சொந்த நாட்டு பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம் : ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் யூதர்கள் !

சொந்த நாட்டு பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம் : ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் யூதர்கள் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பணயக்கைதிகள் உயிரிழந்துள்ளது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்களின் எதிரில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் மூன்று பேர் இருந்த நிலையில், அவர்களை அச்சுறுத்தல் எனக் கருதி இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இது குறித்த தகவலை இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியானதும் இஸ்ரேலில் ராணுவத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பணயக் கைதிகளை விடுவிக்கும் விவகாரம் குறித்து ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நாதென்யாகு 'தாங்க முடியாத துன்பம்' எனக் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kalaignarseithigal


 



Post a Comment

Previous Post Next Post