திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 19

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 19


ஒற்றாடல் -- 59
உளவின் வலிமை அரசின் வலிமை!

ஒற்றர்கள், நீதிநூல்கள் இவையிரண்டைக் கண்ணிரண்டாய்
நேர்மையான ஆட்சியாளர் போற்றித்தான் காக்கவேண்டும்!

எல்லோர்க்கும் எங்கெங்கு என்னென்னே நடக்கிறது
என்றெல்லாம் ஒற்றர்கள் மூலமாக அறிவதைத்தான்
நல்லாட்சி  புரிபவர்கள் கடமையாகச் செய்திடுவார்!

ஒற்றர்கள் மூலமாக நாட்டின் நடப்புகளை
உணராத ஆட்சியாளர் வெற்றிபெற வாய்ப்பில்லை!
வேண்டியவர் வேண்டாதார் பாகுபாடு இல்லாமல்
பகுத்தறிந்து சொல்பவரே நேர்மையான ஒற்றராவார்!

வேடமிட்டுச் சென்றாலும் சந்தேகம் தோன்றாமல்
சிக்கினாலும் அஞ்சாமல் சந்திப்போன் ஒற்றனாவான்!

புகமுடியா இடந்தன்னில் துறவியைப்போல் வேடமிட்டே
புகுந்தேதான் துன்பத்தை எதிர்கொண்டு தளராமல்
கடமையைச் செய்பவனே கலங்காத ஒற்றனாவான்!

ஒருவருக் கொருவர் அறியாமல் மூவரை
அனுப்பித் தரவழைக்கும் செய்தியுடன் ஒப்பிட்டே
மூவரது செய்திகளும் ஒத்திருந்தால் நம்பவேண்டும்!

பிறரிங்கே அறியாத வண்னம் ஒற்றருக்குச்
சிறப்புகள் செய்யவேண்டும்! இல்லையென்றால் இரகசியத்தை
வெளிப்படுத்திச் சொல்லிய நிலைபோல் ஆகிவிடும்!

ஊக்கம் உடைமை-- 60
சவால்களைச் சமாளிக்க ஊக்கம் அவசியம்

உடையவர் என்றாலே ஊக்கத்தைக் கொண்டவர்தான்!
ஊக்கமற்றோர் எவருமே உடையவர் ஆகமாட்டார்!
ஊக்கமே நிலையான செல்வம்! மற்றவை
நிலையற்ற செல்வமாகும்! அழிந்து மறைந்துவிடும்!

செல்வத்தை இழக்கின்ற நிலையிங்கே வந்தாலும்
ஊக்கத்தைக் கொண்டவர்கள் துளிகூட கலங்கமாட்டார்!
ஊக்கமென்னும் பண்புடைய உள்ளத்தை நாடித்தான்
செல்வங்கள் தேடிவந்தே எந்நாளும் உறவாடும்!

தண்ணீரின் உயரந்தான் மலர்த்தண்டின் நீளமாகும்!
ஊக்கத்தின் அளவேதான் மாந்தரின் உயர்வாகும்!
தன்னிலையே தாழ்ந்தாலும் உள்ளத்தில் கூடுகட்டும்
எண்ணங்கள் என்றென்றும் உயர்ந்தவையாய் இருக்கவேண்டும்!

உடல்முழுதும் அம்புகளா? யானையோ தளர்வதில்லை!
ஊக்கத்தைக் கொண்டவரும் நிலைதாழ்ந்தும் தளரமாட்டார்!
ஊக்கமற்ற மாந்தர்கள் கொடைவள்ளல் என்றதொரு
மதிப்பினை இவ்வுலகில் அடைவதோ அரிதாகும்!

மலைக்கவைக்கும் தோற்றத்துடன் யானை இருந்தாலும்
ஊக்கமுடன் தாக்குகின்ற புலிபாய்ந்தால் அஞ்சிநிற்கும்!
ஊக்கந்தான் உயிரோட்டம்! ஊக்கமற்ற மாந்தர்கள்
மனிதஉரு கொண்டிருக்கும் மரங்கள்தான் வேறில்லை!

மடி இன்மை---61
சோம்பலின்றி வாழ்ந்தால் குடும்பமே முன்னேறும்

சோம்பல் என்பது மாசாகும்
குடும்ப விளக்கை அணைத்துவிடும்!
சோம்பித் திரிவதை விட்டுவிட்டு
முயன்றால் குடும்பம் வளமாகும்!

சோம்பல் தன்மைக் கொண்டவனின்
கண்முன் குடும்பம் அழிந்துவிடும்!
சோம்பல் பெருக்கும் குற்றத்தால்
குடும்பப் பெருமை சீரழியும்!

சோம்பல், மறதி, தூக்கமுடன்
காலம் தாழ்த்தல் இவைநான்கும்
கெடுவார் ஏறும் மரக்கலங்கள்!

செல்வச் சீமான் நட்பெனினும்
சோம்பல் உடையோர் பயனடையார்!
மந்தமதி கொண்ட சோம்பேறி
இகழப் பட்டே தலைகுனிவார்!

சோம்பல் நீக்கி உழைப்பவனால்
குடும்பச் சிறுமை நீங்கிவிடும்!
சோம்பல் இன்றி ஆள்பவனே
உலகைச் சிறப்பாய் ஆள்பவனாம்!
(தொடரும்)






 



Post a Comment

Previous Post Next Post