பொறை உடைமை--16
மற்றவர் செய்யும் தீமைகளைப் பொறுப்போம்
தன்னைத் தோண்டும் மாந்தரையும்
தாங்கும் நிலம்போல் நாமிங்கே
நம்மை இகழ்ந்து பேசுவோரை
என்றும் பொறுத்தல் பண்பாகும்!
அடுத்தவர் செய்யும் தீங்குகளை
உடனே மறந்தால் நல்லதுதான்!
விருந்தளிக் காத நிலைதானே
உண்மை யான வறுமையாம்!
மற்றவர் கோபத்தைத் தாங்குவதே
உலகில் போற்றும் வலிமையாம்!
பொறுமை குணமுடன் வாழ்பவரை
பொன்மன மாந்தராய் புகழ்ந்திடுவார்!
தீமைக்குத் தீமை மதிப்பில்லை!
பொறுத்துப் போனால் மதிப்புண்டு!
சீண்டு வோரை தண்டித்தால்
ஒருநாள் மட்டும் இன்பந்தான்!
பொறுத்து வாழும் நிலையெடுத்தால்
உலகில் என்றும் பெருமைதான்!
நம்மை வாட்டி எடுத்தாலும்
பழிக்குப் பழியோ வேண்டாமே!
தீங்கை மறத்தல் உயர்வாகும்!
ஈன மனத்தோர் ஆட்டத்தைப்
பொறுமை யாலே வென்றிடலாம்!
வரம்பு மீறிய சொற்களையும்
பொறுப்போர் துறவிபோல் தூயவர்தான்!
மற்றவர் கொடிய சொற்களையும்
பொறுத்துக் கொள்ளும் மனிதருக்கு
விரதம் ஏற்கும் துறவிகளும்
அடுத்த நிலையில் இடம்பெறுவார்!
அழுக்காறாமை--17
பொறாமைக் குணம் கெடுதி
மனதில் பொறாமை இல்லாமல்
வாழ்வதே நல்ல ஒழுக்கமாம்!
பொறாமை இன்றி அனைவரிடம்
பழகுதல் அருமைச் சிறப்பாகும்!
பிறரைக் கண்டு புழுங்குபவன்
மாசு படிந்த தீயவனாம்!
துன்பம் தருவது இதுவென்றே
அறிந்தும் இங்கே அறிவுடையோர்
தீமை செய்ய அஞ்சிடுவார்!
பொறாமை கொண்ட மனிதருக்கு
பகைவராய் உள்ளதும் பொறாமைதான்!
அடுத்தவ ருக்குக் கிடைப்பதையே
பார்த்துப் பொறாமை கொண்டவனின்
சுற்றம் வறுமையில் அழிந்துவிடும்!
பிறரது உயர்வைக் கண்டேதான்
பொசுங்கிப் போகும் மனிதனிடம்
செல்வம் என்றும் தங்காது!
வறுமை நிலையாய்த் தங்கிவிடும்!
பொறாமை செல்வத்தை அழித்துவிடும்!
தீய வழிசெல்லத் தூண்டிவிடும்!
பொறாமை கொண்டவர் உயர்ந்ததில்லை!
விலக்கி வாழ்பவர் தாழ்ந்ததில்லை!
வெஃகாமை---18
மற்றவர் பொருளை விரும்பாதே
நடுநிலை தவறி பொருள்சேர்த்தால்
குடும்பம் நசிந்தே தத்தளிக்கும்!
நடுநிலை போற்றி வாழ்பவர்கள்
பழிதரும் பாவம் செய்வதில்லை!
நிலைத்த மகிழ்ச்சியை விரும்புவோர்கள்
அறநெறி மாறி நடக்கமாட்டார்!
புலனை அடக்கிய சான்றோர்கள்
வறுமை வந்தே சுட்டாலும்
மற்றவர் பொருளைக் கவரமாட்டார்!
பொருளைப் பறிக்க அறிவிழந்தே
வாழ்பவன் படித்தவ னானாலும்
படித்தும் இங்கே பயனில்லை!
மற்றவர் உடைமையைக் கவராமல்
வாழ்பவர் செல்வம் குறையாது!
நல்லறம் கொண்ட சான்றோரைச்
செல்வம் எல்லாம் தேடிவரும்!
ஆசை வாழ்வை அழித்துவிடும்!
ஆசையை விட்டால் அழிவில்லை!
புறம் கூறாமை---19
மற்றவர் குறித்து இல்லாததைச் சொல்லாதே
அறஞ்செய் யாமல் வாழ்ந்தாலும்
புறங்கூ றாமைச் சிறப்பாகும்!
பார்த்தால் புகழ்ந்து பேசுவதும்
இல்லையேல் இகழ்ந்து பேசுவதும்
அறத்தைப் பழித்து வாழ்வதினும்
மடமை யான தீச்செயலாம்!
வேடம் போடும் நட்பைவிட
சாவது என்றும் மேலாகும்!
நேரில் இகழ்ந்தால் வீரன்தான்!
புறங்கூறி வாழ்ந்தால் கோழைதான்!
புறணி பேசும் குணமொன்றே
அறவழி மறந்ததைக் கூறும்பார்!
ஒருவரைச் சாடும் உன்னைத்தான்
மற்றவர் இங்கே தூற்றிடுவார்!
இனிமைப் பேச்சால் ஒற்றுமையை
வளர்த்து வாழத் தெரியாதோர்
புறணி பேசி உறவினரின்
கூட்டைப் பிரித்தே எறிந்திடுவார்!
நண்பனைப் பற்றி பழிப்பவர்கள்
அயலார் குறையைப் போற்றுவாரோ?
புறணி பேசுவோர் மேனியையும்
உலகம் இங்கே தாங்குவது
அறத்தை எண்ணும் குணத்தாலோ?
தங்கள் குறையைத் திருத்திவிட்டால்
புறணி பேசுதல் மறைந்துவிடும்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments