கேரளாவில் மணமேடையில் பிரான்ஸ், அர்ஜென்டினா கால்பந்து அணிகளின் ஜெர்சி அணிந்த மணமக்கள்
கிரிக்கெட் மோகம் நிறைந்த இந்தியாவில் கால்பந்து மீது கொண்ட காதலால் கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகின்றனர்.
அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற ஞாயிற்றுக் கிழமையன்று கேரளாவில் எங்கு நோக்கினும் போட்டியை நேரலையில் காண்பதற்கான முனைப்பே தென்பட்டது.
கேரளாவில் ஆங்காங்கே பெரிய திரையில் இறுதிப்போட்டி நேரலை செய்யப்பட்டது. வீதிகளில் அர்ஜென்டினா, பிரான்ஸ் தேசியக் கொடிகள் கம்பீரமாக பறக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பெரிய திரைகளின் முன் போட்டியைக் காண திரண்டனர்.
ஆனால், கால்பந்து மீது கொண்ட காதலால் ஒரு திருமண ஜோடி செய்த காரியம் அவர்களை தனித்து அடையாளம் காட்டுவதாக அமைந்தது. சச்சின் – ஆதிரா ஜோடியின் திருமண நாள் சரியாக இறுதிப்போட்டி நடந்த ஞாயிறன்று அமைந்தது. பெரும்பாலான விஷயங்களில் ஒத்துப் போய்விட்ட அவர்கள், இறுதிப் போட்டியில் யாருக்கு ஆதரவு என்பதிலும் சமரசம் செய்ய விரும்பவில்லை.
அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகராக சச்சின் இருக்க, மணமகள் ஆதிராவோ பிரான்ஸ் அணியின் தீவிர ரசிகையாக திகழ்ந்தார்.
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கத்தாரின் லுசைல் மைதானத்தில் மோதிய ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கொச்சியில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
மணமக்களுக்கான பாரம்பரிய உடை மற்றும் ஆபரணங்களுக்கு மேலே இருவருமே தங்களது மனம் கவர்ந்த கால்பந்து நாயகர்களின் பத்தாம் நம்பர் பொறித்த ஜெர்சிக்களை அணிந்து கொண்டனர். பிரான்சின் இளம் நட்சத்திரம் கிலியான் எம்பாப்பே பெயர், எண் பொறித்த ஜெர்சியை ஆதிராவும், அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் பெயர், எண் பொறித்த ஜெர்சியை சச்சினும் அணிந்திருந்தனர்.
மண விழாவுக்குப் பிறகு வரவேற்பு, மண விருந்தை முடித்துக் கொண்டு, உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண 206 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரத்தில் உள்ள சச்சினின் வீட்டிற்கு இருவரும் விரைந்ததாக மலையாள மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
உலகக்கோப்பையை வென்ற களிப்பில் மெஸ்ஸி
பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்று, உலகக்கோப்பையை தன் கைகளில் ஏந்த வேண்டும் என்ற 35 வயது கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் கனவை நனவாக்கியது.
மெஸ்ஸி ரசிகர்களை பெருமளவில் கொண்ட கேரளாவில் அர்ஜென்டினாவின் வெற்றியை ஞாயிற்றுக் கிழமை இரவு முதலே பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றதால், திருச்சூரில் ஓட்டல் உரிமையாளர் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இலவசமாக பிரியாணி வழங்கினார்.
கால்பந்து மீது கேரளா கொண்டுள்ள காதல் கடந்த மாதம் பிஃபா வரையிலும் எட்டியது. கேரளாவில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த கால்பந்து ஜாம்பவான்களின் பிரமாண்ட கட் அவுட்களின் புகைப்படங்களை பிஃபா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. பிரேசில் கால்பந்து நட்சத்திரமான நெய்மர் தனக்கு வைக்கப்பட்டிருந்த கட் அவுட்களைப் பார்த்து, அதற்காக கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments