சேலை!

சேலை!


இனிப்பு நோயால்
இளைத்து வந்த அம்மாவின்
கடைசி நாட்கள்
கசப்பானவை

விரும்பிய உணவெல்லாம்
விரோதிகளாக மாற
மருந்தும் மாத்திரைகளுமே
தோழமையாக இருந்தன

அம்மாவை 
கட்டில் நேசித்ததால்
இலவசமாக இணைந்தன
படுக்கைப் புண்கள்

அம்மா 
சில சமயம்
கஸ்தூரி மஞ்சள் பொடி
கேட்பாங்க 

சில சமயம்
வாழைப்பழ அப்பம்
கேட்பாங்க 

சில சமயம்
புளிப்பில்லாத
ஆரஞ்சு பழம் 
கேட்பாங்க

அதிகமாக
சர்க்கரை கேட்டு
அடம் புடிப்பாங்க

அம்மாவுக்கு ஒவ்வாத
பொருட்களை புறந்தள்ளி
சிலவற்றை கரம் சேர்ப்பேன்

ஒரு தடவை
" ஒங்கையால ஒரு பட்டுப்புடவை
எடுத்துத் தருவியா மொவனே"
என ஆசையாக கேட்டாங்க 
அம்மா

"வாங்கித் தருகிறேன்" என
வாக்குறுதி கொடுத்த நான்
நிலை குலைந்து போனேன்

மூத்த மகனின்
கல்விக் கட்டணம்
ஒரு மாதத்தை தள்ளி வைத்தது

மின் கட்டணமும்
எரிவாயு உருளையும்
இன்னொரு மாதத்தை
விழுங்கியது

அப்பாவின்
கண் சிகிட்சையால்
மீண்டும் ஒரு மாதம்
நீண்டு போனது

புதிய செலவுகள்
புலப்படாத 
வரும் மாதத்தின்
முதல் தேதிக்காய் 
காத்திருந்தேன் 

"பிள்ளைய கஷ்டப்படுத்தக் கூடாது" என்ற 
எண்ணத்திலோ என்னவோ
முதல் தேதிக்கு ஒருநாள்
முன்னதாகவே
மறைந்து போனாங்க அம்மா 

இன்னும்
நினைவில் நிற்கிறது
சேலை...


ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.
9487956511


 



Post a Comment

Previous Post Next Post