Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-34


தலைவனுக்குரிய இயல்பு
இரவில் மாறுவேடத்தில் தலைநகரத் தெருக்களில் உலவுவது மன்னருக்கு வழக்கம். அதுபோல் ஒருநாள் மாறுவேடத்தில் உலவும்போது தன் ஒற்றர் தலைவர் பகைநாட்டுப் போர்வீரன் ஒருவனுடன், ஒரு பாழடைந்த கோயிலில் உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு சினந்தார். தன்னுடைய உப்பைத்தின்று வாழும் ஒருவன் தன் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய துரோகச் செயலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு, உருவிய வாளுடன் அவர்கள்மீது பாய்ந்தார்.

உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட ஒற்றர் தலைவன் தன்னைத்தாக்க வந்தவன் மாறுவேடத்திலுள்ள தன் மன்னர்தான் என்று அறியாமல், தனது வாளை உருவிக்கொண்டு அவருடன் சண்டையிட முற்பட்டான். இதைக்கண்டு ஓடிவந்த சிலர், ஒற்றருக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கைநழுவி விழுந்தது.

மிகுந்த கோபத்திலிருந்த ஒற்றன், மன்னருடைய கைகளைப்பிடித்துக்கொண்டு “முட்டாளே ! காரியத்தைக் கெடுத்துவிட்டாயே ! பகைவர்களுடைய வீரனைத் தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடிவிட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நல்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே ! யார் நீ ? என்று வசை பாடினான்.

அப்போது சுற்றியுள்ள வீரர்கள் தீவர்த்தியைத்தூக்கி மன்னர் முகத்தருகே காட்ட, அது தன்னுடைய மன்னர் என்று அறிந்து இடிவிழுந்தவன் போல் ஆனான் ஒற்றர் தலைவன். ஐயோ ! மகாராஜா ! நீங்களா!? உங்களை இருட்டில் யார் என்று தெரியாமல் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டேனே ! உங்களை வசைபாடிய என்நாக்கை இப்போதே அறுத்துவிடுகிறேன்! என்றவனை மன்னர் தடுத்தார்.

“ஒற்றர்தலைவா! உன்மீது எந்தத் தவறுமில்லை! ஒற்றர்தலைவனாகிய நீ உனது கடமையைச் சரியாகச் செய்துள்ளாய் ! நான்தான் அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்தேன். உன்னை சந்தேகித்தது என் முதல்தவறு. தீர விசாரிக்காமல் குறுக்கிட்டது இரண்டாவது தவறு. ஆக, குற்றம் புரிந்தவன் நானே! உன்னிடம் குற்றம் காணும்முன், என்னுடைய குற்றங்களை நீக்கிக் கொள்ளத் தவறிவிட்டேன். ஆகவே, மன்னிக்கவேண்டியது நீ தான் ! இனி, இத்தகைய தவறுகளை நான் புரியமாட்டேன் ! தலைவனுக்குரிய இயல்புகளோடு நடந்துகொள்வேன் ! என்னை மன்னித்துவிடு !" என்றார்மன்னர்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு! (குறள்.436)

விளக்கம் : தன்னிடமுள்ள குறையை நீக்கிவிட்டு அதன்பின்னர் பிறர்குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது. அந்த காலத்தில் மன்னருக்குச் சொல்வது போல் இருப்பினும், எக்காலத்திற்கும் பொருந்தும் சிறந்த உன்னதக் கருத்தாகும். இது தற்கால அதிகாரிகளுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், குடும்பத் தலைவர்களுக்கும், பொதுவாக அடுத்தவர்களைக் குறை சொல்லும் அனைவருக்கும் பொருந்தும். இதனை உணர்ந்து நாம் நல்வாழ்வு வாழ்வோம் (தொடரும்)



 


Post a Comment

0 Comments