Ticker

6/recent/ticker-posts

இந்தியாவுக்கு பெயர் மாற்றம் தேவைதானா?


"இந்தியா" என்ற பெயர் கடந்த 75 ஆண்டுகளாக  உலக வரலாற்றில்  வேரூன்றி நின்று, உணர்வென்ற மரமாக வளர்ந்து நிற்கிற ஒரு பெயராகும்.
 

ஜி.20 மாநாடு


ஜி.20 மாநாடு இன்று நடைபெற்றுவருகின்ற நிலையில், இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இந்தியா உட்பட அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் டில்லிக்கு வருகை தந்துள்ள நிலையில், இம்மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் பங்கேற்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்கவுள்ள தலைவர்களுக்கு,குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்ட இரவு விருந்துக்கான அழைப்பிதழில், வழக்கமாக ‘இந்தியக் குடியரசுத் தலைவர்’ என்றிருப்பதற்கு பதிலாக, ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம் பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!



இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அமன் லேகி கூறுகையில், "அதிகாரபூர்வமாக 'இந்தியக் குடியரசு' என்றே நம் நாடு அறியப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றம் செய்ய அரசியல் சாசன சட்டப்பிரிவு 368ல் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது" என்றார்.

இந்தப் பெயர் மாற்றப் பேச்சுக்கு  இப்போது எதிர்ப்பலைகள் வந்த வண்ணமாக உள்ளன.

செப்டம்பர் 1949ல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு குறித்த விவாதம் தொடங்கியபோது, ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரும் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது.

இதுநாள்வரை இந்தியா என்ற பெயரின் பயன்பாடு எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை



இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்றின் ஆங்கிலப் பதிப்பில் ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதுநாள்வரை, இந்தியா என்ற பெயரின் பயன்பாடு எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை. ஊடகங்களும் இந்த வார்த்தையை பயன்படுத்தின.

இருப்பினும், இந்தியாவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழும் போதெல்லாம், இந்தியாவுக்குப் பதிலாக ‘பாரத்’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்து வருகின்றது!

மோடி அரசு அவ்வப்போது ஏதாவது ஒன்றைப் பண்ணி,  தன்னை ஜாம்பவனாக்கிக் கொள்ள  விழைவது அனைவரும் அறிந்த விடயமே!

அந்த வகையில், சந்திரனின் தென்துருவப் பெயர் வைப்பிற்குப் பின், "பாரதம்" என்ற பெயரை இந்தியாவுக்கு சூட்டுவதாகப் பாசாங்கு பண்ணி இப்போது பிரபல்யம் அடையப்பார்க்கின்றது.

கிபி 712-ல், அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிம் என்பவரின் வருகையால் இந்தத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தெற்கு பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார்.

இதுவே மத்திய ஆசியப் பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை இந்தியத்துணைக் கண்டம் சந்தித்து, இஸ்லாமிய இராஜியமாகக் காரணமாக இருந்தது. இவற்றுள் கஜினி முகமது, கோரி முகமது, தில்லி சுல்தான்கள், முகலாயப் பேரரசு என்பன புகழ் பெற்றவை.
துணைக் கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராச்சியம் பரவியதால், இந்தியாவுக்குள் அராபிய ஓவியங்களும், கட்டிடக் கலைகளும் வந்தன.முகலாயர்களுடன் விஜயநகரப் பேரரசு, மராத்தியப்பேரரசு, இராசபுத்திர இராஜியங்கள் போன்ற பல இராஜியங்களும் எழுச்சி பெற்றன.

முகலாய சாம்ராசியம், அவுரங்கசீப்பிற்குப் பின்னர், 18ம் நூற்றாண்டில் வலுவிழந்து போனது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள், மராத்தியர்கள் வட மேற்குத் துணைக்கண்டப் பகுதிக்குள் எளிதில் நுழைந்தனர். தெற்கு ஆசியாவை ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் தன் வசமாக்கிக் கொள்ளும் வரை, இவர்கள் ஆட்சிபுரிந்தனர்.

சுதந்திரப் போராட்டம்

18ம் நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி, 1857ம் ஆண்டு முதல் இந்தியாவின் சுதந்திரப் போருக்கு காரணமாக அமைந்தது.

