இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி அழகு நிலையம் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..! சென்னையில் பகீர் சம்பவம்

இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி அழகு நிலையம் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..! சென்னையில் பகீர் சம்பவம்

காதில் இருந்த ஓட்டையை அடைப்பதாகக் கூறி காதினை அழுக வைத்ததாக அழகு நிலையத்தின் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

சென்னை, சூளை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண் சுஷ்மிதா, இன்ஸ்டா விளம்பரத்தைப் பார்த்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் பியூட்டிசன் அகாடமியில் ரூ.2,500 செலுத்தி ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்குச் சேர்ந்துள்ளார். அப்போது, சுஷ்மிதாவுக்கு இரண்டு காதுகளில் கம்மல் போட்ட இடத்தில் ஓட்டை இருந்ததால் அதை அடைப்பதற்கான சிகிச்சை அளிப்பதாக அழகு நிலையத்தினர் கூறியுள்ளனர். பின்னர், சுஷ்மிதாவின் சம்மதத்தின் அடிப்படையில் ear lobe repairing லோஷன் என்ற மருந்தை சுஷ்மிதாவின் காதுகளில் தடவி அழகு நிலையத்தினர் சிகிச்சை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் ஓரிரு நாட்களில் இரண்டு காதுகளிலும் சுஷ்மிதாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அழகு நிலையத்தில் விசாரித்த போது அவர்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

பிறகு ஒரு சில நாட்களில் காது அழுகி ஒரு பாதி அறுந்து விட்டதால், பயந்து போன சுஷ்மிதா மருத்துவரிடம் சென்று காண்பித்துள்ளார். காலாவதியான மருந்தை சிகிச்சைக்காக பயன்படுத்தியதால் காது அழுகி விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தவறான சிகிச்சை குறித்து சம்பந்தப்பட்ட அழகு நிலையத்திடம் கேட்டபோது தனக்கு மிரட்டல் விடுத்ததாக திருவிக நகர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.

புகார் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்திலும் சுஷ்மிதா தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அழகு நிலையத்திடம் பேசிய போது, சிகிச்சைக்குப் பிறகு காதில் தண்ணீர் படக்கூடாது என சுஷ்மிதாவிடம் கூறி அனுப்பியதாகவும் ஆனால் அதையும் மீறி சுஷ்மிதா காதில் தண்ணீர் பட வைத்ததால் காது அழுகிய நிலைக்குச் சென்றதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். போலீசாரின் விசாரணையே யார் மீது தவறு என்பதை உறுதிப்படும் என சுஷ்மிதாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

news18


 



Post a Comment

Previous Post Next Post