முதல்முறை!.. கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை!

முதல்முறை!.. கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை!


நவீன காலத்திற்கு ஏற்ப பல நடைமுறைகள் பழக்க வழக்கங்கள் மாறுதலுக்கு உள்ளாவதை போலவே, கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் ரோபோ யானை பக்தர்களுக்கு இனி ஆசி வழங்கப்போகிறது. கோயில் சேவை பணிகளில் ரோபோ யானை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது சிறப்பம்சம்.

தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் உள்ள கோயில்களில் யானைகள் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. கோயில் உற்சவங்களில் யானைகள் முக்கிய வாகனமாக இருகின்றன. அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு யானை ஆசி வழங்கும் நடைமுறையும் வழக்கமாக உள்ளன. குறிப்பாக கேரளாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அதைக் கொண்டு திருவிழாக்கள் பிரத்தியேகமாக நடைபெறும்.

இது ஒரு புறம் இருந்தாலும், கோயில் வளர்க்கப்படும் யானைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றன, அவற்றுக்கு முறையான பராமரிப்பு வழங்கப்படுவதில்லை, அவை பல வதைகளுக்கு ஆளாவதாக விலங்கு நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சிக்கலுக்கு அறிவியல்பூர்வமாக தீர்வு காணும் வகையில், கேரளாவில் உள்ள ஒரு கோயிலில் ரோபோ யானை இனி சேவை செய்ய உள்ளது. அம்மாநிலம் திருச்சூரில் உள்ள இரிஞ்சிடப்பள்ளி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு இந்த யானையை பெட்டா(PETA) அமைப்பு தானமாக வழங்குகிறது.

அச்சு அசல் நிஜ யானை போலவே, துதிக்கை, காது, தந்தம் ஆகியவை இந்த ரோபோ யானைக்கு உள்ளது. ஸ்விட்ச் ஆன் செய்தால், இது தனது துதிக்கை மூலமாக நீரை உமிழ்கிறது. 10 அடி உயரமும் 800 கிலோ எடையுள்ள இந்த யானையின் மேல் 4 பேர் வரை அமரலாம் என்கின்றனர்.

எனவே, கோயிலில் சாமி ஊர்வலத்திற்கும் இந்த யானையை பயன்படுத்திக் கொள்ளலாமாம். இந்த யானைக்கு 'இரிஞ்சிடப்பள்ளி ராமன்' என பெயர் வைத்துள்ளதாக கோயிலின் தலைமை நம்பூதிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இந்த யானை வரும் பிப்ரவரி 26ஆம் தேதி அன்று முறைப்படி கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

news18




 



Post a Comment

Previous Post Next Post