காஸாவின் விடியலைத்தேடி!-3

காஸாவின் விடியலைத்தேடி!-3


குடும்பத்தாரைக் கூடாரத்தினுள் பத்திரமாக  இருக்கச் செய்துவிட்டு, ஆசுபத்திரியைத் தேடிச் சென்றான் ஆதில். 

குடும்பத்திற்குத் தலைவனாக இருந்து, நாளும் உழைத்து, அன்பும், அதிகாரமும்  காட்டிய தந்தையை ஆதில் எப்படித் தேடிக் கொண்டிருக்கின்றானோ அதுபோலவே, இன்னும் எத்தனை எத்தனை ஆதில்கள் தமது தந்தைமார்களையும், தாய்மார்களையும் இந்தப் பாலஸ்தீன மண்ணில்  தேடிக்கொண்டிருக்கின்றார்களோ?
CLICK HERE TO WATCH 👇👇👇👇

தன் வீடு தரைமட்டமாக்கப்பட்டு விட்டதால், ஆதில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக, தெற்கு நோக்கி நடந்துவந்து கொண்டிருந்தபோது, எல்லைப்லைப்புரத்துக்குச் சற்று முன்னதாக  பாதையோரத்தில்  ஒரு மஸ்ஜிதைக் கடந்து வந்தத ஞாபகம்;  அந்த மஸ்ஜித் வரை  சென்றால், ஆசுபத்திரி எங்கு இருக்கலாம்  என்பதை யாரிடமாவது கேட்டறிந்து கொள்ளலாம் என்று நினைத்தவனாக, அவன் 

நடந்து கொண்டிருக்க எதிர்ப்பக்கமிருந்து, ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாக  மூட்டை முடிச்சுக்களுடன்,  சாரிசாரியாக, அவனைக் கடந்துபோய்க் கொண்டிருந்தனர்.

மஸ்ஜிதை அடைந்த ஆதில், உள்ளே நுழைய முன்  வெளியே நாற்புறமும் சுற்றிப் பார்க்கலானான். அவனது கண்கள் எங்கு தேடியும், எந்த மனிதரும் மஸ்ஜித் வளாகத்தில் தெரிபடுவதாக இல்லாதது அவனை அதிசயப் படவைத்தது!

பேரிடர்களின்போது மக்கள் மஸ்ஜிதுகள், ஆலயங்கள், பள்ளிக்கூடங்களில் தஞ்சம் புகுவது இதுநாள் வரைக்கும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. நிலைமை இம்முறை நேர்மாறாக இருப்பதைக்கண்டு அவன் வியப்படைந்ததில் நியாயம் இல்லாமலில்லை!

அந்த வளாகத்துக்குள் கொஞ்ச தூரம் நடந்ததும், ஒரு மூலையில் வயோதிபர் ஒருவர், போத்தலுக்கு நீர் நிரப்பிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அவருக்கருகில் சென்ற ஆதில் 'ஸலாம்' சொல்லிவிட்டு,

"என்ன பெரியவரே... மஸ்ஜிதில் ஆட்களே  இல்லையே?" என்றான். 

"ஓம் மகனே... இப்போ யாரும் மஸ்ஜிதுக்குள் தஞ்சமடைய வருவதில்லை... பொது இடங்களைக் குறிவைத்துத்தானே குண்டு போடுராணுவல்..படுபாவிகள்!" என்று கூறிக்கொண்டே அந்தப் பெரியவர், போத்தலுக்குத் தண்ணீர் சேர்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

போத்தலையும் அதற்குள் உட்புகும் தண்ணீர்ச் சொட்டுக்களையும் கவனித்த ஆதிலுக்கு, இது நிறம்ப ஒருநாள் கூடச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டான்!

"நீண்ட நேரமாகவே நீர் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களா பெரியவரே!"

"ஆமாம் மவனே... பஜ்ர் தொழுதுவிட்டு வந்த நான்...
இந்தா பார்!... கால்  போத்தல் கூட சேரவில்லை." என்று விரக்தி கலந்த தொனியில் கூறிய பெரியவர், போத்தலை ஆதிலுக்குக் காட்டி ஆதங்கப் பட்டுக்கொண்டார்!

ஆதிலுக்குக் கண்களில் நீர் வந்துவிட்டது! எப்படி வாழ்ந்த மக்கள் இப்படி  ஆகிவிட்டார்களே என்று நினைக்கும் போது, அவனால் கவலைப் படாமலிருக்க முடியுமா?!

"அதுசரி மவனே! நீ  எங்கிருந்து வருகிறாய்?"  என்று கேட்டவர், "இங்கிருக்காதே... உடனே போய்விடு... அந்தப் பாவிகள் இங்கயும் குண்டப்  போட்டாலும் போட்டுடுவானுவள்!"

"அப்போ நீங்க மட்டும் இங்க இருக்கீங்களே? குண்டு போட்டா உங்களுக்கு விழமாட்டாதா?" பதிலுக்கு ஆதில்  கேட்டான் . 

"அதில்ல மவனே... இப்போ எங்க காலந்தான் முடிஞ்சிட்டுதே... இனி உங்க காலம்... இந்த நாட்டக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு உங்களது...அதனால நீங்க 

வாழணும்...போயிடு... போயிடு... நீ இங்கிருந்து போயிடு மவனே..." அந்தப் பெரியவர் ஆதிலிடத்தில் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினார்!

ஆதிலுக்கு  தலை சுற்றியது; பாலஸ்தீனத்தின் மீது பெரியவர் வைத்திருக்கும் பற்றுதலை  நினைக்கும்போது, அவனுக்குள்ளும்  நாட்டுப்பற்று கலந்த வீரத்தனமொன்று அவனையும் அறியாமலேயே அவனிடத்தில் வந்துவிட்டதை உணர்ந்தான்!

அப்பொழுதுதான், பள்ளிக்கூடத்தில் பாலஸ்தீனத்து வரலாற்றைப் படிக்கும்போது அவனது ஆசிரியர் குறிப்பிட்டது அவனது நினைவுக்கு வந்தது!

ஒரு காலத்தில் இந்நாட்டு விடுதலைக்காகப் போராடிய "கஸ்ஸான்" என்ற வீரப்பெருமகன்,  ஒரு விடயத்தில் மாத்திரம் மிகவும் தெளிவாக இருந்ததாகவும்,  அது நாட்டு மக்களை ஆன்மீக ரீதியாக பயிற்றுவித்தாலல்லாது வீரம்மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியாது என்று அவர் கருதியதாகவும், ஆசிரியர் கற்றுத் தந்தது ஆதிலுக்கு இப்போது நினைவுக்கு வந்தது!

முதியவரிடம் பேச்சுக் கொடுத்ததிலிருந்து,  இளைஞர்களைத்தான் இந்நாட்டு விடுதலைக்காக அவர் நம்பியிருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டான் ஆதில்! 

சமுதாயத்தில்  வீரமிக்க ஒருவனாக தானும் மிளிர வேண்டுமென்று நினைத்த அவன்,  தன் மனதை ஒரு வீரப்புதல்வனாக  தைரியப்படுத்திக் கொண்டான். 

நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான பெரியவர், தனது மூன்று புதல்வியர்களையும் மணமுடித்துக் கொடுத்துவிட்டு, பக்கத்து நகரான 'ஜராரா'வில் மனைவியுடனும், மகனுடனும் வசித்து வந்துள்ளத, அவருடனான கலந்துரை யாடலின்போது  ஆதில் அறிந்து கொண்டான்.

சரமாரியாகப் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்கத்தால் அங்கிருந்த பல வீடுகள் முற்றிலும் தரைமட்டமானபோது,  சில வீடுகள் பகுதியளவில் பாதிப்புற்ற நிலையில், இவரது பகுதியளவில் பாதிப்படைந்த இவரது வீட்டில், மனைவி சஹீதாக்கப் பட்டுள்ளார்!

குஷ்காதிப் சாலையில் அமைந்துள்ள இந்த 'டோம் மஸ்ஜிது'டன் இணைந்த ஹிப்ழ் மத்ரஸாவில், குர்ஆனை மனனம் செய்யும் புனிதக்கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக, இரண்டு வருடங்களுக்கு முன் மகனைச் சேர்த்துள்ளார். மகனும் குர்ஆனை அரைவாசிக்கும் மேலாக மனனம் செய்ததை முதியவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மனைவியின் வபாத்திற்குப் பிறகு, மகனைப் பார்ப்பதற்காக  இங்கு வந்தபோது, மத்ரஸா தரை மட்டமாகியிருந்ததாகவும்,  ஆசுபத்திரிக்குப் போய்க் காயப்பட்டவர்களில் மகனைத் தேடிப்பார்த்தபோது அங்கு இல்லாததால், இரண்டு நாட்களாக மத்ரஸாவின்  இடிபாடுகளுக்குள்  மீட்புப் பணியாளர்களுடன் சேர்ந்து அவரும் மகனைத் தேடியதாகக் கூறினார்.

இன்று விடியற்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜனாஸாக்களுள்,  அவரது மகனின் ஜனாஸாவாகி இருந்ததாகவும்,  தன் மகனின் ஜனாஸாவுடன் சேர்த்து எல்லா ஜனாஸாக்களையும்  நல்லடக்கத்திற்காக  கொண்டு போய்விட்டதாகவும் பெரியவர் துயரம் தோய்ந்த நிலையில்  குறிப்பிட்டார்.

"பெரியவரே, நீங்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் ஒரு ஹாபிழை உருவாக்கி, 'ஸுஹதாக்கள்'கூட்டத்தில் சேர்த்து விட்டீர்கள்! உங்கள் மகன் உங்களுக்காகவும் அல்லாஹ்விடத்தில் நன்மாராயணம் செய்வார்" என்றவாறு ஆதில் பெரியவரை ஆறுதல் படுத்திவிட்டு, அவரிடம் ஆசுபத்திரிப் பாதையைக் கேட்டறிந்து கொண்டு,  அல்பஷீர் சாலை வழியாகத் தன் நடையைத் தொடர்ந்தான்.

