திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-78

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-78


குறள் 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

தம்பி.. நல்ல அறிவாளிங்க கூட நட்பு வச்சுக்கிட்டா, பிறை நிலவு வளர்வது மாதிரி வளர்ந்து முழுநிலவா மாறும். ஒண்ணுந் தெரியாத பயலுவொளோட வச்சுக்கிடுத நட்பு இருக்கே அது தேய் பிறை காலத்துல முழு நிலா கொஞ்சங் கொஞ்சமா தேஞ்சு மறைஞ்சு போயிரும். 

குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. 

நட்புங்கிறது சேக்காளியோடு சிரிச்சு வெளையாடுததுக்கு மட்டுமே கிடையாது டே. அந்தப் பயா எதாவது தப்பு தண்டா செஞ்சாமுன்னா, ஒடனே அவனை கண்டிச்சு நல்ல புத்தி சொல்லி திருத்துததுக்கும் தான்.. தெரிஞ்சுக்கடே. 

குறள் 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

தம்பி... ரெண்டு பேரு சேக்காளியா இருக்கணும்னா, ஏற்கனவே தெரிஞ்சிருக்கணும். பழகி இருக்கணும் ங்கிறதெல்லாம் தேவையில்லை. ரெண்டு பேரோட மனசும் ஒத்துப் போனாலே போதும் தம்பி.

குறள் 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

தம்பி.. சேக்காளி ஒருத்தன் கெட்ட வழில போறாம்னா, அவனுக்கு புத்திமதில்லாம் சொல்லி நல்ல வழிக்கு கொண்டு வரணும். அவனுக்கு கெட்டது நடக்கும் போது அவங்கூடவே இருந்து அதையும் சேந்து தாங்கிக்கணும். அது தான்டே உண்மையான நட்பு. 

குறள் 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

நட்போட சிறந்த இலக்கணம் எது தெரியுமாடே. எந்தவித மன வேறுபாடும் இல்லாம, சேக்காளியோட எப்பமும் சேந்து இருந்து அவனைத் தூக்கிப் பிடிக்கது தான் டே.
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post