கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கழித்து தமது மகனுடன் இணைந்துள்ளார் திருவாட்டி வாங் வென் லியாங்.
இவ்வளவு காலமாக தமது மகன் உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட அவருக்குத் தெரியாமல் இருந்தது.
அவரது மகன் 1980களில் தைவானில் பிறந்தார். சில குடும்ப விவகாரங்கள் தொடர்பாக மகனை அங்கேயே விட்டுவிட்டு திருவாட்டி வாங் சிங்கப்பூர் திரும்பினார். அப்போது அவரது மகனுக்கு ஏறத்தாழ 2 வயது.
அதையடுத்து, தாய்க்கும் மகனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தமது மகனை மீண்டும் பார்க்க வேண்டும் என்று திருவாட்டி வாங்கின் பல்லாண்டு பிரார்த்தனை வீண்போகவில்லை.
டிசம்பர் 21ஆம் தேதியன்று தமது மகனான திரு சு ஹு சின்னுடன் அவர் ஸூம் காணொளி அழைப்பு மூலம் பார்த்துப் பேசினார்.
திரு சுவுக்கு 42 வயதாகிறது. திருவாட்டி வாங்கிற்கு 60 வயதுக்கும் மேலாகிவிட்டது.
“எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஏங்கினேன். நாற்பது ஆண்டுகளாகிவிட்டபோதும், நீ நலமாக இருக்க வேண்டும் என்று நான் ஒவ்வோர் இரவும் வேண்டிக்கொண்டேன்,” என்று தழுதழுக்கும் குரலில் தமது மகனை நலம் விசாரித்தார் திருவாட்டி வாங்.
தமது தாயாரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு திரு சு பல முயற்சிகளை மேற்கொண்டார். சமூக ஊடகம் வாயிலாகவும் திருவாட்டி வாங் முன்பு பணிபுரிந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாகவும் அவர் தமது தாயாரைத் தேடினார்.
ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
திருவாட்டி வாங் இளம் வயதில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றியவர்.
இந்நிலையில், கடைசி முயற்சியாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் உதவியை திரு சு நாடினார். தாம் சிறு பிள்ளையாக இருந்தபோது தமது தாயாருடன் எடுத்துக்கொண்ட படங்களை அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கொடுத்தார்.
அந்தப் பழைய படங்களுடன் அறிக்கை ஒன்று டிசம்பர் 15ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியானது.
இது சிங்கப்பூரில் இருக்கும் திருவாட்டி வாங்கின் உறவினரின் கண்ணில் பட்டது.
உடனடியாக அவர் திருவாட்டி வாங்கிடம் இதைப் பற்றி தெரிவித்தார்.
திருவாட்டி வாங்கும் அவரது மகன் திரு சுவும் ஸூம் காணொளி அழைப்பு மூலம் பார்த்து பேச டிசம்பர் 21ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்தது.
இது உண்மைதானா அல்லது மோசடியா என்ற சந்தேகத்துடன் இருவரும் சந்திப்புக்குத் தயாராகினர்.
திரு சுவிடம் திருவாட்டி வாங் தனிப்பட்ட விவரங்களைப் பற்றி கேள்விகளை எழுப்பினார்.
பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம், உறவினர்களின் பெயர் உட்பட பல கேள்விகளைக் கேட்டார்.
திரு சுவின் பதில்கள் அவருக்குத் திருப்தி அளித்ததை அடுத்து, “நீதான் என் மகன்!” என்று மலர்ந்த முகத்துடன் திருவாட்டி வாங் கூறினார்.
நாற்பது ஆண்டுகள் கழித்து திருவாட்டி வாங்கை திரு சு முதல்முறையாக ‘அம்மா’ என்று அழைத்தார்.
இருவரும் ஏறத்தாழ 40 நிமிடங்களுக்குப் பேசினர். அவர்களது உரையாடல் சீனமொழி மற்றும் மின்னான் கிளைமொழியில் இருந்தது.
தமது குழந்தைப் பருவம் மிகவும் சிரமமானதாக இருந்தது என்று தமது தாயாரிடம் திரு சு, மனபாரத்தைக் கொட்டினார்.
தந்தையின் வியாபாரங்கள் நொடித்துப்போனதை அடுத்து கடன் கொடுத்தவர்களிடமிருந்து தப்பிக்க பல வீடுகள் மாற வேண்டி இருந்ததாக அவர் தெரிவித்தார்.
திரு சுவின் தந்தை 2018ஆம் ஆண்டில் மாண்டார்.
தமது தந்தையின் மூடநம்பிக்கைகளால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து தமது தாயாரிடம் திரு சு பகிர்ந்துகொண்டார்.
திரு சுவின் தந்தை முன்பிலிருந்து அப்படித்தான் என்று திருவாட்டி வாங் கூறினார்.
நோய்வாய்ப்பட்ட தமது பெற்றோரைக் கவனித்துக்கொள்ள தைவானிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் திரும்பியதாக தமது மகனிடம் திருவாட்டி வாங் கூறினார். பெற்றோரைப் பார்த்துக்கொள்வதில் முழு கவனம் செலுத்தியதால் மீண்டும் தைவானுகத்குச் செல்ல முடியாமல்போனதாக அவர் கூறினார்.
கணவரின் குடும்பத்தாருக்குக் கடிதங்கள் எழுதியும் பதில் கிடைக்கவில்லை என்றார் அவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தைவானுக்குத் திரும்பி மகனைத் தேட முயன்றதாக அவர் கூறினார்.
ஆனால் தைவானில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததால் தமக்குத் தெரிந்த இடங்களையோ ஆட்களையோ கண்டுபிடிக்க முடியாமல் போனது என்று திரு சுவிடம் அவர் தெரிவித்தார்.
தாம் பொறியாளராகப் பணியாற்றுவதாகவும் 2020ஆம் ஆண்டில் தமக்கு திருமணமானதாகவும் தமது தாயாரிடம் திரு சு கூறினார். தமது மனைவியைத் தமது தாயாரிடம் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தாயாரைப் பார்த்ததை அடுத்து, தமது மனதில் இருந்த பெரும் பாரத்தை இறக்கிவைத்தது போன்று உணர்வதாக திருவாட்டி வாங்கிடம் திரு சு கூறினார்.
திரு சுவைப் பற்றிய செய்தி கிடைத்ததும் தாம் அழுததாகத் திருவாட்டி வாங் தெரிவித்தார். சந்திப்புக்காகக் காத்திருந்து பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்ததாக அவர் கூறினார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி திருவாட்டி வாங் எதுவும் கூறவில்லை.
“சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக அமைந்தால் நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம். உன்மீது உயிரையே வைத்திருக்கிறேன்,” என்று தமது மகனிடம் திருவாட்டி வாங் தெரிவித்தார்.
tamilmurasu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments