அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில வாரங்களில், இஸ்ரேல் சிறையில் வைக்கப்பட்டிருந்த தங்கள் எல்லோரையும் காவலர்கள் ஒட்டுமொத்தமாகத் துன்புறுத்தி தண்டித்ததாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலத்தீனிய கைதிகள் கூறியுள்ளனர்.
தாம் தடிகளால் தாக்கப்பட்டதாகவும், வாய்க்கவசம் அணிந்த நாய்களைத் தம்மீது ஏவி விட்டதாகவும், அவர்களின் உடைகள், உணவு மற்றும் போர்வைகள் பறிக்கப்பட்டதாகவும் கைதிகள் விவரித்துள்ளனர்.
ஒரு பெண் கைதி தனக்கு பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள் இருமுறை கண்ணீர்ப்புகை குண்டுகளை கைதிகள் மீது காவலர்கள் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
பிபிசி மொத்தம் ஆறு பேரிடம் பேசியது, அவர்கள் அனைவரும் சிறையிலிருந்து வெளியேறும் முன் தாக்கப்பட்டதாகக் கூறினர்.
சில காவலர்கள் கைவிலங்கிடப்பட்ட கைதிகள் மீது சிறுநீர் கழித்ததாகக் குற்றம் சாட்டப்படுவதாக பாலத்தீனிய கைதிகள் சங்கம் கூறுகிறது. கடந்த ஏழு வாரங்களில் ஆறு கைதிகள் இஸ்ரேலிய காவலில் இறந்துள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், தங்களது சிறையில் இருக்கும் கைதிகள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டே சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
காஸாவில் ஹமாஸால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டதற்கு பதிலாக, இந்த வாரம் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டவர்களில் 18 வயதான முகமது நஜலும் ஒருவர்.
ஆகஸ்ட் மாதம் முதல் குற்றப்பத்திரிகை பதியப்படாமல் நஃப்ஹா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியவில்லை என்று முகமது நஜல் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், பத்து நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலிய சிறைக் காவலர்கள் மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அவரது அறைக்குள் வந்து கைதிகளின் பெயரைக் சத்தமாக கத்தி தங்களை தூண்ட முயன்றதாக தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் எதிர்வினையாற்றவில்லை என்றதும், அவர்கள் எங்களை அடிக்க ஆரம்பித்தார்கள்," என்று அவர் கூறுகிறார்.
“இளைஞர்களை முன் வரிசையிலும் வயதானவர்களை பின் வரிசையிலும் அவர்கள் நிறுத்தினர். பின்னர், அவர்கள் என்னை அழைத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். நான் என் தலையைப் பாதுகாக்க முயன்றேன், அவர்கள் என் கால்களையும் கைகளையும் உடைக்க முயன்றார்கள்," என நஜல் கூறினார்.
திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட நஜலின் மருத்துவ அறிக்கையில் அவரது இரு கைகளிலும் எலும்பு முறிவு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார்.
‘என் கைகள் உடைக்கப்பட்டன’
நஜல் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில், நான் மிகவும் வேதனையில் இருந்தேன். பின்னர் சிறிது நேரம் கழித்து, எனது கை எலும்புகள் உடைந்துவிட்டன என்று எனக்குத் தெரியும். அதனால் நான் எனது கையை கழிப்பறைக்குச் செல்லும்போது மட்டுமே பயன்படுத்தினேன்," எனத் தெரிவித்தார்.
மற்ற கைதிகள் தனக்கு சாப்பிடவும், குடிக்கவும், குளியலறையைப் பயன்படுத்தவும் உதவினார்கள் என்றும், மீண்டும் அடிக்கப்படுவார்களோ என்ற பயத்தில் காவலர்களிடம் மருத்துவ உதவி கேட்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இஸ்ரேல் சிறைத்துறை முகமதுவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. சிறையிலிருந்து வெளியேறும் முன் ஒரு மருத்துவரால் அவர் பரிசோதிக்கப்பட்டார், எந்த மருத்துவ பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் சிறையிலிருந்து வெளியேறி செஞ்சிலுவைச் சங்கப் பேருந்தில் ஏறும் வீடியோவையும் சிறைத்துறை வெளியிட்டு நஜலின் குற்றச்சாட்டு பொய் எனக் கூறியது.
ஆனால், முகமது கூறுகையில், தனக்கு முதல் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டதே செஞ்சிலுவை சங்கத்தில்தான் எனத் தெரிவித்தார்.
‘நாயை என் மீது ஏவிவிட்டனர்’
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய சிறைகளில் காவலர்களின் நடந்துகொண்ட விதமே மாறிவிட்டதாக நஜல் கூறுகிறார்.
காவலர்கள் அவர்களை உதைத்ததாகவும், அவர்களை அடிக்க தடிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார். மேலும் ஒரு காவலர் தனது முகத்தில் மிதித்ததாகவும் சிறை அதிகாரிகள் நாய்களை வைத்து தங்களை தாக்க வைத்ததாகவும் அவர் கூறினார்.
"அவர்கள் மெத்தைகள், எங்கள் உடைகள், தலையணைகளை வெளியே எடுத்து, எங்கள் உணவை தரையில் வீசினர்,” என்றும் அவர் கூறினார்.
"என்னைத் தாக்கும் நாய் மிகவும் கூர்மையான விளிம்புகளைக் கொண்ட முகவாய் அணிந்திருந்தது. அதன் முகவாய் மற்றும் நகங்கள் என் உடல் முழுவதும் அடையாளங்களை விட்டுச் சென்றன," என்று முகமது கூறுகிறார்.
‘கைதிகள் மீது சிறுநீர் கழித்தினர்’
மெகிடோ சிறைச்சாலையில் இது போன்ற தாக்குதல்கள் இரண்டு முறை நடந்தன என்று அவர் கூறுகிறார். மேலும் நாஃபா சிறைச்சாலையில் அவரால் கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு தாக்குதல்கள் நடந்தன என அவர் தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேலின் சிறைகளுக்குள் இதேபோன்ற தாக்குதல்களை பிபிசி பேசிய மற்ற பாலத்தீனக் கைதிகளும் தெரிவித்துள்ளனர். இது ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு பாலத்தீனிய கைதிகள் மீது நடத்தப்பட்ட 'பழிவாங்கல்' என்று அவர்கள் புரிந்துகொண்டதாகக் அவர்கள் கூறினர்.
பாலத்தீனக் கைதிகள் சங்கத்தின் தலைவர் அப்துல்லா அல்-ஜாகாரி பிபிசியிடம் கூறுகையில், “பல கைதிகள் அவர்களது முகத்திலும் உடலிலும் தாக்கப்படுவதைக் கண்டதாக சக கைதிகள் எங்களிடம் தெரிவித்தனர். மேலும், காவலர்கள் கைவிலங்கிட்ட கைதிகள் மீது சிறுநீர் கழித்ததாகவும் கேள்விப்பட்டோம்,” என அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு இஸ்ரேல் சிறைத்துறையிடம் கேட்டோம். அனைத்து கைதிகளும் சட்டத்தின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தேவையான அனைத்து அடிப்படை உரிமைகளும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"நீங்கள் விவரித்த உரிமைகோரல்கள் எங்களுக்குத் தெரியாது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "இருப்பினும், கைதிகள் மற்றும் கைதிகளுக்கு புகார் அளிக்க உரிமை உண்டு, அது அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் முழுமையாக ஆய்வு செய்யப்படும்," அந்த அறிக்கை கூறியது.
‘பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல் விடுத்தனர்’
இந்த வாரத் தொடக்கத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட லாமா கட்டர், அக்டோபரின் பிற்பகுதியில் கைது செய்யப்பட்ட உடனேயே, உளவுத்துறை அதிகாரி ஒருவர் "பாலியல் வல்லுறவு செய்வதாக வெளிப்படையாக மிரட்டியதாக," சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
"எனக்குக் கைவிலங்கிட்டி என் கண்களைக் கட்டினர்," என்று அவர் வீடியோவில் ஒரு நேர்காணலில் கூறினார். "என்னை வல்லுறவு செய்வதாக மிரட்டினார்கள். என்னை மிரட்டுவதே குறிக்கோள் என்பது தெளிவாகத் தெரிந்தது," என்றார்.
அவரின் இந்தக் குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேல் சிறைத்துறை மறுத்துள்ளது.
ஆனால் பெண் கைதிகள் - தான் உட்பட - உண்மையில் பாலியல் வல்லுறவு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், டாமன் சிறைச்சாலையில் உள்ள அவர்களது தங்குமிடத்தில் கைதிகளுக்கு எதிராக கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் லாமா கட்டர் பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு காவலில் வைக்கப்பட்ட பாலத்தீனர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. அன்று முதல் 6 பாலஸ்தீன கைதிகள் சிறையில் இறந்துள்ளனர்.
இதைப் பற்றிய பிபிசியின் கேள்விக்கு இஸ்ரேல் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் கடந்த வாரங்களில் 4 கைதிகள் நான்கு வெவ்வேறு தேதிகளில் இறந்துள்ளனர் என்றும், தங்களுக்கு மரணத்திற்கான காரணங்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் கூறியது.
கபாட்டியா கிராமத்தைச் சேர்ந்த முகமது நஜல் தனது கைகள் தனக்கு இன்னும் வலியைக் கொடுக்கின்றன எனத் தெரிவித்தார்.
அவருக்கு தெரிந்த வாலிபர் ஒருவர் சிறையில் இருந்து திரும்பவில்லை என்று அவரது சகோதரர் முதாஸ் பிபிசியிடம் கூறினார்.
"இது எங்களுக்குத் தெரிந்த முகமது அல்ல," என்று அவர் கூறினார். "அவர் தைரியமானவர், தைரியமானவர். இப்போது அவரது இதயம் உடைந்து பயத்தால் நிறைந்துள்ளது," என அவர் கூறினார்.
bbc
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்