பில் கேட்ஸ்ஸின் முன்னாள் உதவியாளர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விட பணக்காரராம்..!

பில் கேட்ஸ்ஸின் முன்னாள் உதவியாளர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விட பணக்காரராம்..!


உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் பில்கேட்ஸ் தவறாமல் இடம் பிடித்து விடுவார். ஆனால் பில்கேட்ஸின் முன்னாள் உதவியாளர் கூட உலகின் டாப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த நபர் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பர்க்கை விட பணக்காரர் என்பதுதான். புளூம்பர்க் பில்லியர்ஸ் இண்டெக்ஸ்ஸின் படி பில்கேட்ஸின் முன்னாள் உதவியாளரான ஸ்டீவ் பால்மர் என்பவரின் சொத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தற்பொழுது உலகின் பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். மார்க் ஸுக்கர்பெர்க்கை மட்டுமல்லாமல், வாரன் பஃபெட், லாரி எலிசன் உள்ளிட்ட உலக பணக்காரர்களை முந்தி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஸ்டீவ். மிக விரைவில் இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் தனது முன்னாள் முதலாளியான பில் கேட்சையே முந்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஸ்டீவ் பால்மரின் சொத்து மதிப்பு பற்றி எவ்வளவு தெரியுமா?

லாரி எலிஸன் சொத்து மதிப்பு $114 பில்லியன்

வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு $111 பில்லியன்

மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு $108 பில்லியன்

இந்த மூவரையும் மிஞ்சி, $115 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஸ்டீவ் பால்மர் முன்னே இருக்கிறார். தற்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டீவ் பாழ்மருக்கு எப்படி இவ்வளவு சொத்து சேர்ந்தது என்ற கேள்விக்கு இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் ஆக பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து கணக்கிட வேண்டும். 1980 ஆம் ஆண்டு இவர் மைக்ரோசாப்ட்டில் அசிஸ்டென்டாக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு ஆண்டுக்கு $50,000 சம்பளம் வழங்கப்பட்டது. கூடுதலாக, லாபத்தில் 10% அளிக்கப்பட்டு வந்தது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வளர வளர லாபத்தில் கிடைக்கும் பங்குகளின் மதிப்பும், எண்ணிக்கையும் அதிகரித்தன. அதுமட்டுமில்லாமல் இந்தப் பங்குகளை இவர் டிரேட் செய்ய விரும்பினார்.

பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் அர்ப்பணிப்புடன் வேலை செய்து வந்த பால்மர் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று, 2000 முதல் 2014 வரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். இவர் ஓய்வு பெறும் பொழுது நிறுவனத்தின் 333 மில்லியன் ஷேர்கள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நான்கு சதவீத பங்குகளை குறிக்கும். பால்மர் தன்னிடம் இருக்கும் பங்குகளை டிரேடிங் செய்தாலும் கூட பெரும்பாலான பங்குகளை இப்போது வரை இவர் தான் வைத்திருக்கிறார். இதனுடைய மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியிலிருந்த காலத்தில் பங்குகளுக்கு வழங்கப்படும் டிவிடெண்டுகள் மூலமாகவே பல பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் பங்குகளை வைத்திருப்பதால் தொடர்ச்சியா பால்மரின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் chatgptஐ உருவாக்கிய openai போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இது கூகுளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. இந்த முதலீடு மைக்ரோசாப்ட்டின் பங்குகளின் மதிப்பை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆண்டு மட்டுமே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் 38% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பால்மர் உலகத்தின் பணக்கார பட்டியலில் இடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Source:news18


 



Post a Comment

Previous Post Next Post