பிரபஞ்சம்!

பிரபஞ்சம்!


நான் பார்த்த வெள்ளை ரோஜாவே
பூக்களில் அழகு
நீயும் தெரிந்து கொள்

நான் சுவைத்த நெல்லிக்கனியே
கனிகளில் ருசியானது
நீயும் புரிந்து கொள்

நான் போகும் பாதையே
சொர்க்கம் போகும் வழி
நீயும் அறிந்து கொள்

நான் பார்த்த அலகு நீண்ட கழுகே
பறவைகளில் அதிசயமானது
நீயும் பார்த்துக் கொள்

நான் பார்த்த கொரில்லாவே
மிருகங்களில் பிரமிப்பானது
நீயும் கண்டு கொள்

நான் ரசிக்கும் சங்கராபரணமே
இராகங்களில் இனிமையானது
நீயும் பாடிப்பழகு

நான் ஆடும் குச்சிப்புடியே
நடனங்களில் நளினமானது
நீயும் ஆடிப்பழகு 

நான் உடுத்தும் கறுப்பு ஆடையே
உடைகளில் உன்னதமானது
நீயும் பழகிக் கொள் 

நான் செய்யும் வேலையே
பணிகளில் புனிதமானது
நீயும் கற்றுக் கொள்

நான் உண்ணும் உணவே
உணவுகளில் உயர்ந்தது
நீயும் உண்ணப் பழகு

நான் வணங்கும் தெய்வமே
கடவுள்களில் சக்திமான்
நீயும் அவனையே வணங்கு 

ஒரு குறுகிய எல்லைக்குள்
நின்று கொண்டு
பிறரின் எல்லைகளை
வரையறுக்க நினைக்கும்
சில மனங்களின் செயல்
பரிதாபத்திற்குரியது

நான் வாழும்
அந்த வட்ட வடிவ கிணறே
மாபெரும் பிரபஞ்சம் என 
எண்ணிக்கிடக்கும் 
தவளையைப் போல...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...



 



Post a Comment

Previous Post Next Post