Ticker

6/recent/ticker-posts

“நாயகன் மீண்டும் வர..!” 2 சிக்ஸர்.. 5000 ரன்கள் - மாஸ் காட்டிய தோனி


நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களம் கண்ட சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களும், டிவோன் கான்வே 47 ரன்களும் விளாசி சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.பின்னர் வந்த மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா சொற்ப ரன்களில் வெளியேறினர்.

கடைசி ஓவரில் களம் புகுந்த தோனி, இரண்டு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசிக் கட்டத்தில் அம்பத்தி ராயுடு சற்று அதிரடியாக ஆடியதால், சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்னும் 8 ரன்கள் எடுத்தால் 5000 ரன்களை கடந்து விடலாம் என்ற நிலையில், தோனி தான் சந்தித்த 3 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 12 ரன்கள் எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த வீரர் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தோனி 7வது இடத்தில் உள்ளார்.

பின்னர், சவாலான இலக்கை துரத்திய லக்னோ அணி பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடியது. அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்த போது, தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இதையடுத்து, சீரான இடைவெளியில் லக்னோ அணி விக்கெட்டை பறிகொடுத்தாலும், கடைசிக் கட்டத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் அயூஸ் படோனி சென்னை அணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், கடைசிக் கட்டத்தில் சென்னை வீரர்கள் நேர்த்தியாக பந்துவீசியதால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே சேர்த்தது-

இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, சென்னை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் மொயீன் அலி, 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம், ஆட்ட நாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.
news18


 



Post a Comment

0 Comments