இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், இந்தியர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் பரவிக் கிடக்கிறது கிரிக்கெட் விளையாட்டு. முட்டு சந்துகளையும், மொட்டி மாடிகளையும் கூட பிட்ச்களாக மாற்றும் அளவுக்கு நம்முடன் ரத்தமும் சதையுமாக உள்ள கிரிக்கெட் விளையாட்டின் மகுடமாக இருப்பது உலகக்கோப்பை போட்டிகள். இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்கள் பற்றிய வரலாற்றை தற்போது பார்க்கலாம்....
5 நாள் நீண்ட டெஸ்ட் போட்டிகளை மட்டுமே பார்த்த ரசிகர்களை ஒரே நாளில் முடியும் போட்டி வெகுவாக ஈர்த்ததால், கிரிக்கெட் விளையாடும் பல நாடுகளின் அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது.
முதன்முறையாக 1975-ஆம் ஆண்டு 60 ஓவர் போட்டியாக இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் முதல் ஆட்டத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போது, இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்ரீனிவாச வெங்கடராகவன் என்ற தமிழர் என்பது சிறப்பான செய்தி.
1975, 1979 என முதல் இரண்டு தொடர்களில் அசால்டாக அனைத்து அணிகளையும் ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ், உலகக் கோப்பையை தட்டித் தூக்கியது. அந்த காலகட்டங்களில் விவியன் ரிச்சர்ட்சன் கிரிக்கெட் உலகின் கதாநாயகனாக வலம் வந்தார்.
1983-ஆம் ஆண்டு கத்துக்குட்டி அணியாக இருந்த இந்தியா, ஜாம்பவானாக இருந்த வெஸ்ட் இண்டீஸின் ஹாட்ரிக் கனவை தகர்த்து முதல் முறையாக உலகக் கோப்பையை வசப்படுத்தியது.
இதன் மூலம், இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரிக்க, அதற்கு தீனி போடும் வகையில், 1987-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆஸ்திரேலியா முதல்முறையாக மகுடம் சூடியது.இதையடுத்து, 1992-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1996-ஆம் ஆண்டு மீண்டும் இந்திய துணைக்கண்டத்தில் போட்டிகள் நடைபெற்றன. இம்முறை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து போட்டியை நடத்தின. இதில் கத்து குட்டியாக களமிறங்கிய இலங்கை அணி கோப்பை வென்று கிரிக்கெட் உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியது.
இதன் பின்னர், 1999, 2003, 2007 என உலகக் கோப்பையை தொடர்ந்து 3 முறை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி வரலாறு படைத்தது. ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், மெக்ரத், ஹெய்டன் என அசுர பலத்தில் அப்போது ஆஸ்திரேலிய அணி வலம் வந்தது. 2003-இல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கனவை தகர்த்ததும் இந்த கூட்டணிதான். அந்த போட்டியில், சச்சின் ஆட்டமிழந்த தருணத்தில் உடைந்த மனங்களை மீண்டும் குதூகலிக்க வைத்தவர் மகேந்திர சிங் தோனி.
கிரிக்கெட்டை கொண்டாடும் இந்தியர்களின் நீண்ட நாள் ஏக்கமாக இருந்த உலகக்கோப்பை கனவை 2011-ஆம் ஆண்டு நனவாக்கியது தோனி தலைமையிலான இந்திய படை.
2015-இல் உலகக் கோப்பையை மீண்டும் ஆஸ்திரேலியா தட்டிப்பறிக்க, 2019-இல் உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கையில் எடுத்தது இங்கிலாந்து. இதில், இறுதிப்போட்டி டிராவாக, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதுவும் டை ஆனதால், அதிக பவுண்டரிகளின் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இதுவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்து மட்டுமே உலகக்கோப்பையை நடத்திய இந்தியா, இந்த முறை தனியாக நடத்துகிறது. இந்தியாவில் நடப்பதால், கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்படுகிறது. உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments