கொழும்பு வடக்கு பகுதியைச் சேர்ந்த காதி நீதிபதி ஒருவர் 7500/= ரூபாய் லஞ்சம் பெற்றார், அல்லது பெறமுற்பட்டார் என்ற குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறைப் படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வானது சமூகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏற்கனவே காதி நீதி மன்றங்கள் பொது நீதிமன்றங்களுக்கு கீழ் கொண்டுவரப்படல் வேண்டும், பெண் காதிகள் நியமிக்கப்பட வேண்டும், என்ற சர்ச்சைகளுக்கும் கோஷங்களுக்கும் ஒரு உரம் போடுவதாக அமைகின்றது.
காதி நீதிமன்றங்கள் என்பது, நமக்கு நமது முன்னோர்களால் பெற்றுத் தரப்பட்ட ஒரு வரப்பிரசாதம். ஒரு உரிமை. அதை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாத ஒரு சமூகமாக இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் மாறி இருப்பது நம் சமூகத்தின் துறதிஷ்டவசமேயாகும். இதுபற்றிய சமூகத்தின் முக்கயஸ்தர்களோ, சமூக ஆன்மிக நிறுவணங்களே எந்தவிதமான கவனங்களையும் செலுத்துவததாகவோ காண்பதற்கில்லை.
இன்று நமது நாட்டைப் பொறுத்தவரையில், காதித்துறையில் உள்ளவர்களின் மீது லஞ்சங்கள் சம்பந்தமாகவும், மற்றும் வேறு விதமான பிரச்சினைகள் சம்பந்தமாக விமர்சனங்கள் நிறையவே காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சினையை பொறுத்தவரையில் லஞ்சம் வாங்கியது பாரதூரமான குற்றம். வசதியுள்ள தரப்பு பணத்தால் தமக்கு ஏதுவாக விடங்களை சாதித்துக்கொள்ளும் போது, வசதி அற்ற தரப்பு மிதிக்கப்படுகிறது. அங்கு நீதி நிலை நாட்டப்படுவதில்லை . நீதி தவறி நடக்கும் காதிகளின் 80% நடவடிக்கைகள் இவ்வாறே காணப்படுகின்றன.
இந்நிலையில் அரசு இதற்காக கொடுக்கும் சம்பளம் 7500/= ருபா செயலாளரின் கொடுப்பனவு மற்றும் காரியாலயத்திற்கான இதர கொடுப்பனவர்கள் 6250/= ஆக மொத்தம் 13750 /= இது 1953 ஆம் ஆண்டு நியமித்த தொகையா ? எனவே இதை நீதிமன்ற செலவுகளுக்காக என அறிமுகமானவர்களிடம் கை நீட்டும் காதிகள், காலப்போக்கில் இதை ஒரு வரப்பிரசாதமாக மாற்றிக் கொள்கின்றனர்.
ஒரு வசதியற்ற காதி ஒருவர், நீதிமன்றத்தை நடத்திச் செல்வதற்கு இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஒருவரிடம் உதவித்தொகையை பெறுவதற்கு அல்லது லஞ்சத்தை பெறுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றார். அப்போது உதவி செய்தவர் பக்கம் சார்பாக சாய்வதற்கு அவர் கட்டாயப்படுத்தப்படுகின்றார். இதற்கும் நம் சமூகமே காரணமாகின்றன.இவ்வாறான சேவைக்கு வந்த காதிகள் சிலர், காதித்தொழிலில் கோடீஸ்வரர்களான வரலாறுகளும் உண்டு.
காதி நீதித்துறையில் லஞ்சம் பெற்றவர், மேலும், பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக சட்ட தடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவைகளுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறானவர்கள் குறிப்பிட்ட துறையில் இருந்து ஆற்றப்படவும் வேண்டும்.
பலரின் காதி நீதிமன்ற விடயங்களில் அசாதாரணங்களை அறிந்து கொண்ட நானும், ஒரு வகையில் ஒரு படிப்பினைக்காக சமூகம் திருந்துவதற்காக இவ்வாறான ஒரு சிலர்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த வேளையில் ஏதோ ஒருவர் ஒருவர் செய்துவிட்டார். இது சமூகத்தில் இத்துறையில் உள்ள லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். குறிப்பிட்டவர் லஞ்சம் வாங்க முற்பட்டிருந்தால், அல்லது வாங்கி இருந்தால், அவர் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை.
மேலும் இதில் மாறாக சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியும் உண்டு. அவை பற்றி நாம் இன்று வரை சிந்திக்க தவறி விட்டோம்.காதிகள் லஞ்சம் வாங்குகின்றார்கள், என்ற கோஷம் எழுந்த போதிலும், இதன் எதிர்மறையான விடயங்களை பற்றி நாம் சிந்திக்கவில்லை.
மேற்படி கைது செய்யப்பட்டவர் தான் நீதிமன்ற நிர்வாக செலவுகளுக்காக ஒரு தொகை பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், அவ்வாறான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் அறிய கிடைத்தது. சில வேலை அவர் சொல்லும் காரணம் சரியானதாக இருந்திருக்கலாம். அது ஒரு உதவித்தொகையாக அவர் பெற்றிருக்கலாம். ஆனால் அரச உத்தியோகத்தில் தனது சேவைக்காக வாங்குவது லஞ்சமாகவே கருதப்படுகின்றது. இது சட்டப்படி குற்றமாகும்.
எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர், வியாபாரத் துறையைச் சேர்ந்தவர், வசதியானவர், காதிகள் இன்றி அல்லல் படும் மக்களை நினைத்து அல்லாஹ்வுக்குப் பயந்தவராக சில வருடங்கள் தனது சொந்தச் செலவில் சமூகத்திற்கான காதிச் சேவை செய்து வந்தார். என்னுடன் மிக நெருங்கியவர் என்பதனால், இத்துறையில் அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் என்பதை நானும் அறிவேன்.
அவர் இருக்கும் போது அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் முன்வைத்து சமூகத்தின் முன் விமர்சிப்பது பொருத்தம் என நினைக்கின்றேன்.
பொதுவாக காதிகளுக்கு நாடளாவிய ரீதியில் இருக்கும் பொதுவான பிரச்சினை. நிரந்தரமான காரியாலயம் இல்லை. விடுமுறை நாட்களில் தமது பொதிகளுடன் ஒரு பாடசாலையை நோக்கி செல்ல வேண்டும். அல்லது ஒரு பள்ளிவாசலை நோக்கிச் செல்ல வேண்டும். சிலவேலைகளில் சண்டைய சச்சரவுகள் ஏற்படும்போது அங்கிருந்து விரட்டியும் விடுகின்றனர்.
காதிகளுக்கு அரசாங்கம் வழங்கும் சம்பளம் மிகவும் குறைவானதாகும். இதில் தனது காரியாலயத்திற்கு தேவையான பேனாக்கள் பேப்பர்கள் வாங்கவே போதாத நிலை. இதை வைத்துத்தான் காதியானவர் தனது அலுவலக போக்குவருந்துக்களை மேற்கொள்ளவும் வேண்டும். மேலும் காதி தனது ஆலோசகர்களாக ஊரில் சில ஓய்வு பெற்ற, வயதில் மூத்த சிலரை நியமித்திருப்பார். சில வேலை அவர்களுக்கான போக்கு வருத்துக்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் வேண்டும். நீதிமன்றம் காலையில் ஆரம்பித்து மதியம் வரை, அல்லது மாலை வரை நடைபெறும். அப்போது அவர்களுக்கான தேநீர் சிற்றுண்டிச் செலவுகள்,மேலும் சச்சரவுகள் ஏற்படுவதை தடுக்க இரு பொலீஸ் அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கான சாப்பாடு தேநீர் செலவுகள். என மொத்தமாக மாதந்தம் சுமார் 50 ஆயிரத்தை அண்மித்த ஒரு செலவு காணப்படுகின்றது. ஆனால் இதற்காக அரசு வழங்கும் தொகை 13750 /= மட்டுமே.
எனவே எமது பாதுகாக்கப்பட வேண்டிய காதி நீதிமன்ற உரிமைகளை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்கத் தெரியாத ஒரு சமூகமாக நாம் இன்று மாறி இருப்பதை விட்டும் கவலைப்பட வேண்டும். ஒரு காதி முன் நீதிமன்ற எல்லைக்குள் குறைந்த அளவு சுமார் 30 பள்ளிவாசலுக்கு மேல் காணப்படுகின்றன. எமது இந்த உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சமூகத்தின் இன்றியமையாத தேவையாகிய காதி நீதிமன்றை பாதுகாத்துக் கொள்ள ஒரு பள்ளிவாயிலில் இருந்து மாதம் ஒன்றிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து உதவினாலும் இவ்வாறான விடயங்களை தடுக்க உதவுவதோடு காதிகளை உரிமையுடன் தட்டிக் கேட்கும் ஒரு உரிமையும் சமூகத்திற்கு கிடைக்கின்றது.
இது போன்ற ஆக்க பூர்வமான முயற்சிகள் சில கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, இவ்வாறான சிறந்த முன்மாதிரிகள் நகர்புரங்களில் காணமுடியவில்லை. எனவே தொடர்ந்து வரும் காலங்களில் எமது உரிமையையும் சமூக மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள நாம் சிந்திக்க வேண்டும்.
காதி நீதிமன்றங்கள் தொடர்பான சில வித்தியாசமான புகார்களும் உண்டு. அவற்றை திறந்தவெளியில் வெளிப்படையாக எழுத முடியாவிட்டாலும் இன்று பொதுவாக பேசப்படும் விடயங்களாகும்.
திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்.
சட்டம் போட்டுத் தடுக்கும் கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும்.
திருணனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒலிக்க முடியாதாம்.
ஒழுக்கம் நன்னடத்தை மரியாதை தொடர்பில் இவ்வளவுதான் கூச்சிலிட்டாலும், சமூகமானம், மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய எமது உரிமைகள் தொடர்பில் இவர்கள் தானாக அக்கறை கொள்ளாத வரையில், இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து நமது இந்த உரிமையை பாதுகாத்துக் கொள்வதுமிகவும் கடினமான விடயமாகும்.
ஆக மொத்தமாக இது போன்ற அநியாயங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவை ஒரு விழிப்புணர்வை சமூகமயமாக்கல் வேண்டும்.
காதி என்பவர் எமது மன வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு கானும் இறுதியானவர் அல்ல. காதிகள் நெறிமுறை தவறும் பட்சத்தில் காதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஒரு பொதுமகனால் முடியும் என்பதையும், அதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்திருத்தல் காதி என்னும் போர்வைக்குள்ஒளிந்து நிற்கும் காவாலிகளை சமூகத்தில் இருந்து தூரமாக்க வழிவகுக்கும்.
எனவே காதி நீதிமன்றங்களை வழிநடத்த வழிகளை தேடுவதுபோல், காதி நீதிமன்றங்களின்மகத்துவத்தையும் தூய்மையையும் பாதுகாக்க சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும்.
பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கட்டுரை