20ம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப்பட்ட சுதந்திரப் போராட்டம் நாடு முழுவதிலும் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீக்கும் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது!
இந்தத் துணைக் கண்டம் 1947ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றது!

பழங்காலத்திலிருந்தே, இந்திய நிலம் ஜம்புத்வீபம், பாரத்காண்ட், ஹிம்வர்ஷ், அஜ்னாபவர்ஷ், பாரத்வர்ஷ், ஆர்யவர்தா, ஹிந்த், ஹிந்துஸ்தான் மற்றும் இந்தியா என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தாலும், பாரதமும் இந்தியாவுமே நிலைத்து நின்ற பெயர்களாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் சர்வதேச ரீதியாக "இந்தியா" என்ற பெயர் பாவனையில் இருந்தாலும், உள்நாட்டில் ஆங்காங்கே "பாரதம்" என்பதும் உபயோகத்தில் இருந்துதான் வந்துள்ளது!

பாரதம் என்ற பெயர் பண்டைய இந்திய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து உருவானதாகும். இது நெருப்பைக் குறிக்கும் ‘அக்னி’ என்பதாகும்.

கன்வமகரிஷி பண்டைய இந்தியாவின் ரிக் வேதகால முனிவர்களில் ஒருவர். கன்வமகரிஷியின் ஆசிரமம் உத்தரகாண்ட மாநிலத்தின் நர்மதா (மாலினி) ஆற்றங்கரையில், 'கோட்துவாரா' எனுமிடத்தில் அமைந்துள்ளது.

கன்வமகரிஷியால் வளர்க்கப்பட்ட விஸ்வாமித்திர முனிவரின் மகளான 'த்ரேதா' யுகத்தைச் சேர்ந்த  சகுந்தலையை, துஷ்யந்த மகராஜன் திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான் பரதன். பரதன் பிற்காலத்தில் ஒரு பேரரசராக மாறுவான் என்றும், இந்த நிலத்தின் பெயர் பாரதம் என்று அழைக்கப்படும் என்றும் 'கன்வ மகரிஷி' ஆசீர்வதித்ததாக வரலாற்றுத் தகவல் ஒன்றும் உள்ளது! பரதனின் பெயரிலேயே இந்திய தேசம் பாரதமாக அன்று உருவெடுத்தது!

இந்திய அரசியல் சாசனம் ஹிந்தியில்தான் முதலில் எழுதப்பட்டது. அதில் "பாரத்"என்கிற வார்த்தைதான் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில் மட்டுமே "இந்தியா" என்கின்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

மகாகவி பாரதியார் கூட தனது பாடல்களில் "பாரத தேசம்",  "பாரத மாதா", "பாரத சமுதாயம்" என்று பரவலாக "பாரதம்" என்றுதான் பிரயோகப் படுத்தியுள்ளார். அந்நிய ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை பெறப்போராடிய அனைவருமே "பாரதம்" என்பதையே பிரயோகித்து வந்துள்ளனர்.

ஆங்கிலத்தில் "இந்திய பிரதமர்" என்று அழைத்தாலும், மற்ற மொழிகளில் எழுதும்போதும், அழைக்கும்போதும் "பாரதப் பிரதமர்" என்றுதான் பெரும்பாலும் பாவனையில் இருந்து வருகின்றது.

அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்ட எல்லா நாடுகளும், தங்களது பெயரை முந்தைய பெயருக்கு மாற்றி இருக்கின்றன. இருந்தபோதிலும், பிரதமர் மோடி தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த முற்படுகின்றார். வெறும் இருநூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட  ஐரோப்பியர்கள் வழங்கிய பெயரை மாற்றுவதாகக் காரணம் கூறப்பட்டாலும், இதில் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கு இருக்குமோ என்று கூட சந்தேகப்படத் தோன்றுகின்றது!

சர்வதேச ரீதியான பாவனைகளில் "இந்தியா" என்பதை மாற்றும்போது ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், இணையத்தளத்தின் codeஐ மாற்றுவதென்பதும் கூட ஒரு கடின காரியம்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

செம்மைத்துளியான்


 



Post a Comment

0 Comments