கலாஷேத்ரா: “தோழியின் அறையில் பதுங்கி இருந்த பேராசிரியர்” - செல்போனை ட்ராக் செய்து மடக்கிப்பிடித்த போலிஸ்!

கலாஷேத்ரா: “தோழியின் அறையில் பதுங்கி இருந்த பேராசிரியர்” - செல்போனை ட்ராக் செய்து மடக்கிப்பிடித்த போலிஸ்!


சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் புகாரை தொடர்ந்து அக்கல்லூரி நிர்வாகம் விசாரித்தது. ஆனால் இந்த குற்றசாட்டு உண்மையல்ல என்று கல்லூரி நிர்வாக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.

இதனால் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், “10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்” என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கலாஷே்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் அடையார் உதவி ஆணையர் நெல்சன் முன்னிலையில், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலிஸார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு கலாஷேத்ராவில் நடனம் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆசிரியர் ஹரி தனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் அளித்ததாக கூறி புகார் அளித்திருந்தார். தொடர்ந்து புகார்கள் குவிந்ததால் பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய முயன்றபோது, தலைமறைவாகிவிட்டார்.

இதனையடுத்து தனிப்படை அமைத்து பேராசிரியர் ஹரி பத்மனை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் ஹரிபத்மன் இன்று அதிகாலை சென்னை மாதவரம் பகுதியில் அவரது பெண் தோழி வீட்டில் வைத்து தனிப்படை போலிசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

நேற்று இரவு ஹரிபத்மன் சென்னை வருவதை தெரிந்து கொண்ட தனிப்படை போலிஸார் அவரது, செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர். முன்னதாக அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் செல்ஃபோன் எண்கள் கண்காணிக்கப்பட்டு, ஹரி பத்மன் தனது பெண் தோழியுடன் பேசியதை உறுதி செய்தனர். அந்த பெண் தோழியின் வீடு மாதவரம் பகுதியில் இருப்பதை கண்டு பிடித்த தனிப்படை போலிசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் ஹரி பத்மனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். பின்பு போலிஸார் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். எனினும் ஹரி பத்மன் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலிஸார் வீட்டில் சோதனை செய்த போது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் பதுங்கி இருந்த ஹரி பத்மனை கைது செய்தனர்.

ஹரி பத்மனிடம் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புகார் கூறியவர்கள் அனைவருடன் சகஜமாக மட்டுமே பழகியதாகவும், பாலியல் புகார் கூறிய பெண் தனது முன்னாள் மாணவி தான், அவருக்கு வேறு பிரச்சினை காரணமாக கல்வி நிலையத்தை விட்டு வெளியேறினார். அவர் கூறும் குற்றச்சாட்டு உணமையல்ல என தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹரி பத்மன் பல மணி நேரம் விசாரணைக்கு பின்னர், சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ சோதனைக்கு பின் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுப்பிரமணியம் வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து போலிஸ் பாதுகாப்புடன் ஹரி பத்மனை புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.

முன்னதாக இதன் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் அத்தனை கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post