சொல்வன்மை--65
சுருங்கச் சொல்தல் தனித்திறமை!
நாநயம் ஒன்றே தனித்திறமை!
சாதனை படைக்கும் தனிச்சிறப்பு!
நன்மை, தீமை சொல்லால்தான்!
பேச்சில் தவறைத் தவிர்த்திடுவோம்!
கேட்டோர் தம்மை வசப்படுத்திக்
கேட்கா தோரை ஏங்கவைக்கும்
சொல்லாற் றலுக்கோ நிகரில்லை!
சொல்லின் வன்மை அறம்பொருளாம்!
சொற்பொருள் அறிந்து பேசுங்கள்!
சொல்லும் சொல்லை மற்றவர்கள்
வெல்லாத வாறு பயன்படுத்து!
கேட்பவர்க் கேற்ப பேசவேண்டும்!
மற்றவர் பேச்சின் பொருளறிந்து
ஏற்கும் பக்குவம் பண்பாகும்!
சொல்லில் தெளிவு, சோர்வின்மை
துணிவும் கொண்ட மனிதனையோ
உலகில் வெல்வது கடினந்தான்!
நேர்த்தியாய் செய்தியை கோத்தேதான்
இனிதே பேசும் நாவரசன்
சொற்படி கேட்கும் இவ்வுலகம்!
சுருங்கச் சொல்லத் தெரியாதோர்
நீண்ட நேரம் பேசிடுவார்!
அதனால் எந்தப் பயனுமில்லை!
கேட்போ ருக்குப் புரியாமல்
பேசு பவர்கள் , மணமற்ற
கொத்து மலர்கள் போன்றவராம்!
வினைத்தூய்மை--66
செயல்களின் தூய்மை வாழ்க்கையின் நேர்மை!
வாழ்க்கையின் வளமே துணைத்தூய்மை!
நலத்தைச் சேர்க்கும் செயல்தூய்மை!
புகழை அறத்தைச் சேர்க்காத
செயல்கள் தம்மைச் செய்யாதே!
சிகரம் செல்ல முயல்பவர்கள்
இழிந்த செயலைத் தவிர்த்திடுவார்!
அறிவில் தெளிவைக் கொண்டவர்கள்
துன்பம் வந்தே துளைத்தாலும்
பழிக்கும் செயலைச் செய்வதில்லை!
வருந்தும் செயலைத் தவறாக
செய்த போதிலும் மீண்டுமதைச்
செய்யா திருப்பதே அறிவாகும்!
தாயோ பசியால் துடித்தாலும்
அதனைப் போக்கச் சான்றோர்கள்
பழிக்கும் செயலைச் செய்வதில்லை!
பழிகள் விதைக்கும் தொழில்செய்தே
வளமாய் வாழ்வது தாழ்வாகும்!
வறுமை புரட்டி எடுத்தாலும்
நேர்மையாய் வாழ்தல் உயர்வாகும்!
பிறரின் கதறலில் பெற்றசெல்வம்
நம்மை ஒருநாள் கதறவைக்கும்!
நல்வழிச் செல்வம் விலகினாலும்
நமக்கோ என்றும் நன்மைதரும்!
தீயவழிச் செல்வத்தைக் காப்பதுவும்
பச்சைமண் பானையில் நீரூற்றி
சேமிக்க முயல்வதும் ஒன்றாகும்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
வினைத்திட்பம்--67
செயலில் உறுதி--மனதில் துணிவு!
செயலின் வலிமை மனவலிமை
மற்றவை இதற்கு நிகரில்லை!
தடையத் தடுக்க முனைதலும்
வந்தால் கலக்கம் இல்லாமல்
சந்திப் பதுமே வினைத்திட்பம்!
செயலின் இரகசியம் காக்காமல்
இடையில் தெரிந்தால் துன்பந்தான்!
சொல்தல் யார்க்கும் எளிதாகும்
செய்து காட்டல் அரிதாகும்!
செயல்திறன் ஆற்றல் அளவாகும்!
சான்றோர் அவரைப் போற்றிடுவார்!
மனதில் உறுதி படைத்திருந்தால்
செயலை முடிப்பார் நினைத்தபடி!
தேரை இயக்கும் அச்சாணி
உருவில் என்றும் சிறியதுதான்!
உருவைக் கண்டு இகழாதே
செயலின் திறமையால் எடைபோடு!
காலந் தன்னைத் தாழ்த்தாமல்
மனதில் கலக்கம் இல்லாமல்
தளரா முயற்சி யோடிங்கே
செயலைச் செய்து முடிக்கவேண்டும்!
இன்னலின் பயனோ இனிமைதான்
துணிவுடன் செயலைச் செய்யுங்கள்!
மலைபோல் ஆற்றல் இருந்தாலும்
தொழிலில் உறுதி இல்லையெனில்
உயர்ந்தோர் போற்ற மாட்டார்கள்!
திருக்குறள் குழந்தைப் பாடல்
வினை செயல்வகை--68
செயலின் ஆற்றலே வெற்றியின் ஊற்றாகும்
செயலை முடிக்கத் துணிந்தபின்பும்
காலந் தாழ்த்தல் குற்றந்தான்!
காலந் தாழ்த்தி முடிக்கின்ற
செயலை மெதுவாய் முடித்திடலாம்!
உடனடி யாக முடிப்பதையோ
உடனே முடித்தால் பயன்தருமே!
முடியும் வரைக்கும் செயலாற்று!
முடியாத போது முடிப்பதற்கு
உத்திகள் எண்ணிச் செய்துவிடு!
இடையில் விட்ட செயலெனினும்
தீர்வைக் காணா பகையெனினும்
முழுதும் அணைக்கா நெருப்பைப்போல்
என்றும் துன்பம் விளைவிக்கும்!
செயலும் உரிய பொருள்களையும்
காலம் கருவி இடங்களையும்
ஆய்ந்தே செயலில் ஈடுபட்டால்
பறிப்போம் வெற்றிக் கனிகளைத்தான்!
எந்தச் செயலை எடுத்தாலும்
அந்தச் செயலில் அனுபவத்தைக்
கொண்டோர் கருத்தைக் கேட்டுக்கொள்!
ஒருசெயல் செய்யும் நிலைதன்னில்
யானையை வைத்து இன்னுமொரு
யானையைப் பிடிப்பது போலாகும்!
வலிமையில் விஞ்சும் வன்பகையை
நட்பாய் மாற்றுதல் விவேகந்தான்!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்