பல மணி நேரங்களாக நடந்து கொண்டிருந்த அவனுக்கு இடையில், தென்பட்ட மைதானமொன்றில்  நிறுத்தப்பட்டிருந்த பாரிய கனரக வாகனமொன்றில், ஜனாஸாக்கள்  அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், பெருவாரியான மக்கள் தொழுகைக்காக  நின்றிருப் பதைக் கண்டதும், ஆதிலும் தொழுகையில் கலந்து கொண்டான். 

நிச்சயமாக 'டோம்' பள்ளிவாசலில் சந்தித்த அந்தப் பெரியவரது மகன்  ஹாபிழின் ஜனாஸாவும் இந்த ஜனாஸாக் கும்பலுக்குள் இருக்கும் என்று ஆதில் நம்பினான்.

தொழுதுவிட்டுத் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஆதில்,  

தூரத்தில் 'அல்நாசர் வைத்தியசாலை'யின் பெயர்ப்பலகையைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தவனாகத் தன் நடையின் வேகத்தைக் அதிகாரிக்கலானான்!

வைத்தியசாலைக்கு வெளியில் ஆங்காங்கே கனரக டாங்கிகள் நிறுத்தப்பட்டு, அவற்றுக்கு உள்ளேயும் வெளியேயும் படைப்பிரிவினர், துப்பாக்கிகளை ஏந்தியவர்களாக இருந்தனர். 

பெரியவர் ஊட்டிய தைறியத்தைத் தனக்குள் வறுவித்துக் கொண்டு, ஆதில் வைத்தியசாலைக்குள் நுழைய விளைந்தபோது, சிப்பாய் ஒருவன் ஓர்  இளம் பெண்ணிடத்தில் வம்பு பண்ணிக்கொண்டிருந்ததை அவன் கண்டான்; அந்த இளம் பெண்ணோ  இராணுவச் சிப்பாயின் பிடியிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள்! 

சுற்றி நின்றிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்களா அல்லது 'எமக்கெதற்கு வீண் வம்பு' என்றிருக் கின்றார்களா என்பது ஆதிலுக்குப் புரியவில்லை. ஆனால், அவனுக்குள்ளிருந்த இனம்புரியாததோர் வீரத்தனம், இராணுவச் சிப்பாயிடம் அவனை நெருங்கிச் செல்ல வைத்தது. பெண் பிள்ளையை அவனிடமிருந்து விடுவிக்க முனைந்தான் ஆதில்!

"யல்லா றூஹ்" என்று ஆதிலை விரட்டினான் அந்தச் சிப்பாயி. தன் பலங்கொண்ட மட்டும் போராடி அந்தச் இராணுவச் சிப்பாயியின் கைகலிலிருந்து இளம் பெண்ணை விடுவித்து, அவளை அங்கிருந்து ஓட வைத்தான் ஆதில்! அவளும் சிட்டெனப் பறந்து, 

அங்கிருந்து ஓடி மறைந்தாள். 

இப்பொழுது அந்தச் சிப்பாயியின் கோபம் முழுவதும் ஆதிலின் பக்கம் திரும்பியது. ஆதிலை அவன் தள்ளிவிட்டு நிலத்தில் சாய்த்து, 'பூட்ஸ்' காலால் உதைத்தான். ஆதில் பல முறைகளில் எழுந்திருக்க முனைந்தபோதும், மறுபடி மறுபடியும் மூர்க்கத்தனமாக அவன் உதைத்துக் கொண்டே இருந்தான்!

அப்பொழுது, அவர்களை  நெறுங்கிவந்த  இன்னொரு சிப்பாயி, இவன் காதில் ஏதோ முணுமுணுத்ததும் இவனின் முகம் மலர்ந்தது!

நிலத்தில் விழுந்து கிடந்த ஆதிலை அலாக்காகத் தூக்கியெடுத்து, வைத்தியசாலைக்குள் தள்ளிக்கொண்டே போனான். நிலத்தடிக்கு இறங்கும் படிக்கட்டுவரை ஆதிலைக் கொண்டு சென்றதும், அங்கு வந்த இன்னொரு சிப்பாயி அவனது முதுகுப் பகுதிக்கு ஓர் அடி விட்டான்! அவனின் அந்த அடி, முதுகுப்புறத்தில் 'காமெரா' ஒன்றை ஒட்டவைத்ததை ஆதில் அறிய வாய்ப்பில்லை!

அந்த சிப்பாயிகள் இருவருமாகச் சேர்ந்து, எவ்வித ஈவு இரக்கமுமின்றி திடீரென ஆதிலை படிக்கட்டில் தள்ளி விட்டனர்! குப்புற விழுந்த ஆதில், படிகளில் உருண்டு சென்று அங்கிருந்த சுவரொன்றில் சாய்ந்து நின்றான்!

(யுத்தத்தினால் காஸா மக்கள் படும் துயரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதையின்  மூன்றாம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது. அடுத்த அத்தியாயத்தை விரைவில் எதிர்பாருங்கள்!)

செம்மைத்துளியான்




 



Post a Comment

Previous Post Next Post