Ticker

6/recent/ticker-posts

நிலநடுக்கம், புயல், போர்... 2023ம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்.!


2023 ஆம் ஆண்டு உலகளவில் நடந்த சம்பவங்களில் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய சம்பவங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

இஸ்ரேல் - ஹமாஸ் போர் :

இஸ்ரேல் மற்றும் பாலத்தீன நாடுகளுக்கு இடையேயான பிரச்னை பல வருடங்களாக நிலவிவருகிறது. பாலத்தீனத்தில் இருந்து இயங்கும் ஆயுத குழுவான ஹமாஸ் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் குழு இஸ்ரேலில் இருந்து 240 மேற்பட்ட நபர்களை பிணைக் கைதிகளாக பிடித்துசென்றனர். ஹமாஸ் தாக்குதலில் 1,140 இஸ்ரேல் மக்கள் இறந்ததாகவும், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் 18,800 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஹமாஸ் குழுவை முழுமையாக அழிப்போம் என்ற சூளுரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலத்தீனத்தின் மீது நடத்திய தொடர் தாக்குதலில், உணவு, தண்ணீர் இன்றி 10,000 அதிகமான மக்கள் வீட்டை விட்டு வெளியே மருத்துவமனை, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில், காசாவில் அமைந்துள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனையின் மீது திடீர் வான்வழி தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 471 நோயாளிகள் கொல்லப்பட்டனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் தான் காரணம் என பாலத்தீன அரசு கூறிய நிலையில், இஸ்ரேல் ராணுவம் இதனை மறுத்தது. இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு கூறினர். போர் வரம்புகளை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகையே உலுக்கியது. இந்நிலையில், பிணை கைதிகளை மீட்பதில் இஸ்ரேல் ராணுவம் முனைப்பு காட்டிவருகிறது. மேலும் இவர்களுக்கு இடையே நடைபெறும் தாக்குதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுத குழுவினருக்குமான போர் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய செயற்கை 
நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு என்பதை பாடப்புத்தகத்திலும், செய்திகளிலும் மட்டும் கேள்விப்பட்ட மக்களுக்கு இந்த வருடம், பெரும் ஆச்சரியங்களை அளித்தது சாட்ஜிபிடி என்னும் செயற்கை நுண்ணறிவு. 2022 ஆம் ஆண்டு நவம்பர், 30 ஆம் தேதி களமிறக்கப்பட்ட சாட்ஜிபிடி இந்த ஆண்டு தொடக்கத்தில் வைரலானது. வெறும் 5 நாட்களில் 1 மில்லியன் யூசர்களை பெற்றது சாட்ஜிபிடி. நாம் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதிலளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒருவர் நாட்கள் கணக்கில் செய்யக்கூடிய பணிகளை சாட்ஜிபிடி சில நொடிகள் செய்துகாட்டியது. இதில் பல்வேறு நன்மைகள் இருப்பினும், இதனால் பெரும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியை புரட்டிப்போட்ட ஹிலாரி புயல் :

பசிபிக் கடலில் உருவான மிக தீவிர புயலான ஹிலாரி, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மாநிலங்களை கடுமையாக பாதித்தது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிக தீவிர புயலாக மாறிய ஹிலாரி 235 கி.மீ வேகத்தில் மெக்சிகோ மற்றும் கலிபோர்னியா மாகணங்களை கடுமையாக தாக்கியது. இதனால் கலிபோர்னியாவில் இதுவரை காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதில் கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயலின் தாக்கத்தில் ஒரு வருடத்திற்கு பெய்யவேண்டிய மழை ஒத்துமொத்தமாக கலிபோர்னியாவின் தெற்கு பகுதி, மெக்சிகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸின் வடக்கு பகுதி ஆகிய இடங்களில் பெய்ததால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த புயலினால் சுமார் 26 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பயங்கரமான பொருள் சேதம் ஏற்பட்டது. சர்வதேச விமானங்கள் உட்பட உள்ளூர் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த புயலால் அமெரிக்காவில் ஏற்பட்ட சேதம் மட்டும் 675 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் இதுபோன்ற பெரிய அளவிலான மழையை கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லியன் கணக்கில் சேதத்தை ஏற்படுத்திய கேப்ரியல் புயல் :

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வனுவாடு பகுதிகளை கேப்ரியல் புயல் பிப்ரவரி மாதம் கடுமையாக தாக்கியது. இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்பு சுமார் 8.4 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் அமைந்துள்ள ஹாஸ்டிங் மாவட்டத்தில் மட்டும் 1.25 மில்லியன் டாலர் அளவு சேதம் ஏற்பட்டது. இந்த புயலின் தீவிரத்தினால் நியூசிலாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு பின்பு இதுபோன்ற பெரிய புயலை சந்திக்கும் நியூசிலாந்து, 7 நாட்கள் அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 17 வரை கனமழையும், வெள்ளத்தையும் சந்தித்தது.

