிலும்
சான்றோர் கொடுக்கத் தயங்கமட்டார்!
பிறர்க்கு உதவ முடியாத
கொடுமை நிலைதான் வறுமையாகும்!
கொடுப்பதால் தீமை வருமென்றால்
தன்னை விற்கும் நிலைவரினும்
தீமையை வாங்க முன்வருவார்!

ஈகை-23
ஏழைகளுக்கு உதவு

ஏழைக்கு ஈவதே ஈகையாகும்!
ஏனை யோர்க்குத் தருவதெல்லாம்
சுயநல விளம்பரச் செயலாகும்!

நன்மை தன்னை எதிர்பார்த்து
பிறரிடம் பொருளை வாங்குவதோ
சரியே இல்லை! சொர்க்கமே
கிடைக்கா தெனினும் கொடுக்கவேண்டும்!

தனக்கு வறுமை இருந்தாலும்
ஏழைக் குதவுதல் நற்பண்பாம்!
கேட்டோர் பெற்று மனமகிழ்ந்தே
இனிய முகத்தைக் காட்டுமட்டும்
ஈகையும் துன்பம் தருவதுதான்!

பசியைப் பொறுக்கும் துறவிகளின் 
ஆற்றல்  இங்கே வலிமைதான்!
பசிப்பிணி போக்கும் நல்லவர்கள்
குணமோ அதனினும் வலிமைதான்!
பகிர்ந்தே உண்ணும் மாந்தரையோ
பசிப்பிணி இன்னல் தாக்காது!

செல்வத்தை இங்கே கொடுக்காமல்
இழக்கும் கல்மனக் கொடியவர்கள்
ஈந்து மகிழ்வதை அறிவதில்லை!
பொருளை என்றும் ஈயாமல்
தன்னலம் கொண்டோன் நிலையிங்கே
யாசிப் பதைவிட இழிவாகும்!

சாவு நமக்குத் துன்பந்தான்!
ஏழைக் குதவா நிலையுடனே
வாழ்வதைக் காட்டிலும் அதுமேலாம்!
(தொடரும்)


 


Post a Comment

Previous Post Next Post