பீகார் : சோதனை நடத்த வந்த சிறை அதிகாரிகள்.. பயத்தில் செல்போனை கடித்து தின்ற கைதிக்கு நேர்ந்த சோகம்..

பீகார் : சோதனை நடத்த வந்த சிறை அதிகாரிகள்.. பயத்தில் செல்போனை கடித்து தின்ற கைதிக்கு நேர்ந்த சோகம்..


பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்சை சேர்ந்தவர் குவாஷிகர் அலி. இவர் கடந்த 2020ம் ஆண்டு போதை மருந்து தடுப்புப் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 3 வருடங்களாக கோபால்கஞ்ச் மாவட்ட சிறையில் இருந்து வருகிறார். அந்த சிறையில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தி வருவதாக நீண்ட நாள் குற்றச்சாட்டு உள்ளது.

போலிஸாரும் அடிக்கடி சிறைச்சாலையில் சோதனை செய்து செல்போன் மற்றும் போதை பொருள்களை பறிமுதல் செய்து வந்துள்ளனர். மேலும், சோதனையில் சிக்கும் கைதிகளுக்கு கடுமையான தண்டனையும் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அந்த சிறையில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாடு குறையாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் போலிஸார் அந்த சிறையில் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது குவாஷிகர் அலியிடம் செல்போன் ஒன்று இருந்துள்ளது. செல்போனை போலிஸார் பறிமுதல் செய்தால் தனக்கு தண்டனை வழங்கப்படும் என பயந்த குவாஷிகர் அலி தன்னிடம் இருந்த செல்போனை கடித்து அதை அப்படியே விழுங்கியுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் குவாஷிகர் அலிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அலறித்துடித்த அவரை சிறை காவலர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து சோதனை நடத்தியதில் அவரின் வயிற்றில் செல்போன் உதிரி பாகங்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்னர் குவாஷிகர் அலிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளதாகவும், விரைவில் அவரின் உடல்நலன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post