Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-150


குகைக்குள் சென்ற யோகியார்,  தனது தேடலை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது செரோக்கியும், ரெங்க்மாவும் அந்த இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் யோகியாருக்கு ஆகாரம் எடுத்து வந்திருந்தனர். யோகியார் வசதியாக அமர்ந்து கொள்வதற்காகவும், உறங்கிக் கொள்வதற்காகவும் விரிப்பினை சரிசெய்துவிட்டு, அவரின் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டு, அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர்.

விரிப்பில் அமர்ந்தபடி ஆகாரத்தை அவர் உண்ணத் தயாரானபோது, அவரோடு கூடவே வந்த மந்திகள் இரண்டும் அவருடன் இணைந்து கொண்டன.

பிசைந்து வைக்கப்பட்ட புளித்துளசியுடன்,  நெருப்பில் சுடப்பட்ட மரவள்ளியை  அவரும், அவரது தோழர்களும்  உண்டதும், காலியான ஏனத்தை அருகிலிருந்த நீரூற்றில் கழுவி வைத்துவிட்டு, குகையின்  கற்சுவர்  இடுக்குகள் ஒவ்வொன்றையும், நிரற்படுத்தியவராகப்  பரீட்சித்து வரலானார். அவரது எண்ணமெல்லாம் அந்த நூலைத் தேடுவதில்  சங்கமமாகி இருந்தன.

எங்கு தேடியும் அந்த நூல் இதுவரை அவருக்குக் கிடைக்கவில்லை!

அப்படியானதோர் நூல் இந்தக் குகைக்குள் இருப்பதாக தனது தந்தைக்கு அறிய வந்த வழிமுறைகளில் எதாவது பிசகுகள் உள்ளதா? அல்லது, அந்த நூல் இந்தக் குகையில் இல்லாமல் வேறு எங்காவது குகைக்குள் இருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா? என்பன போன்ற கேள்விகள் அவரிடத்தில் தோன்ற ஆரம்பித்தன. 

இரு பக்கக் கற்சுவர்களையும் துருவித் துருவிப் பார்த்த அவர், குகை மேலும் உட்செல்வதைக் கண்டார்.

ஆனால் உள்ளே செல்ல முடியாதவாறு, பெரிய கற்கள்  கொண்டு தடைபோடப் பட்டிருப்பது தெரிந்தது. தடைக்கற்களுக்கு மேற்புறமாக அவர் எட்டிப் பார்த்தபோது, குகை நீண்டு செல்வதையும், தடைகற்களுக்கு  மேலாக ஒருவர் இழுகிச் செல்லக் கூடியதான இடைவெளி இருந்ததையும் அவர் கண்ட அவர்,  முதலில் தனது தோழர்களை இடைவெளியினூடாக    அனுப்பினார். வயது முதிர்ந்தவராக இருந்தபோதிலும், அவரது மனோதைரியம், தடையையும் தாண்டி, இடைவெளியினூடாக அவரையும் அப்புறம் செல்ல வைத்தது!

வெளியிலிருந்து வந்த வெளிச்சம்  இடைவெளியினூடாக  உட்சென்று கொண்டிருந்ததால், ஓரளவுக்கு அவரால் சந்துபொந்துகளைப் பார்க்க முடிந்தது. 

அங்கு சிலந்தி வலைகளும், பறவைகளின்  எச்சங்களும் நிறைந்து காணப்பட்டதோடு, ஆங்காங்கே வவ்வால்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

காடுமேடுகளில்  மிருகங்கள், பறவைக்களுடன் பழக்கப்பட்டிருந்த அவருக்கு இதுவொன்றும் பெரிய தொல்லையாகத் தெரியவில்லை.

கல்லிடுக்குகளுக்குள்  எங்காவது நூல் இருக்கின்ற சாத்தியக் கூறுகள் தென்படுகின்றதா என்று ஆய்ந்து கொண்டவராக தோழர்கள் முன் செல்ல அவர் பின்தொடர்ந்து, முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்.
(தொடரும்)



 



Post a Comment

0 Comments