மாரடைப்புக்கு எச்சரிக்கை.. ஸ்மார்ட் வாட்ச்சால் உயிர் பிழைத்த நபர்!

மாரடைப்புக்கு எச்சரிக்கை.. ஸ்மார்ட் வாட்ச்சால் உயிர் பிழைத்த நபர்!


இங்கிலாந்தில் 42 வயதான ஒருவரின் உயிரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்ற உதவியிருக்கிறது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் மனிதர்களுக்கு இக்கட்டான சூழல்களில் எப்படி கை கொடுக்கிறது என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

கைக்கடிகாரம்… யாருக்காகவும் எப்போதுமே நிற்காத நேரத்தை, கணித்துச் சொல்ல மனிதன் உருவாக்கிய அறிவியல் படைப்பு…கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே தண்ணீரின் அழுத்தத்தை கொண்டு இயங்கும் கடிகாரம் எகிப்தில் இருந்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ அதே கால கட்டத்தில், சீனர்கள் உருவாக்கிய கடிகாரம், திரவ உலோகம் எனப்படும் மெர்குரியை கொண்டு செயல்பட்டது. அறிவியல் வளர்ச்சி மற்றும் காலத்திற்கு ஏற்க கடிகாரத்தின் வடிவமும், செயல்பாடும் தொடர்ந்து மேம்பட்டு வந்தது.

ஆனால், மொபைல் போன்கள் வருகைக்குப் பிறகு அதிலேயே Time பார்க்கும் வசதியும் இருந்த காரணத்தால், கடிகாரத்தின் விற்பனை சரிவைச் சந்தித்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நேரத்தை காட்டுவதற்கு மட்டுமே கடிகாரம் என்ற நிலை மாறியது. உங்கள் உடலின் அத்தியாவசிய தகவல்களை, காட்டும் குட்டி டாக்டராகவே ஸ்மார்ட்வாட்ச்கள் உருவெடுத்தன.

இதயத் துடிப்பு, உடலில் ஆக்சிஜன் அளவு, எத்தனை அடி நடந்திருக்கிறீர்கள் என ஒருவர் தூங்கும் நேரத்திலும் கூட கைகளில் கட்டியிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் தூங்காமல் கண்காணித்து துல்லியமாக தரவுகளை அளிக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்களை, ஸ்மார்ட் வாட்ச் உடன் இணைத்துக் கொள்ளும் வசதியும் இருப்பதால், அவசர தொலைபேசி அழைப்புகளை ஏற்பதிலும் ஸ்மார்ட் வாட்ச் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் தான், ஹாக்கி வேல்ஸ் (Hockey Wales) என்ற நிறுவனத்தின் CEO பால் (Paul Wapham) என்பவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட பால், தினமும் காலை, ஜாகிங் செல்வது வழக்கம். சிறுவயதில் இருந்தே விளையாட்டு வீரராக வலம் வந்த பால், வழக்கம் போல் ஜாகிங் சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதயம் கனமானது போல் உணர்ந்ததை அடுத்து, ஓடுவதை நிறுத்திய பால், சாலையிலேயே அமர்ந்து ஆசுவாசப்படுத்தினார். அப்போதுதான் தனது இதயத் துடிப்பு சீராக இல்லை என்பதை அவரது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை விடுத்தது. அதீத நெஞ்சு வலியின் காரணமாக தன்னிடம் இருந்த ஸ்மார்ட் ஃபோனை எடுப்பதற்கு கூட முடியாத நிலையில், சமயோஜிதமாக செயல்பட்ட பால், கையில் இருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே, தனது மனைவி லாரா-வை தொடர்பு கொண்டு சூழ்நிலையை விளக்கினார். அவரது மனைவியும் அடுத்த சில நிமிடங்களில் பால் இருந்த இடத்திற்கு வந்து, அவரை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு சென்ற பாலுக்கு, இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டதுடன், மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க Stent வைக்கப்பட்டது. உடல்நலனில் தொடர் அக்கறை செலுத்தி வந்த ஹாக்கி வேல்ஸ் நிறுவனத்தின் CEO பாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அந்த சமயத்தில் அவரின் உயிரை பாதுகாக்க அவர் கட்டியிருந்த ஸ்மார்ட் ஃபோன் உதவியது என்பது சற்றே ஆறுதலை அளிக்கிறது.

AI தொழில்நுட்பத்தால், நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ உருவாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய அதே சமயத்தில், அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே ஆக்கப்பூர்வமாக மாறுகிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகி இருக்கிறது.

news18



 



Post a Comment

Previous Post Next Post