
பர்மாவை அண்டியுள்ள இந்தியாவின் வட மேற்கில் அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம் ஆகிய சிறிய மாநிலங்களுக்கிடையிலுள்ள இன்னொரு சிறு மாநிலமே மணிப்பூர்!
மெய்தேயி, நாகர், குகி முதலான பழங்குடியின மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். குகி இனத்தவர் கிறிஸ்துவ மதத்தையும், மெய்தேயி இனத்தவர் இந்து மதத்தையும் பின்பற்றி வந்தாலும், அங்கு அவ்வப்போது சிறு பிணக்குகள் எற்பட்டுவந்தபோதிலும், பொதுவாக அங்குள்ள பழங்குடி மக்கள் அனைவரும் ஐக்கியமாகவே வாழ்ந்து வந்துள்ளனர்! 

1972ல் மேகாலயா, திரிபுரா ஆகியவற்றுடன் சேர்த்து மணிப்பூருக்கும் தனிமாநில உரிமை வழங்கப்பட்டது. தற்போது பைரன் சிங் தலைமையிலான பா ஜ.க. கூட்டணி ஆட்சி இங்கு நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின மக்களாக அறிவிக்க வேண்டுமெனப் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிவாரண முகாம்களில் மக்கள்

மெய்தேயிகளுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குகி பழங்குடி சமூகத்தினருக்கு எதிராக அண்மையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
கடந்த மே மாதம் 3ம் தேதியிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதன்போது மெய்தேயி மக்கள் குகி மக்களையும், குகி மக்கள் மெய்தேயி மக்களையும் குறிவைத்துத் தாக்கினர்.
மாதக்கணக்கில் நீடித்துவரும் இந்த வன்முறைகளில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், தேவாலயங்கள், கோவில்கள் என ஏராளமான சொத்துக்கள் எரிந்துள்ளன.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், மணிப்பூரில் இரு குகி பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிய செய்தி பெரிய அளவில் உலகெங்கும் அநுதாபத்தை ஏற்படுத்தியது!

மெய்தேயிகள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் ஒப்பீட்டளவில் குகிகளைக் காட்டிலும் வலுவானவர்கள்!
மணிபூரில் இரு குகி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ள நிலையிலான பிரச்சினை, குகிகள் அதிகமுள்ள அடுத்த மாநிலத்திற்கும் பரவிவியதாள், மெய்தேயிகள் கூட மிஸோரமிலிருந்து மணிப்பூருக்கு ஓடும் நிலை எற்பட்டலானதாக அறிய முடிகின்றது!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின், குகி சமூகத்தினர் பழங்குடியினர் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதனால் குகி சமூகத்தினரிடம் உள்ள நிலங்களை மெய்தேயி சமூகத்தினர் வாங்க முடியாத நிலையொன்று ஏற்பட்டது. இதுவும் மெய்தேயி சமூகத்துக்கும், குகி சமூகத்துக்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான அடிப்படை காரணங்களுள் ஒன்றாகாக் கொள்ளப்படுகின்றது. தெளிவாகச் சொல்வதாயின், நிலங்களை வாங்குவதற்கான உரிமைகள் குறித்தே தற்போது இருதரப்புக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
சுமார் 30 லட்சம் பேர் வாழும் மணிப்பூரில், பெரும்பான்மையினரான மெய்தேயினர் பள்ளத்தாக்கில் வசித்துவருகின்றனர். ஆனால் குகி சமூகத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலைப்பகுதி சார்ந்த நான்கு மாவட்டங்களில் குடியேறி வசித்து வருகின்றனர்.
இக்கலவரங்களின்போது, மெய்தேயி இஸ்லாமியர்களுக்கோ, நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கோ எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன!
ஆனால், மணிப்பூரில் குகி பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி, பாதையில் ஊர்வலமாக இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இஸ்லாமியர் கைது செய்யப்பட்டதாக, தான் வெளியிட்ட செய்திக்கு ஏ.என்.ஐ. மன்னிப்பு கேட்டுள்ளது!
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ANI, மணிப்பூர் நிர்வாண வீடியோ வழக்கில் முஹம்மது ஹிலிம் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டது; வலதுசாரிகள் இதனை சமூக வலைத் தளங்களில் பரப்பி மதச்சாயம் பூச முற்பட்டனர்.
இதுகுறித்து பலரும் ட்விட்டரில் ANI யை சுட்டிக்காட்டி, இது ஒரு வதந்தி என்று விமர்சித்ததைத் தொடர்ந்து, அந்த செய்தியை நீக்கிய ANI, தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டு ட்விட்டரில் பதிவு செய்ததை அறிய முடிகின்றது. மணிப்பூர் போலீஸின் அடுத்தடுத்த ட்வீட்டுகளால் குழப்பம் அடைந்து விட்டதாகவும், தவறான தகவல் என்று அறிந்தவுடன் நீக்கிவிட்டதாகவும் ANI தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் இன்னும் சரியாகிவிடவில்லை என்றும், அங்கு நிலைமை சீராக சில காலம் ஆகலாம் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே மாதம் 3ம் தேதி பாதயாத்திரை மேற்கொண்டபோது, இருதரப்புக்குமிடையில் மோதல் வெடித்துக் கலவரம் மூண்டது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டலாயின. கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது.
மணிப்பூரில் இராணுவம்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அமைதி பேச்சு வார்த்தை மூலம் வன்முறைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மலைவாழ் மக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிப்பூரில் நிலைமை மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான ஜொலிஷிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார், மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகச் சீரடைந்து வருவதாகவும், மணிப்பூர் மாநில காவல் துறையினர், மணிப்பூர் ரைஃபிள் பிரிவினர், ராணுவ வீரர்கள், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதோடு, 150க்கும் அதிகமான நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புதிய தகவல்களை கொண்ட அறிக்கையை ஒன்றினைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் கலவரத்தை தடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த காலங்களில் நீடித்து வரும் வன்முறை காரணமாக அம்மாநில மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு அண்டை மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்து வருகின்றனர். கலவரங்களால் அறுபதாயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். நான்காயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தாக்கப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த குடும்பம்

