Ticker

6/recent/ticker-posts

2-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

 (நபி வழியில் தொழுகை)


1. கிப்லாவை முன்னோக்குதல் : 

தொழுகையை ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும்வரை கிப்லா திசையை முன்னோக்குவது கட்டாயமாகும். தொழுகையை முறை தவறி நிறைவேற்றிய ஒருவரைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“வுழுவை பூரணமாக செய்துகொள். பின்னர் கிப்லா திசையை முன்னோக்கி நில்…”(புஹாரி, முஸ்லிம்). 

இது போன்ற இன்னும் பல ஹதீஸ்கள் கிப்லா திசையை முன்னோக்குவதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

[ ஆயினும் வாகனத்தில் பயணிக்கும்போது தொழ நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்குவது கடினமாகலாம்.]

அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒருவர் ஸுன்னத்தான தொழுகையை தொழ விரும்பினால் வாகனத்தில் இருந்தவாறு ஆரம்ப தக்பீரின் போது கிப்லாவை முன்னோக்குவார். பின்னர் வாகனம் கிப்லா திசையல்லாத வேறு திசைகளில் பயணித்தாலும் வாகனம் செல்லும் திசைகளில் தொழுகையை நிறைவுசெய்வது ஆகுமானதாகும்.

“நபியவர்கள் தமது ஒட்டகத்திலிருந்தவாறு ஸுன்னத்தான தொழுகையை தொழ நினைத்தால் கிப்லாவை முன்னோக்கி ஆரம்ப தக்பீர் சொல்வார்கள். பின்னர் வாகனம் செல்வதற்கேற்ப (கிப்லா திசையல்லாத வேறு திசைகளில் வாகனம் பயணித்தாலும்) தொழுகையை தொழுது முடிப்பார்கள்”(அபூதாவூத்). 

ஆனால் வாகனத்திலிருக்கும் ஒரு பயணி பர்ழான தொழுகையை தொழுவதாயின் வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கி தொழ வேண்டும்.

“நபியவர்கள் வாகனத்திலிருக்கும் போது பர்ழான தொழுகையை தொழ நாடினால் வாகனத்திலிருந்து இறங்கி கிப்லாவை முன்னோக்கி தொழுவார்கள்” (புஹாரி, பைஹகி). 

ஆயினும் வாகனத்திலிருந்து இறங்குவது சாத்தியமில்லை, தொழுகை தவறிப் போய்விடும் என்ற நிலையிருந்தால் பர்ழு தொழுகையை வாகனத்திலிருந்தவாறே – அது எத்திசையில் சென்றாலும் நிறைவேற்ற முடியும். ஏனெனில் இதுவொரு இக்கட்டான நிலையாகும். எங்காரணம் கொண்டும் தொழுகையை விட முடியாது. போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கும் போது கூட தொழுகை நேரம் வந்தவுடன் தொழுமாறு பணிக்கும் மார்க்கம் இஸ்லாம். வாகனத்திலிருந்து இறங்க வாய்ப்பும் இல்லை, தொழுகை தவறிப் போகும் நிலையும் இருக்கிறது, கிப்லா திசையை அறியும் வாய்ப்பும் அறவே இல்லை எனும் போது எத்திசையிலேனும் தொழுகையை நிறைவேற்றிட வேண்டும். நிர்ப்பந்த சூழ்நிலைகளில் இவ்வாறு நடந்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

“அல்லாஹ் எவருக்கும் தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுப்பதில்லை” (2:286). 

பின்வரும் ஹதீஸும் இதற்கு ஆதாரமாக அமைகிறது :

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள் : நாங்கள் ஒரு போருக்காக சென்றிருந்தோம். சென்ற இடத்தில் மேகம் மூட்டமாக இருந்ததால் கிப்லா திசையை அறிய முடியவில்லை. கிப்லா திசை பற்றி எங்களுக்குள் சிறு சர்ச்சை எழுந்தது. அதனால் ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த திசையை நோக்கி தொழுதோம். எங்களில் ஒருவர் நாங்கள் தொழுத திசையை குறித்து வைத்திருந்தார்.காலையில் எழுந்து பார்த்த போது நாம் தொழுத திசை கிப்லா திசையல்லாத வேறு திசையாக இருந்தது. நாம் நபியவர்களிடம் இது பற்றி கூறிய போது ‘உங்களது தொழுகை நிறைவேறிவிட்டது” என்று கூறினார்கள். அத்தொழுகையை மீட்டித் தொழுமாறும் நபியவர்கள் எங்களுக்கு கூறவில்லை.(ஹாகிம், பைஹகி).  

(தொடரும்))

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments