Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 11


நிலையாமை-34  
நாம் செய்யும் அறங்கள் நிலையானது
செல்வங்கள் நிலையற்றவை

நிலையே இல்லா வாழ்க்கையை
நிலையென் றெண்ணுதல் அறிவின்மை!
அரங்கில் கூடிக் கலைவதுபோல்
செல்வம் சேரும் நீங்கிவிடும்!

நிலையே இல்லாச் செல்வத்தைப்
பெற்றவர் நிலைத்த புகழ்நிலைக்கும்
அறச்செயல் தன்னைச் செய்யவேண்டும்!

ஒருநாள் என்னும் சிறுபொழுதோ
உடலின் உயிரைப் பிரித்தறுக்கும்
வாளைப் போன்ற ஆயுதந்தான்!
நாவை அடைத்து விக்கல்கள்
சாவைத் தருமுன் அறச்செயலை
நாளும் செய்தல் சிறப்பாகும்!

நேற்று இருந்தவர் இன்றில்லை
நிலையைக் கொண்ட வாழ்க்கையில்
நாளை இருப்போர் யாரிங்கே?
அறியா மக்கள் அறியாமை
கோட்டை கட்டும் மனதினிலே!

கூட்டில் முட்டை தனித்திருக்க
பறந்து சென்ற பறவையைப்போல்
உடலில் உயிரின் உறவாகும்!
தூங்கும் நிலையே சாவாகும்!
தூங்கி விழித்தல் பிறப்பாகும்!
உடலில் அலையும் உயிருக்கோ
இடமே இல்லையோ நிரந்தரமாய்?

துறவு-35  
பேராசையை விட்டொழிந்தால் பெருநன்மை உண்டாகும்

ஆசை கொண்ட பொருள்மீது
ஆசையை விட்டால் அப்பொருளால்
என்றும் இங்கே துன்பமில்லை!
பொருள்கள் மீது வைத்துள்ள
ஆசையை நீக்கினால் இன்பந்தான்!
ஆசையைத் தூண்டும் ஐம்புலனை
அடக்கி வாழக் கற்றுக்கொள்!
பற்றற்ற வாழ்வே தவவாழ்வாம்!
பற்று படர்ந்தால் மயங்கிடுவோம்!

பிறப்பை வெறுக்கும் மாந்தருக்கு
மேனிச் சுமையே அதிகந்தான்!
ஆசைச் சுமைகள் வேறேனோ?
செருக்கை ஒழிக்கும் நிலையெடுத்தால்
தேவரும் காணா விண்ணுலகைக்
காண்பார் அந்தச் சான்றோர்கள்!
காற்றுடன் செல்லும் சருகைப்போல்
ஆசையின் பின்னால் நாம்சென்றால்
துன்பம் நம்மைத் தழுவிடுமே!
ஆசையை விட்டவர் ஞானியாவார்!
மற்றவர் பிறவி வலைக்குள்ளே
சிக்கித் தவிக்கும் மனிதர்தான்!

ஆசையை விட்டால் இப்பிறவித்
துயரம் நீங்க வழியுண்டு!
இல்லை என்றால் அத்துயரம்
என்றும் தொடரும் தொடர்கதைதான்!

ஆசை யற்ற இறைவன்மேல்
ஆசை கொள்வ தென்பதுவோ
நமது ஆசையை விடுவதற்கே!
துறவற நிலையை அடைவதற்கே!

மெய்யுணர்தல்-36  
நிழலை உண்மையென்று நம்பாதே

பொய்யை மெய்யாய் நினைக்கின்ற
மயக்கம் விதைப்பது துன்பந்தான்!
மயக்கம் தெளிந்து உணர்ந்துவிட்டால்
துன்பம் விலகி இன்புறுவார்!

உண்மைப் பொருளை அறிந்தவர்க்கு
விண்ணகம் அருகில் இருக்கிறது!
புலன்களை அடக்கி வாழ்ந்தாலும்
மெய்யுணர் வற்றோர் வீணர்தான்!

பொருளின் தன்மை எதுவெனினும்
உண்மை அறிதல் அறிவுடைமை!

மெய்ய்ப்பொருள் உணரக் கற்றவர்கள்
பிறவா நிலைக்கே செயல்படுவார்!
மெய்ப்பொருள் தன்னை உணர்ந்தவர்க்கு
மீண்டும் பிறவி இருக்காது!

பிறவித் துன்பம் அடைவதற்குக் 
காரணம் இங்கே அறியாமை!
அதனை நீக்கும் செம்பொருளை
உணர்ந்து தெரிவது மெய்ப்பொருளாம்!
உணர்ந்து திளைக்கும் சான்றோரை
துன்பம் என்றும் துளைக்காது!

ஆசை கோபம் அறியாமை 
நீக்கி வாழ்ந்தால் இன்னல்கள்
என்றும் நம்மைத் தீண்டாது! 
(தொடரும்)




 


Post a Comment

0 Comments