கடற்கரை உருவம்!

கடற்கரை உருவம்!


விடிய விடியத்   தூங்காமலேயே கிடந்தான் குமார்.   நாளை முதன் முதலாய் அந்தக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான்.  புதிதாய் உள்ளே வரும் முதலாமாண்டு மாணவர்கள் மூத்த மாணவர்களால் கேலி என்னும் பெயரில் மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தப்படுவது அக்கல்லூரியின் பிரசித்தி பெற்ற மோசமான வழக்கம்.  கல்லூரி நிர்வாகத்தாலும் சரி, சட்டத்தாலும் சரி, அவ்வழக்கத்தை போக்கவே முடியவில்லை. அதன் காரணமாகவே அக்கல்லூரியில் யாருமே சேர்வதில்லை. 

“என்ன நடக்குமோ?... எப்படியெல்லாம் கேலி  பண்ணுவாங்களோ?...”  என்கிற பயம் அவனை  இரவு முழுவதும் வாட்டி வதைத்தது. 

கனவில் ஒரு உருவம் கடலை நோக்கி தற்கொலை செய்ய ஓடியது.  தண்ணீரில் குதித்த பின் அலைகள் அவ்வுருவத்தைப் புரட்டிப் போட, அது குமார்.

திடுக்கிட்டுக் கண் விழித்து நடுங்கினான்.

மறுநாள்,

ஆர்வமேயில்லாமல் கிளம்பி, அரைகுறையாய்ச் சாப்பிட்டு விட்டு, போகும் போது தாயை ஏனோ 
உற்று உற்றுப்  பார்த்து விட்டு வெளியேறினான்.  “நல்லபடியா திரும்பி வருவேனா?”

கல்லூரி வாயிலுக்குள் நுழைகையில் கால்கள் நடுங்கின.  தொண்டை வறண்டது.. அவனது அச்சத்தை அதிகப்படுத்தும் விதமாய், தூரத்தில் நின்றிருந்த மூத்த மாணவர் கூட்டம் இவனைப் பார்த்ததும் நெருங்கி வர,  “இப்படியே திரும்பி ஓடி விடலாமா?” என்று கூட யோசித்தான். 

அதற்குள் அவர்கள் நெருங்கி வந்து, “முதலாம் ஆண்டா?” என்று கேட்க, வாய் திறந்து பதில் பேசக் கூட முடியாமல், மேலும் கீழுமாய்த் தலையாட்டினான்.

கூட்டத்தின் தலைவன் போலிருந்தவன்  “டேய்…. போய் அதை எடுத்திட்டு வாடா!” என்று கட்டளையாய்ச் சொல்ல,  ஒருத்தன் வேகமாய்ச் சென்று ஒரு தட்டில் எதையோ வைத்து, துணியால் மூடி எடுத்து வந்தான்.

“உள்ளார என்ன இருக்கும்?....செருப்பு…. உள்ளாடை… ஆட்டுத்தலை… மனிதத்தலை?” கற்பனை கன்னா
 பின்னாவென்று ஓடியது குமாருக்கு.

“ம்...திற” ஒரு கரகரப்பான குரல் சொல்ல,தயங்கினான்.

“ம்.. திறப்பா”

நடுங்கும் கைகளால் அத்துணியை விலக்கினான் குமார்.

உள்ளே!

லட்டு… மைசூர்பாக்…. முந்திரி கேக் என எச்சில் ஊற வைக்கும் இனிப்பு வகைகள்.

"நண்பா…நாங்க திருந்திட்டோம்!... எங்க கேலிக் கொள்கையைத் தூக்கி வீசிட்டோம்... இனிமே புதுசா வர்ற முதலாமாண்டு மாணவர்களை இப்படித்தான் வரவேற்கப் போறோம்!” என்றபடி அந்தத் தலைவன் இனிப்பை எடுத்து குமாருக்கு ஊட்டி விட,கண்ணீருடன் விழுங்கினான் குமார்.

அந்தக் கடற்கரை உருவம் அலைகளிலிருந்து மீண்டு புன்னகையோடு கரையேறியது

(முற்றும்)


 



Post a Comment

Previous Post Next Post