Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகே கோப்பையை வென்றது போன்ற உணர்வு..கால்பந்தில் கடவுளாக மாறிய மெஸ்ஸி.. மாயாஜாலக்காரன் கடந்து வந்த பாதை !


ஒருவழியாக உலகமே கத்தி ஆர்ப்பாட்டம் போடக்கூடிய அந்த தருணம் நடந்து முடிந்துவிட்டது. கடந்த உலகக்கோப்பை தொடரை உலகின் பாதிபேர் பார்த்ததாக ஒரு புள்ளி விவரம் வெளியாகி உலகளவில் கால்பந்துக்கு இருக்கும் மௌசை வெளிக்காட்டியது என்றால் அதை விட பயங்கரமான மோதல் தற்போது நடந்து முடிந்துள்ளது.

36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது என்றால் முதல் முறை உலகக்கோப்பையை உலகநாடுகளை சேர்ந்து வென்றது என்று சொல்லலாம். இந்த கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது கிட்டத்தட்ட உலகின் பாதிமக்கள் தங்கள் நாடு உலகக்கோப்பையை வென்றதைபோலத்தான் கொண்டாடி இருப்பார்கள்.. இத்தனைக்கும் காரணம் உலகம் போற்றும் ஒரு மாயாஜாலக்காரன்தான். அவரது பெயர் மெஸ்ஸி..

உண்மையில் பிரான்ஸ் இந்த உலகக்கோப்பையை வென்று இருந்தால் அந்த நாடு அதனை கொண்டாடியிருக்கும். ஆனாலும் தற்போது அர்ஜென்டினா ரசிகர்களின் கொண்டாட்டம் அளவுக்கு எல்லாம் அவர்கள் கொண்டாட்டம் இருந்திருக்காது. ஏனெனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் பிரான்ஸ் உலகக்கோப்பையை வென்றார்கள்.

ஆனால் அர்ஜென்டினாவின் இந்த வெற்றி, அதிலும் மெஸ்ஸியின் இந்த வெற்றி உலகையே கொண்டாட வைத்துள்ளது. உலகின் எதோ ஒரு மூலையில் கூட மெஸ்ஸியின் இந்த வெற்றி இந்த தருணம் வரை கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். பிரான்ஸ் இந்த உலகக்கோப்பையை வென்று இருந்தால் அது மற்றுமொரு உலகக்கோப்பை வெற்றியாகதான் இருந்திருக்கும். ஆனால் இப்போது இது சரித்திரமாகியுள்ளது.

இந்த உலகக்கோப்பையை கையில் ஏந்தியதன் மூலம் மெஸ்ஸி கால்பந்தின் கடவுளாக மாறியுள்ளார். எனவே கால்பந்து பற்றி பேசும்போது அதன் கடவுளை பற்றி வரலாறு பேசாமல் இருக்குமா என்ன? இனி கால்பந்தை பற்றி பேசும்போது மெஸ்ஸியை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. அவரைப்பற்றி பேசும்போது அவர் கத்தாரில் வென்ற உலகக்கோப்பையை பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

2006-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் சப்ஸ்டிடியுட் வீரராக களமிறங்கிய மெஸ்ஸி, தனது முதல் போட்டியில் ஒரு கோல் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்திருப்பார். பின் நாக் அவுட் போட்டியில் வெளியே உக்காரவைக்கப்பட்ட மெஸ்ஸி தன் அணியின் தோல்வியடைந்து வெளியேறியதை வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருப்பார்.

ஆனால், இந்த சம்பவம் நடந்த பின்னர் மெஸ்ஸி செய்தது எல்லாம் மயாஜாலம்தான். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் கால்பந்து ஜாம்பவானாக மாறினார். அவர் ஆடும் கால்பந்து கழகமான பார்சிலோனாவுக்கு அவர் பெற்றுத்தராத கோப்பைகளே இல்லை என்னும் அளவு அனைத்தையும் அந்த அணிக்காக பெற்றுத்தந்தார். இதுதவிர தனி நபருக்கான சிறப்பு விருதுகள் அனைத்தையும் பலமுறை வென்று கால்பந்தின் நாயகனாக மாறினார். உலகமே அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது.

