Ticker

6/recent/ticker-posts

இஸ்ரேலை கைவிடும் மேற்குலகம்: உடனடி யுத்த நிறுத்தம் கோரும் பிரான்ஸ்

காசாவில் உடனடி மற்றும் நீடித்த யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

காசாவின் ரஃபா நகரில் இஸ்ரேலின் தாக்குதலில் தமது நாட்டு பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளமைக்கு பிரான்ஸ்சின் உயர்மட்ட இராஜதந்திரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

காசாவில் பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட பல பொதுமக்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் பலியாகும் சம்பவங்கள் சர்வதேச ரீதியான கண்டனங்களுக்கு உள்ளாக ஆரம்பித்துள்ளன.

இதுவரை காசாவில் ஹமாஸ் இயக்கம் மீதான படை நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிவந்த அமெரிக்கா உள்ளிட்ட அதன் மேற்குலக நட்பு நாடுகள் தற்போது இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டிக்க தலைப்பட்டுள்ளன.

ஏற்கனவே நீடித்த யுத்த நிறுத்தத்திற்கு பிரித்தானிய மற்றும் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரான்ஸும் தற்போது வலியுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு வலயம் என முன்னர் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தமது நாட்டு பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 2 ஐரோப்பா மற்றும் வெளிவிவகாரங்களுக்கான அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களுக்கான சூழ்நிலைகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் முடிந்தவரை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டு ஊழியர் மற்றும் சக பணியாளர்கள் 10 பேருடன் அவர்களது குடும்பத்தினரும் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அனைவரும் பலியாகியிருந்தனர்.

குறித்த ஊழியர் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக காசாவில் பணிபுரிந்துவருவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசா மீதான கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் மீதான அழுத்தங்கள் அதிகரித்துவரும் சூழலில் பிரான்ஸ் வெளிவவிகார அமைச்சின் கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 19 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் 80 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பொதுமக்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போரினால் அழிவடைந்த பலஸ்தீன பிராந்தியத்தின் நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கெத்தரின் கொலொன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் ரெல் அவீவில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் போது பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை தாம் கலந்துரையாடலுக்கு தயாரில்லை என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்து மத்தியஸ்தம் வகிக்கும் கட்டாரும் இஸ்ரேலிய அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல்களால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மக்கள் உதவிக்காக போராடிவருகின்றனர். 

tamilwin



 



Post a Comment

0 Comments