பெரும்பான்மையான பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 14 ஆம் தேதி அவசர நிலை திரும்பி வாங்கப்பட்டது. இந்த புயலினால் நியூசிலாந்தின் நார்த்லாந்து, ஆக்லாந்து, வைக்கேடோ, கிஸ்போர்ன், ஹாக்ஸ்பே, மனவடு-வாங்கனுய் ஆகிய பகுதிகள் கடுமையான சேதத்திற்கு உள்ளானது. பலரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. செல்போன் சேவைகள் மற்றும் இணைய சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டது. நியூசிலாந்து வரலாற்றில் மூன்றாம் முறையாக இந்த புயலுக்காக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

59,259 பேரை பலி வாங்கிய துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கம் :

துருக்கி மற்றும் சிரியா நாட்டு பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.8 மற்றும் 7.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் உலகையே உலுக்கியது என்று சொல்லலாம். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பில் 59,259 பேர் உயிரிழந்தனர். மொத்த நாடுமே சம்பித்தது. பிப்ரவரி 6 தேதி அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவுக் கொண்ட நிலநடுக்கமும், அதனைத்தொடர்ந்து 7.7 ரிக்டர் அளவுக் கொண்ட நிலநடுக்கமும் கடுமையாக துருக்கி மற்றும் சிரியாவை தாக்கியது.

1939 ஆம் ஆண்டுக்கு பின்பு துருக்கியை தாக்கிய மிகபெரிய நிலநடுக்கம் இதுவாக உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் எகிப்து நாட்டிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில் மட்டும் 15 மில்லியன் மக்கள் அதாவது மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் பாதிப்பிற்கு உள்ளானர். 2 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். துருக்கியில் 50,783 பேர் உயிரிழந்தனர். 297 பேரை காணவில்லை, 1,07,204 பேர் பலத்த காயமடைந்தனர்.

நிலநடுக்கத்தில் நாட்டில் வானுயர்ந்த கட்டிடங்கள் சீட்டுகட்டுபோல் சரிந்தன. கட்டிடங்களின் இடிப்பாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கிக்கொண்டனர். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வீடுகள் என அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்தது. இடிப்பாடுகளுக்கு நடுவில் சிக்கியவர்களை மீட்க, மீட்பு படையில் ஆட்கள் பற்றாமல், வெளிநாடுகளில் இருந்து உதவிக்கு வீரர்கள் வரவைக்கப்பட்டனர். சமீபத்திய வரலாற்றில் ஏற்பட்ட மிகபெரிய இயற்கை பேரழிவான துருக்கி நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் 148.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இறுதிக்கணக்கெடுப்பின் படி, சுமார் 4 மில்லியன் கட்டிடங்கள் சேதமானது.

ஆசியாவின் தென் கிழக்கு பகுதிகளை தாக்கிய மோக்கா புயல் :

வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான மோக்கா புயல் மியான்மர், வங்கதேசம், இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் சீனாவின் தெற்கு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மியான்மர் மற்றும் வங்கதேசம் நாடுகள் பெரும் பாதிப்பை கண்டனர். இந்த ஆண்டு மே மாதம் வடக்கு இந்திய பெருங்கடலில் உருவான மோக்கா புயல் மே 14 ஆம் தேதி மிக தீவிர புயலாக வலுபெற்று மணிக்கு 280 கி.மீ வேகத்தில் மியான்மரை ஒட்டிய கடலோர பகுதியை சென்றடைந்தது. மே 15 ஆம் தேதி வலுவிழந்த புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையை கடந்தது.

இந்த புயலின் தாக்கத்தினால் 460 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. மேலும், 700 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுமார் 2 லட்சம் கட்டிடங்கள் இடிந்து தரமட்டமானது. கனமழை காரணத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மியான்மரில் ரக்கைன் மாநிலம் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புயலின் பாதிப்பில் அதிகம் உயிரிழந்தவர்கள் ரோஹிங்கியா அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தை பொறுத்தவரை, 2,500க்கும் அதிகமான வீடுகள் சேதமானது. பல்வேறு பகுதிகளில் அதீத கனமழை பெய்தது. இதில் பலர் காயமடைந்ததாகவும், 3 பேருக்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இந்தியாவில், மிசோரம் பகுதியில் 200 வீடுகள் வரை சேதமடைந்தது. 50 கிராமங்களில் இருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புயலின் தாக்கத்தினால் இலங்கையிலும் சில பகுதிகளில் மழை பொழிவு இருந்தது.

பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த செவிலியர் லூசி :

இங்கிலாந்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செஸ்டர் கவுண்டஸ் மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை செவிலியராக பணிபுரிந்தவர் லூசி லெட்பை. 33 வயதாகும் இவர் பிறந்த குழந்தைகளை பார்த்துகொள்ளும் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரின் கண்காணிப்பில் இருந்த 7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த காரணத்திற்காக இவருக்கு இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வாழ்நாள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது.

7 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்தது மட்டுமின்றி 6 குழந்தைகளை கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டில் இவர் முதலில் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து குற்றம் நிருப்பிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுவிக்கப்பட்டு இறுதியாக, 2020 ஆம் ஆண்டு உறுதியான ஆதாரங்களுடன் அவரை போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு 2023 அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்த குற்றங்களை ஏற்காத லூசி, மருத்துவமனை மேல் குற்றம் சாட்டினார். பிறந்த குழந்தைகளின் உடல்நலம் குறைவாக உள்ள குழந்தைகள் மட்டும் அந்த இடத்தில் சிகிச்சை பெற்று வந்ததால் குழந்தைகள் இறப்பு பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால், செவிலியர் லூசி பணியில் இருக்கும்போது மட்டும் குழந்தைகள் இறந்ததால், மருத்துவமனை அவர்மீது சந்தேகப்பட்டது. விசாரணையில், குழந்தைகளை இன்சுலின் கொடுத்து, வயிற்றில் அல்லது நரம்பில் ஊசி மூலம் காற்று உள்ளிட்டு அல்லது அதிகளவிலான பால் கொடுத்து கொலை செய்ததாக கண்டறியப்பட்டது.

லூசி இதுபோன்று ஈடுபட்டதற்கு முதலில் காரணம் கண்டறியாத நிலையில், போலீசார் அவர் வீட்டில் இருந்து அவர் எழுதிய டைரியை கைப்பற்றினர். அதில் “தான் ஒரு ஈவில் என்றும், இதை நான் தான் செய்தேன்” என்றும் எழுதி இருந்தது. மேலும், அவருக்கும் அந்த மருத்துவமனையில் வேலைசெய்த மற்றொரு மருத்துவருக்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. குழந்தைகளுக்கு மோசமான நிலை ஏற்பட்டால் அவர் வந்து சிகிச்சை அளிப்பார். அப்போது அவரின் கவனத்தை நம்பக்கம் மட்டும் வைத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குழந்தைகளை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இறுதியில் லூசி மனநிலை சரியில்லாதவர் என்பது உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனித வெடிக்குண்டு தாக்குதலில் பாகிஸ்தானில் 52 பேர் பலி :

இந்தாண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் முகம்மது நபியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் மனித வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 52 பேர் உயிரிழந்தனர், சுமார் 70 பேர் பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மகாணத்தில் உள்ள மாஸ்டங் மாவட்டத்தில் முகம்மது நபி பிறந்தநாள் அதாவது மவ்லித் அந்நபி தினத்தை கொண்டாட குழந்தைகள் உட்பட 500 பேர் கூடியிருந்தனர்.

தாக்குதலில் ஏராளமான குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். காயமடைந்தவர்களை தூக்கிகொண்டு ஓடும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் இஸ்லாமிக் மாநில ஆயத குழுவால் நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற இடத்தின் காட்சிகள், காயமடைந்த குழந்தைகளின் வீடியோ வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேபாளத்தை மிரட்டிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் :

இந்தாண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி நேபாளத்தை 6.4 ரிக்டர் அளவைகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் 157 பேர் உயிரிழந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மேற்கு நேபாளத்தில் அமைந்துள்ள ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் பகுதிகளை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தின் தாக்கத்திற்கு பின்பும் 159 அதிர்வுகள் பதிவானதாக தேசிய நிலநடுக்க கண்கணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

9,000 பேர் உயிரிழந்த 2015 நிலநடுக்கத்திற்கு பின்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகபெரிய நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் தாக்கம் காத்துமண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 200 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆசிய கண்டத்தில் இந்தாண்டு ஏற்பட்ட மிகபெரிய இயற்கை பேரிடராக பார்க்கப் படுகிறது.


news18


 



Post a Comment

0 Comments