திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 17

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 17


சுற்றந்தழால்---53
உலகமே கைவிட்டாலும் சுற்றத்தார் கைவிடமாட்டார்

இருப்பதை எல்லாம் இழந்தே தவித்தாலும்
பழம்பெரும் தொடர்பைக் கூறுவார் சுற்றத்தார்!
அன்பைப் பொழியும் சுற்றம் அமைந்துவிட்டால்
அதுவே செல்வம் வளரும் நிலைதருமே!

சுற்றத் தாருடன் சேராத வாழ்க்கையோ
கரையிலா குளத்தில் நீர்போல் பயனில்லை!
சுற்றத் தாருடன் சூழ்ந்தே இருப்பதுவோ
குன்றாச் செல்வம் பெற்றதன் பயனாகும்!

ஈகையும் இன்சொல்லும் சுற்றத்தார் போற்றிடவே
பேணும் நற்பண்பால் சுற்றம் சூழ்ந்திருக்கும்!
சினத்தைத் தவிர்த்தும் கொடையில் சிறந்துமிங்கே
வாழ்பவனைப் போலிங்கே சுற்றமுள்ளோன் யாருமில்லை!

இருக்கும் உணவைப் பகிர்ந்துண்ணும் காகம்போல்
செல்வந்தர் இருந்தால் அவர்செல்வம் பெருகிவரும்!
சமநிலைப் பார்வையில் அனைவரையும் பார்க்காமல்
குணங்களுக் கேற்பப் பழகிடும் மனங்கொண்டால்
சுற்றம் விலகாமல் சூழ்ந்தேதான் வாழ்ந்திருப்பார்!

காரணத்தைச் சொல்லிப் பிரிந்துசென்ற உறவுகளோ
காரணம் நீங்கியதும் மீண்டுமிங்கே சேர்ந்திடுவார்!
மீண்டும் திரும்பிவந்த உறவுகளை அரவணைத்தே
உறவிலே இணைத்துக் காப்பதுதான் நற்பண்பாம்!

பொச்சாவாமை---54
மறதி கொண்டோரை மதிக்கமாட்டார்

மகிழ்ச்சியில் திளைத்துக் கடமையை மறப்பதோ
கடுஞ்சினம் காட்டிலும் தீமையைத் தந்துவிடும்!
அறிவைக் கெடுக்கும் வறுமையைப் போலவே
மறதியோ ஒருவரின் புகழைக் கெடுத்துவிடும்!

மறதிநிலை கொண்டவர்க்குப் புகழில்லை உலகத்தில்!
கற்றுணர்ந்த நூலோர்க்கும் முடிவான கருத்திதுவே!
அச்சத்தைக் கொண்டவர்க்கோ பாதுகாப்பால் பயனில்லை!
மறதியை உடையவர்க்கோ செல்வத்தால் பயனில்லை!

துன்பங்கள் வரும்முன்னே காப்பாற்ற மறந்தவனோ
வந்தபின் பிழையெண்ணி வாழ்வினிலே வருந்திடுவான்!
மறவாமை வாழ்வினிலே துணையாக அமைந்துவிட்டால்
மனிதருக்கு நன்மையென்று சொல்வதற்கு வேறுண்டோ?

மறவாமை கொண்டேதான் செயல்புரியும் ஒருவருக்கு
முடியாத செயலென்று உலகத்தில் இல்லையே!
உயர்ந்தோர் புகழ்ந்ததைப் பின்பற்றி வாழவேண்டும்!
மறந்தவர்க்கோ ஏழு பிறவியிலும் பயனில்லை!

மகிழ்ச்சியில் திளைத்தேதான் கடமையை மறப்பவர்கள்
மறதியினால் அழிந்தவரை எண்ணித்தான் பார்க்கவேண்டும்!
எண்ணியதைச் செய்வதற்குச் சோர்வின்றி முயன்றிட்டால்
எண்ணியது கைகூடும்! இலக்குகளை அடைந்திடலாம்!

செங்கோன்மை -- 55
செங்கோல் உயர்ந்தால் நாடும் உயரும்

வேண்டியவர் வேண்டாதோர் என்றேதான் பார்க்காமல்
நடுநிலைமை கொண்டேதான் பழகுவதே நீதியாகும்!
தேன்மழையை நோக்கித்தான் உயிரினங்கள் வாழுமிங்கே!
நல்லாட்சி நோக்கித்தான் குடிமக்கள் வாழ்கின்றார்!

அறவோரின் நூல்களுக்கும் அறப்பணிகள் நடப்பதற்கும்
துணைநின்று போற்றுவது நல்லரசின் கடமையாகும்!
அன்புடனே மக்களைத்தான் அரவணைக்கும் நல்லாட்சி
பண்புகளைப் பின்பற்றி நாடிங்கே நடைபோடும்!

நீதிநெறி தவறாமல் ஆள்கின்ற நாட்டினிலே
பருவமழை பொய்க்காது! விளைச்சலுக்கும் பஞ்சமில்லை!
நல்லரசின் வெற்றிக்கு அரக்கமன ஆயுதமா?
நெறிமனத்துச் செங்கோலா? செங்கோல்தான்! உணர்ந்திடுவாய்!

மக்களைக் காப்பவன்தான் ஆள்பவனாம்! ஆள்பவனைக்
காப்பதோ அறவழியை மறவாத நீதிநெறியாம்!

நீதிநாடி வருவோரைப் பார்க்காத ஆட்சியாளன்,
ஆராய்ந்து பார்க்காமல் நீதிகளை வழங்குபவன்
பகைவர்கள் இன்றியே தானாக அழிந்திடுவான்!

கண்ணிமையாய் மக்களுக்குப் பாதுகப்பாய் விளங்குவதும்
நடுநிலை போற்றித்தான் தண்டனை வழங்குவதும்
பழியன்று! பாவமன்று! நீதிகாக்கும்கடமையாகும்!

கொடியவர்க்குத் தண்டனை கொடுப்பதெல்லாம், பயிர்காக்க
களைகளை நீக்குகின்ற கடமையைப் போன்றதாகும்!
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post