ஆனால், இந்த சாதனையை எல்லாம் தனது தேசிய அணிக்கு அவரால் செய்யமுடியவேயில்லை. 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் விளையாட வாய்ப்பு தேடிவந்தபோது கூட அதனை ஒதுக்கி அர்ஜென்டினாவுக்காக மட்டுமே ஆடுவேன் என தொடர்ந்து அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கினார். ஆனால், அங்கு அனைத்தும் வேறாக இருந்தது.

உலகே கோப்பையை வென்றது போன்ற உணர்வு..கால்பந்தில் கடவுளாக மாறிய மெஸ்ஸி.. மாயாஜாலக்காரன் கடந்து வந்த பாதை ! 
கோபா அமெரிக்க தொடரில் தொடர் தோல்வி, 2010 உலகக்கோப்பையில் வெளியேற்றம், 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் தோல்வி, பின்னர் கோபா அமெரிக்க தொடரின் இறுதிபோட்டியில் சிலி அணியிடம் தொடர்ந்து இருமுறை அடுத்தடுத்து தோல்வி, பின்னர் 2018ம் ஆண்டு உலகக்கோப்பையில் இதே பிரான்ஸ் அணியிடம் தோல்வி என அந்த தருணத்தில் தொடர் தோல்விகள் மட்டுமே மெஸ்ஸியை தொடர்ந்தது.

இதன் காரணமாக விமர்சனம் அவரை சூழ்ந்தது. மெஸ்ஸி கிளப் அணியான பார்சிலோனாவுக்காக மட்டும்தான் கோல் அடிப்பார், அதற்காக மட்டும்தான் கோப்பையை வென்றுதருவார். நாட்டுக்காக ஆடினால் ஒன்றும் செய்யாமல் தோற்றுவிட்டு வருவார் என பல்வேறு விமர்சனங்கள் அவரை சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட மனஅழுத்ததில் சர்வதேச தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து பின்னர் மீண்டும் விளையாடுவதாக அறிவித்தார்.

ஆனால், இது எல்லாம் கடந்த ஆண்டு வரைதான். 2021-ம் ஆண்டு வந்ததும் அனைத்தும் மாறத்தொடங்கியது. முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த பிரேசில் அணியை வீழ்த்தி கோபா அமெரிக்கா தொடரை வென்றது அர்ஜென்டினா. அந்த தொடரில் மெஸ்ஸி செய்தது எல்லாம் மாயாஜாலம்தான். அந்த தொடரில் மட்டும் 4 கோல் அடித்து 5 அசிஸ்ட் புரிந்து தனியொருவனாக கோப்பையை வெல்ல முயன்றிருப்பார். இதன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக முதல் சர்வதேச கோப்பையை வென்று மெஸ்ஸி சாதனை படைத்தார்.

அதன்பின்னர் அதே ஆண்டு தென்னமெரிக்க சாம்பியனுக்கும் ஐரோப்பிய சாம்பியனுக்கும் இடையில் நடைபெறும் 'பைனலிசிம்மா' கோப்பையை இத்தாலியை வீழ்த்தி வென்றது அர்ஜென்டினா. இது ஒரே ஆண்டில் மெஸ்ஸி வென்ற இரண்டாவது சர்வதேச கோப்பையாக அமைந்தது. அதோடு 36 போட்டிகளில் தொடர்ந்து தோற்காமல் இருந்த சாதனையோடு இந்த கால்பந்து தொடரில் களம் கண்டது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி.


உலகே கோப்பையை வென்றது போன்ற உணர்வு..கால்பந்தில் கடவுளாக மாறிய மெஸ்ஸி.. மாயாஜாலக்காரன் கடந்து வந்த பாதை ! 
இதுவே மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என கருதப்பட்டதால் அவருக்காக இந்த கோப்பையை வெல்வோம் என சூளுரைத்தனர் அர்ஜென்டினா வீரர்கள். ஆனால் முதல் போட்டியிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தரவரிசையில் பின்தங்கி இருக்கும் சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது மெஸ்ஸியின் அர்ஜென்டினா.

