உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - பெரும் சரிவில் இந்திய அணி.. வங்கதேசத்துக்கும் கீழே.. நம்பர் 1 யார்?

உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியல் - பெரும் சரிவில் இந்திய அணி.. வங்கதேசத்துக்கும் கீழே.. நம்பர் 1 யார்?

செஞ்சுரியன் : 2023 - 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஐந்தாம் இடத்துக்கு சரிந்து இருக்கிறது. 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தோல்வியால் இந்த நிலைக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் இந்தியா வெற்றி பெறவில்லை என்றால் மேலும் மோசமான நிலை ஏற்படும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 245 ரன்களும், தென்னாப்பிரிக்கா 408 ரன்களும் குவித்தன. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணி 131 ரன்களுக்கு சுருண்டது. 

 மோசமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து புள்ளிப் பட்டியலில் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் ஒரு அணி பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் மூன்று போட்டிகளில் ஒரு டிரா, ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றதால் இந்திய அணி 44.44 வெற்றி சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. 

சதவீதத்தை அடுத்து புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் பட்டியலில் மொத்தமாக 16 புள்ளிகள் பெற வேண்டிய இந்திய அணி, இந்தப் போட்டியில் ஓவர்களை வீசி முடிக்க கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் அதற்கு தண்டனையாக 2 புள்ளிகள் குறைக்கப்பட்டு 14 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. 

ஒருவேளை புள்ளிப் பட்டியலில் இறுதியில் இரண்டு அணிகள் ஒரே அளவில் வெற்றி சதவீதம் கொண்டு இருந்தால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி அப்போது பின்தங்க வாய்ப்பு உள்ளது. 

முன்னதாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு வெற்றி, ஒரு டிரா செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் இங்கிலாந்து அணியுடன் இந்திய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. இந்த ஆறு போட்டிகளிலும் தோல்வி அடையாமல் இருந்தால் மட்டுமே இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை நோக்கி முன்னேற முடியும். 

இந்திய அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடி வெற்றி பெற்று 100 சதவீத வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. 

தற்போது ஆஸ்திரேலியா உடன் டெஸ்ட் தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் அணி இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலும் வெற்றி பெற்றது. ஆனால், ஆஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. இதை அடுத்து அந்த அணி 3 போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி பெற்று 61.11 வெற்றி சதவீதம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 

நியூசிலாந்து அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே இதுவரை ஆடி உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 50 சதவீத வெற்றியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

வங்கதேச அணியும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் 50 சதவீத வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

இந்திய அணி, வங்கதேசத்துக்கும் கீழ் இடம் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. 

ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் ஆடி 41.67 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் ஆடி ஒரு டிரா மட்டுமே செய்து 16.67 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஆடி 15 சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 போட்டிகளில் ஆடி, இரண்டிலும் தோல்வி அடைந்து கடைசி இடமான ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

mykhel


 



Post a Comment

Previous Post Next Post