திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 16

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 16


இடன்அறிதல் ---50
இடமறிந்து சவாலைச் சந்திக்கவேண்டும்

பகைப்புலத்தை வெல்கின்ற வாய்ப்புவரும் மட்டும்
செயற்களத்தில் இறங்குவது நல்லதல்ல இங்கே!
பகவரையும் எளிதாக எண்ணுவதும் தவறு!

மனவலிமை உள்ளவர்க்கு பாதுகாப்பும் இங்கே
துணையாக அமைந்துவிட்டால் பலநன்மை சேரும்!

சந்திக்கும் களந்தன்னைத் தேர்ந்தெடுத்துத் தன்னைப்
பாதுகாத்து மோதினால்தான் வலிமையற்ற மனிதனும்
வெற்றிவாகை சூடுவான் தன்திறமை காட்டி!

தக்கதொரு இடமறிந்து தாக்குகின்ற போது
வெல்லுகின்ற பகைப்புலமும் செயலிழந்து போகும்!
தண்ணீரில் பிறஉயிரை முதலைதான் கொல்லும்!
தரைமீது முதலையைப் பிறஉயிர்கள் கொல்லும்!

தரைமீது ஓடுகின்ற பிரமாண்டத் தேரோ
கடல்மீது அரையடியும் ஓடுவது கடினம்!
கடலிலே மிதக்கின்ற கப்பல்கள் எல்லாம்
தரைமீது ஓடத்தான் தத்தளிக்கும் பாராய்!

இடமறிந்து செய்கின்ற செயல்களுக்கு எல்லாம்
அஞ்சாமை துணைபோதும் வேறுதுணை வேண்டாம்!
சிறுபடைகள் கொண்டவனும் இடமறிந்து தொடுத்தால்
பெரும்படைகள் கொண்டவனும் வெல்வதுவோ கடினம்!

பாதுகாப்பின் அம்சங்கள் இல்லாத போதும்
பகைவரிடம் சென்றேதான் முறியடித்தல் கடினம்!
பாகனையும் பகைவனையும் பந்தாடும் யானை
சேற்றினிலே சிக்கிவிட்டால் நரிகூடக் கொல்லும்!

தெரிந்து தெளிதல்--51
நல்லவரிடம் பொறுப்பளிக்க வேண்டும்

தனிமனித நல்லொழுக்கம் கொண்டவரைத் தேர்ந்தெடுத்துப்
பணிசெய்ய அமர்த்துவதே எப்பொழுதும் நன்றாகும்!
நற்குடியில் பிறந்தவரை, பழிச்செயலை வெறுப்போரை
நம்பித்தான் பொறுப்புகளை ஒப்படைத்தல் நல்லதாகும்!

அறிவார்ந்த நூல்களைக் கற்றவரே ஆனாலும்
அறியாமை இல்லாமல் இருப்பதோ அரிதாகும்!
குணங்களை ஆராய்ந்து குற்றநிலை ஆராய்ந்து
எத்தன்மை அதிகமோ அதைச்சார்ந்தோன் எனக்கருது!

பண்பகமா? இழிவகமா? என்றறிய உரைகல்லாய்
இருப்பதுவோ அவன்செய்யும் செயலன்றி வேறில்லை!
சுற்றத்தை ஒட்டித்தான் வாழாத மாந்தரையோ
நம்பவேண்டாம்! பழிபாவம் செய்வதற்கும் அஞ்சமாட்டார்!

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரையோ நம்பிவிட்டால்
பரம்பரையே துன்பத்தில் துடிக்கின்ற நிலைவருமே!
எப்படிப் பட்டவர்கள்? ஆராய்ந்து நம்பவேண்டும்!
இல்லையேல் தொல்லைகள் படையெடுத்துத் தேடிவரும்!

கண்டதும் நம்புவது! நம்பியபின் சந்தேகம்!
இரண்டுமே நீங்காத துன்பத்தின் வித்தாகும்!

தெரிந்து வினையாடல்--52
பணிக்களத்தில் திறனறிந்து பணிகளைக் கொடுக்கவேண்டும்

நன்மையைத் தீமையை நன்றாக ஆராய்ந்து
நன்மையை நாடுவோரை செயல்வீரர் எனச்சொல்வார்!
பொருள்வரவைப் பெருக்கித்தான் அதன்வளத்தை உயர்த்தித்தான்
துன்பத்தை நீக்குவோனை செயல்புரியத் தேர்ந்தெடுப்பார்!

அன்புடன் அறிவாற்றல் தெளிவுடன் ஆசையின்றி
வாழ்கின்ற பண்புகளைக் கொண்டவனை நம்புங்கள்!
எப்படித் தானிங்கே தேர்ந்தெடுத்த போதிலுமே
செயல்திறனால் வேறுபடும் மாந்தர்கள் பலருண்டு!

செயல்படும் ஆற்றலுள்ள மாந்தரை விட்டுவிட்டு
மற்றவரைச் செயல்புரிய ஏவுதலைத் தவிர்க்கவேண்டும்!
செயல்புரிவோர் செயல்தன்மை ஆராய்ந்து தெளிந்தேதான்
செயல்செய்யும் காலத்தைப் பொருத்தித்தான் செய்யவேண்டும்!

இச்செயலை இவனிங்கே முடித்திடுவான் என்றாய்ந்து
அச்செயலை அவனிடமே ஒப்படைத்தல் அறிவுடைமை!
செயலுக்குத் தகுதியுள்ளோன் என்றறிந்த பிறகிங்கே
அதைச்செய்ய அப்பொறுப்பை ஒப்படைத்தல் விவேகந்தான்!

கடமையே மூச்சாக வாழ்பவனைத் தவறாக
நினைப்போரை விட்டுத்தான் செல்வங்கள் நீங்கிவிடும்!
உழைப்பவர்கள் மகிழ்ந்திருந்தால் நாடெல்லாம் வளம்பெருகும்!
அவர்களது நலங்காக்க அக்கறையை ஏற்கவேண்டும்!
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post