இனி அவ்வளவுதான் என கருதப்பட்ட நிலையில் தான் வெறித்தனமாக ஆடியது அர்ஜென்டினா. மெஸ்ஸியும் இந்த உலகக்கோப்பையில் ருத்திரதாண்டவம் ஆடினார். குரூப் பிரிவில் முதல் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. முழுக்க முழுக்க மெஸ்ஸியை மையப்படுத்தி திட்டம் வகுத்த அர்ஜென்டினா தாக்குதலை மெஸ்ஸியே வழிநடத்தினார்.

இதுவரை உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் மெஸ்ஸி கோலே அடித்திடாத நிலையில், இந்த கால்பந்து தொடரின் அனைத்து நாக் அவுட் போட்டிகளிலும் கோல் அடித்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். அதோடு சக வீரர்களுக்கு அவர் கோல் அடிக்க கொடுத்த அசிஸ்ட் எல்லாம் வேறு ரகம். இந்த உலகக்கோப்பையில் மட்டும் 5 ஆட்டநாயகன் விருதுபெற்று வேறு பரிமாணத்தில் மெஸ்ஸி ஆடிக்கொண்டிருந்தார்.

இந்த தொடரில் மட்டும் தனது 35-வது வயதில் சுமார் 700 நிமிடங்களுக்கு மேல் களத்தில் இருந்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். இளம்வீரர்கள் கூட மெஸ்ஸியின் இந்த சாதனைக்கு அருகில் வரமுடியவில்லை. இப்படி அனைத்து விதத்திலும் முன்னிலையில் நின்று அர்ஜென்டினா ரசிகர்களின் 36 வருட ஏக்கத்தை தீர்த்துவைத்துள்ளார் இந்த மந்திரக்காரன்.

அதனால்தான் மயிரிழையில் தங்க ஷூ விருது இளம்வீரர் எம்பாப்பேயிடம் சென்றாலும் உலககோப்பையின் நாயகனுக்கு வழங்கப்படும் விருதான தங்க பந்து விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் மெஸ்ஸி வென்றிருந்தார். இதன்மூலம் இரண்டு முறை தங்க பந்து விருது வென்ற வீரர் என்ற யாரும் படைக்காத சாதனை மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் கால்பந்தில் யாரும் எட்டமுடியாத உயரத்துக்கு சென்றுள்ள மெஸ்ஸி அதன் கடவுளாகவே மாறியுள்ளார். இந்த வெற்றிக்கு அணியின் பங்களிப்பை யாராலும் மறுத்துவிடமுடியாது. மூத்த வீரர் டி மரியா முதல் இளம்வீரர் ஜூலியன் ஆல்வாரெஸ் வரை மெஸ்ஸிக்காகவே இந்த கால்பந்தில் தங்கள் வேர்வையை சிந்தினர். தங்கள் தலைவனுக்காக எதையும் செய்யதயாராக இருந்த அவர்களின் இந்த கூட்டு உழைப்புதான் மெஸ்ஸியை கால்பந்து கடவுளாகியுள்ளது.

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா கோபா அமெரிக்காவை வென்றது இல்லை. கால்பந்து கடவுள் பீலே ஐரோப்பாவில் ஆடியதில்லை. இன்னும் பல ஜாம்பவான்கள் எதாவது ஒரு வகையில் மெஸ்ஸிக்கு பின்னேதான் நிற்கிறார்கள். ஆனால் இந்த வெற்றியின்மூலம் அனைத்திற்கும் முன் மெஸ்ஸி நிற்கிறார். அவருக்கு எட்டாமல் இருந்த ஒரே கோப்பையான உலகக்கோப்பையும் அவர் கைகளில் தவழ்ந்துள்ளது. ஒருவகையில் இது உலககோப்பைக்குத்தான் பெருமை. இந்த உலகக்கோப்பையில் மெஸ்ஸி தோல்வியடைந்திருந்தால் மெஸ்ஸியின் கைகளுக்கு செல்லும் பெருமையை உலகக்கோப்பை இழந்திருக்கும்.
kalaignarseithigal



 


Post a Comment

0 Comments