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் 'காக்சிங்' மாவட்டத்திலுள்ள 'சுக்னு' என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஜோசப் என்பவர் உயிர் பிழைத்தால் போதும் என்று தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்துள்ளார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 'கண்ணன்' என்ற இயற்பெயரைக் கொண்ட, 61 வயதான ஜோசப் என்பவர், தனது மனைவி, மருமகள், பேரக்குழந்தை என மொத்தம் ஒன்பது பேர்களுடன் தப்பி வந்துள்ளதாக BBC தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் கடைசி வாரத்தில் தங்கள் பகுதியிலும் கலவரம் பரவத்தொடங்கியதாகவும், இரவு நேரத்தில் துப்பாக்கிச் சத்தம், மரண ஓலங்கள் தமக்கு உயிர்ப் பயத்தை ஏற்பத்தியதாகவும் கூறிய அவர், வழியெங்கும் கலவரம், எப்போது வேண்டுமானாலும் கலவரக்காரர்களால் தாம் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற நிலையில், முதலில் சுக்னு கிராமத்தின் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்ததாகக் கூறினார்.
தங்களின் வீடு, உடைமைகள், எல்லாவற்றையும் இழந்து, இடம் தெரியாமல் காடுகளில் தலைமறைவாகி இருந்ததாகவும், சுமார் ஒரு வாரத்தின் பின் சான்டல் என்ற கிராமத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து மிஸோரம் சென்று அங்கிருந்து 'கவுகாத்தி' என்ற இடத்திற்குச் சென்றதாகவும், அதன் பின்னரே தமிழ்நாட்டை நோக்கித் தமது பயணத்தை தொடங்கியதாகவும், பயண அனுபவத்தை அவர் BBCயுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்!
தமிழ்நாடு வந்த அவர்கள், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்த நிலையில், சென்னை மாவட்ட துணை ஆட்சியர், சுகாதார துறை அதிகாரிகள், பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் போன்றோர் நேரில் விசாரணை நடத்தி, ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்.
தற்போது பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரின் பரிந்துரை பேரில் அவரது மகன்மார் மற்றும் மகள்களுக்குத் தனியார் நிறுவனங்களில் தற்காலிக வேலை கிடைத்திருப்பதாகவும் ஜோசப் தெரிவிக்கின்றார்!
மக்களை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார். கராசந்த்பூருக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணபூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து, ராகுல் காந்தி இம்பால் திரும்பினார்.
இதற்கிடையே மணிப்பூரில் நிலைமையை சீர்செய்ய மக்களே முன்வந்து சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மணிப்பூரின் வடக்கு இம்பால் பகுதிக்கு உள்ளே வரும் வாகனங்களை, அப்பகுதி பெண்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அறிய முடிகின்றது.
இது மதம் தொடர்பான ஒரு பிரச்சைனையல்ல

சுமார் 26 நாட்கள் வன்முறைகள் தடுக்க முடியாமல் நடந்தேறின. இது மதம் தொடர்பான ஒரு பிரச்சைனையல்ல. முழுக்க முழுக்க பழங்குடி மக்ககளுக்கு இடையேயான மோதல். இப்படி மக்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதையும் அவர்களின் வீடுகளும், பொதுச்சொத்துக்களும் அழிக்கப்பட்டு, மக்கள் தம் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருவதையும் எவரும் அங்கீகரிக்க முடியாது. எளிதாக எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை என்பதை மட்டும் அக்கறையுள்ளவர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். மணிப்பூர் மக்களுக்காகவும் அவர்களின் விடிவுக்காகவும் பிரார்த்திப்போம்.
செம்மைத்துளியான்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments