எனது மகள் ஒருவருக்கு வயது 3. அவருக்கு வலிப்பு நோய் உள்ளது. அவருக்கு எந்நேரமும் வாயிலிருந்து உமிழ் நீர் வடிந்து கொண்டே உள்ளது. மட்டுமன்றி தூக்கத்திலும் விழித்துக் கொண்டிருக்கும் போதும் சிறுநீர் கழிக்கின்றார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் தீர்வு கிடைப்பதாக இல்லை. இது பற்றிய ஆலோசனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
எம்.பி.எம்.அன்சார், போத்தலப்பிட்டி
உமிழ்நீர் என்பது எமது உடம்பிலுள்ள உமிழ்நீர் சுரப்பிகளினால் சுரக்கப்படுகின்ற ஒரு திரவப் பதார்த்தம் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயமாகும், இது நாம் உட்கொள்ளும் உணவுகளை மென்மையாக்கி விழுங்கக்கூடிய நிலைக்கு மாற்றுவதோடு நாவிலுள்ள சுவை நரம்புகள் பல்வேறுபட்ட சுவைகளை உணருவதற்கும் உதவுகின்றன. அத்துடன் தொடர்ச்சியாகச் சுரக்கப்படும் உமிழ்நீர் வாயை ஈரலிப்புத் தன்மை கொண்டதாக வைத்து துர்நாற்றத்தைத் தடுக்கின்றது. மேலும் உமிழ்நீர் கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி கொண்டது. இவை அனைத்துக்கும் மேலாக உமிழ்நீர் பற்களை பாதுகாப்பதோடு வாயினுள் ஏற்படக் கூடிய புண்களை குணப்படுத்துவதிலும் உதவுகின்றன.
இவ்வாறு பல வழிகளில் உதவக் கூடிய உமிழ்நீர் குறைவாக அல்லது அதிகமாகச் சுரப்பதனால் பல அசௌகரியங்களும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதிகளவு உமிழ்நீர் சுரப்பது அல்லது சாதாரண அளவில் சுரக்கப்படும் உமிழ்நீரை விழுங்குவதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் அதிக உமிழ் நீர் வாயிலிருந்து வெளியேறுவதை 'சாலை வடிதல்' எனப் பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்நிலை சிறு பிள்ளைகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் இந்நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் பல காரணங்களைச் சிந்திக்க வேண்டியுள்ளது. சிறு வயதிலிருந்தே இந்நிலையுடன் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற தொழிற்பாடுகள் காணப்படாவிடின் பிள்ளைகளின் உடல் நலமும் மனநலமும் வயதுக்கு ஏற்றாற்போல விருத்தியடையவில்லை என்பதையே குறிக்கும். இது Developmental Delay என்று கூறப்படுகின்றது.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற குறிகுணங்கள் தென்பட்டால் உடனடியாக சிறு பிள்ளை நோய்களுக் கான வைத்திய நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அத்துடன் ஒரு சில வலிப்பு நிலைகளிலும் அதிக உமிழ்நீர் சுரத்தல் ஏற்படுகின்றது. இது தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. சாலை வடிதல் என்பது ஒரு நோய் அறிகுறியே தவிர இது ஒரு நோய் அல்ல என்பதே முக்கியம்.
இதே போன்று சிறு பிள்ளைகள் தம்மை அறியாமலே படுக்கையிலும் விழித்திருக்கும் போதும் சிறுநீர் கழிப்பதென்பது வயதுடன் சேர்ந்த ஒரு விடயமாகும். ஆனால், இந்நிலை தொடர்ந்தும் இருக்குமேயானால் அதற்கான காரணங்களைத் தேடி தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதி கமாக நீர் பருகுதல், சில விட்டமின்களின் குறைபாடுகள், உணவு ஒவ்வாமை, நரம் புகளில் ஏற்படுகின்ற நோய்கள், மன அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ஆனால் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் உமிழ்நீர் உற்பத்தி, சிறுநீர் வெளியேற்றல் போன்றவைகளை கட்டுப்படுத்துவது நரம்புத் தொகுதியே ஆகும்.
எனவே நரம்புத் தொகுதியில் ஏற்படுகின்ற நோய்களினால் மேற்கூறியவை பாதிக்கப்படலாம். எனவே சரியான நோய் நிர்ணயமின்றி மாத்திரைகளைப் பாவித்தால் அவை வேறு பின்விளைவு களை உண்டு பண்ணலாம்.
இங்கே கேள்வி கேட்டிருப்பது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பதாகவே நினைக்கின்றேன்.
அதாவது Developmental delay கார ணமாகவே இந்நிலை ஏற்பட்டிருக் கலாம். எனவே வலிப்பு, சாலை வடிதல், இரவில் சிறுநீர் கழித்தல் போன்ற மூன்று நிலைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை செய்வதில் பிரயோசனமேற்படாது என நினைக்கின்றேன்.
இங்கு நரம்புக்கான சிகிச்சையளிப்ப தையே முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். இதற்காக யுனானி வைத்திய முறையில் பல சிகிச்சை முறைகள் உள்ளன. அத்துடன் உரிய விட்டமின்களைக் கொடுப்பதும் மிக முக்கியமானதாகும்.
சாலை வடிதலைப் பொறுத்தவரையில் சாப்பிடுதல், பேசுதல், சுவாசித்தல் போன்றவைகளில் பிரச்சினை ஏற்படுகின்றது. இதில் விசேடமாக சிறு பிள்ளைகளில் சுவாசித்தலுக்குத் தடங்கல் ஏற்படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளைத் தூங்க வைக்கும் போது நேராகத் தூங்க வைக்காமல் வலது அல்லது இடது புறமாகச் சாய்த்து தூங்க வைப்பதே நன்று. அத்துடன் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிள்ளைகளுக்கு இரவில் நீர் ஆகாரங்களைக் கொடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் சிரமம் பாராது அவர்களை இரவில் இரண்டு அல் லது மூன்று முறையாவது சிறுநீர் கழிப்பதற்காக எழுப்புவதன் மூலம் அவர்களை பயிற்றுவிக்கலாம். மேலும் சில விசேட Mattress இவர்களுக்கென உண்டு.
மேற்கூறிய பிரச்சினைகளுக்கு நவீன வைத்திய முறையை விடவும் யுனானி வைத்திய முறையில் சிறந்த சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்ற யுனானி வைத்" தியர்களை நாடி சிகிச்சை பெறுவதே முக்கியம். காரணம் சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது பல விடயங்களைப் பல கோணங்களிலிருந்து அணுகி பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால் ஆகும்.
மேற்குறிப்பிட்ட சிறுமியின் பிரச்சினை உட்பட நாட்பட்ட சிறு பிள்ளை நோய்கள் எதுவாக இருந்தாலும் கொழும்புப் பல்கலைக்கழக யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவப் பீடங்களில் சிறுபிள்ளை நோய்கள் சம்பந்தமாக விரிவுரை வழங்கும் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களை கலந்தாலோசிக்கும்படியே எனக்குச் சிபார்சு செய்ய முடியும்.
இறுதியாக பெற்றோர்களுக்கு ஒரு செய்தியாக உங்கள் குழந்தை பிறந்தவுடன் உங்களிடம் கையளித்திருக்கும் குழந்தை வளர்ச்சிப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளையும் வைத்தியர்களது ஆலோசனைகளையும் உங்கள் பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக தவறாது கடைப்பிடிக்குமாறு வேண்டுகிறேன்.
DR.NASEEM
Email;vettai007@yahoo.com
0 Comments