Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

உதவி செய்த நாட்டையே துரோகி என விமர்சித்த உக்ரைன் அதிபர்.. ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்த போலந்து !


ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

 

உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

அந்த வகையில் ஐரோப்பிய நாடான போலந்து, உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தொடர்ந்து பல்வேறு உதவிகளையும் போலந்து செய்துவந்தது. ஆனால், தற்போது உக்ரைனுக்கு அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் நிறுத்துவதாக போலந்து அறிவித்துள்ளது.

உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக உக்ரைனின் முக்கிய ஏற்றுமதியான கருங்கடல் வழியிலான தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்தது. இதன் காரணமாக உக்ரைன் தனது நாட்டில் விளையும் தானியங்களை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் வழியாக உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்த வகையில், பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் வழியாக இந்த தானியம் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், இந்த தானியங்களை அந்த நாடுகளில் விற்பனை செய்ய அந்நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது.

அந்த தடை தற்போது நீக்கப்பட்டாலும், சம்மந்தப்பட்ட நாடுகள் தாங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், உக்ரைன் தானியத்தை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய தடை விதித்திருந்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில நாடுகள் ரஷ்யாவுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்த நாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலந்து நாட்டு பிரதமர் மாட்யுஸ் மொராவிக்கி எங்கள் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிப்பதில் கவனம்செலுத்த வேண்டியுள்ளது, இதன் காரணமாக உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்புவது இனி நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து முதல் நாடாக உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்த நாடு போலந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Source:kalaignarseithigal


 



Post a Comment

0 Comments