திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 20

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 20


ஆள்வினை உடைமை--62
விடாமுயற்சியின் எல்லையே வெற்றியாகும்!

முயன்றால் முடியும் அனைத்துமிங்கே!
செயலைக் குறையுடன் விட்டுவிட்டால்
உலகம் உன்னை விட்டுவிடும்!

பிறருக் குதவும் மனமெல்லாம்
முயற்சிப் பண்பில் தெரிகிறது!

முயற்சி யற்றோன் பிறருக்கு
உதவி செய்வேன் என்றுரைத்தல்
கோழை வாளைச் சுற்றுதல்போல்
எந்தப் பயனும் தருவதில்லை!

தன்னலம் இன்றிச் செயல்முடிப்போன்
சுற்றத்தைக் காக்கும் தூணாவான்!
முயற்சி வளர்க்கும் செல்வத்தை!
தளர்ச்சி விதைக்கும் வறுமையை!

சோம்பல் உள்ளம் இருள்மயந்தான்!
முயற்சி மனமோ ஒளிமயந்தான்!
உறுப்புக் குறையோ பழியல்ல!
முயற்சிக் குறையோ பழியாகும்!

விதியே உதவ மறுத்தாலும்
உழைப்பின் முயற்சி வெற்றிதரும்!

இடுக்கண் அழியாமை--63
துன்பத்தில் துவளாதே! இன்பத்தில் துள்ளாதே!

துன்பம் வந்தால் சிரித்துவிடு!
தன்னால் துன்பம் மறைந்துவிடும்!

திரண்டு உறுமும் வெள்ளம்போல்
துன்பம் வந்தால் சந்திக்கும்
நிலையை எடுத்தால் வடிந்துவிடும்!

துன்பத்தின் தோளிலே துன்பத்தைச்
சுமத்தித் துடிக்க வைத்துவிட்டல்
வெற்றிக் கனிகள் பறித்திடலாம்!

வண்டிச் சுமையை முனைப்புடனே
இழுக்கும் எருதைப் போலத்தான்
மனந்தள ராமல் உழைத்திட்டால்
துன்பம் இங்கே துன்புறுமே!

தொடர்ந்து துன்பம் வந்தாலும்
கலக்கம் இன்றிச் சந்தித்தால்
துன்பம் விலகி மறைந்துவிடும்!

இருந்த வளத்தைக் காக்காமல்
இழந்த போது வாடுவதோ?
உடலை வருத்தும் துன்பத்தை
சான்றோர் எண்ணிக் கலங்கமாட்டார்!

இன்பம் கண்டு துள்ளாதோன்
துன்பம் கண்டு துவள்வதில்லை!

துன்பந் தன்னை இன்பமாக
எண்ணி வாழும் மாந்தரோ
பகைவரும் விரும்பும் சிறப்படைவார்!

அமைச்சு -- 64
அமைச்சரின் கடமைப் பண்புகள்

கருவி, காலம், செயல்முறையை
எண்ணிச் செய்பவர் அமைச்சராவார்!

நீதி, முயற்சி அய்ந்தையும்
கண்போல் நினைப்பவர் தானமைச்சர்!

பகையின் துணையைப் பிரிப்பவரும்
திருந்தி திரும்பி வருவோரை
ஏற்கும் குணத்தைக் கொண்டவரும்
நாடு போற்றும் நல்லமைச்சர்!

தொழிலின் திறனை அறிந்தேதான்
செயல்படும் அமைச்சரே துணையாவார்!

இயற்கை அறிவும் நூலறிவும்
கொண்டவர் நுட்பச் சூழ்ச்சிகளை
எளிதில் வென்றே தலைநிமிர்வார்!

தன்னால் புரியாது! சொன்னாலும்
கேட்க மறுத்திடுவார்! இவர்களையோ
துணிந்து மாற்றுவோன் அமைச்சராவார்!

கேடு செய்யும் ஓரமைச்சர்
உள்ளதைக் காட்டிலும் பகைவர்கள்
எழுபது கோடி நல்லவரே!

செயலின் திறமற்ற அமைச்சரிங்கே
அரைகுறை யாகச் செயல்படுவார்!
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post