ஆழிப்பேரலையின் 19வது வருட நினைவு தினம்!

ஆழிப்பேரலையின் 19வது வருட நினைவு தினம்!


டிஸம்பர் 26ம் திகதி சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 19 வருடங்களாகின்றன. 

சுனாமி பற்றி இலங்கையர் அறிந்து கொண்டதும், அனர்த்தம் பற்றி அவர்கள் புரிந்து கொண்டதும் கடந்த 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதிதான். 

25ம் திகதி இரவு நத்தார் களியாட்டங்களில் இலயித்திருந்த மக்கள், பிறக்கப்போகும் புதுவருடத்தைக் கொண்டாடக்காத்திருந்த வேளையில், 26ம் திகதி காலை இவ்வனர்த்தம் நிகழ்ந்தது. 

9.00 ரிச்டர் அளவிலான பாரிய  பூமியதிர்ச்சி இலங்கை நேரப்படி அதிகாலை 6.58க்கு சுமாத்ராதீவை அண்டியுள்ள கடற்பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றர் கடலாழத்தில் ஏற்பட்டது. 

இப்பூமியதிர்வானது இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது ஹிரோசீமா-நாகசாகி நகரங்களில்  போடப்பட்ட பாரிய குண்டுவீச்சை விடவும் 36,700 மடங்கு சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதன்போது ஏற்பட்ட கடலலைகளின் வேகமானது சுமார் 970 கிலோ மீட்டராக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ரிச்டர் அளவு கொண்டு பூமியதிர்வின் சக்தியைக் கணிக்கத் தொடங்கியது 1935ம் ஆண்டிலிருந்தேயாகும். இதனை அறிமுகப்படுத்தியவர் சார்ள்ஸ் எப். ரிச்டர் என்பவராவார். 

ரிச்டர் அளவு 0 முதல் 10 வரையிலேயே  கணிக்கப்படுகின்றது.  பூமியதிர்வு  மைக்ரோ மீற்றரில் 0 க்கு  1 மைக்ரோ மீற்றர் என்றால், 1 க்கு 10 மைக்ரோ மீற்றர் என்றும், 2 க்கு 100 மைக்ரோ மீற்றர் என்றும் கணிக்கப்படுகின்றது. இதன்படி 9 ரிச்டர் அளவீட்டின் பூமியதிர்வானது 100 கோடி மைக்ரோ மீற்றர் பலம் வாய்ந்ததாகும். எது எவ்வாறிருந்தபோதிலும் ரிச்டர் அளவு 11க்கு மேல் பூமியதிர்வு வரும் சாத்தியமில்லை என்பது புவி ஆய்வாளர்களின் கருத்தாகும். 
டிஸம்பர்  மாதம் 26ம் திகதி அதிகாலை கடலுக்கடியில் ஏற்பட்ட பூமியதிர்வானது  சுனாமி அலையை ஏற்படுத்தி, சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னரே அது  இலங்கையின்  கடலோரங்களைத் தாக்கியது. 

இந்து சமுத்திரத்திலுள்ள சுமார் பதினொன்றிற்கும் மேற்பட்ட தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பழிகொண்டு, இலட்சக்கணக்கானவர்களின் உடைமைகளை அழித்தொழித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை அகதிகளாக்கிவிட்ட பின்னரே சுனாமி என்ற ஆழிப்பேரலையின் அனர்த்தங்களையும், அதன் அர்த்தத்தையும்  இப்பிராந்திய மக்கள் சரிவரப் புரிந்துகொண்டனர் எனலாம். 

குழந்தைகளை இழந்த பெற்றோர், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், ஆசிரியர்களை இழந்த மாணவர்கள், மாணவர்களை இழந்த ஆசிரியர்கள், உற்றார், உறவினர், நண்பர்களை இழந்தவர்கள், அன்பான அயலவர்களையும், ஒன்றாக வேலை செய்தவர்களையும், சகபிரயாணிகளையும் இழந்து நின்ற பல்லாயிரக்கணக்கான மக்களைத் தவிக்கச் செய்துவிட்டது இவ்வாழிப்பேரலை. 

இப்பேரலையானது கடற்கரைகளில் ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரங்களுக்கும் மேலாக உயர்ந்ததாகவும், சிலர் தென்னங்குறுத்துவரை வீசி எறியப்பட்டு, அவற்றில் தங்கி நின்று உயிர் தப்பியதாகவும் அறிய முடிந்தது.  30 - 40 அடிகள் வரை உயர்ந்து சென்ற இப்பேரலையானது சில இடங்களில் 90 அடிகள் வரை உயர்ந்ததாகவும் அந்நாட்களில் சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

1899க்கு பின்னர் உலகில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சிகளில் ஒன்றாகவே  இது கருதப்படுகின்றது. 1964க்குப் பின்னர் ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த பூமியதிர்ச்சியும் இதுவேயாகும். இதனால் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலைத்தீவு, பங்களாதேஷ், மியன்மார், சோமாலியா, தன்சானியா, கென்யா போன்ற பதினொரு நாடுகளின் கடற்கரைவாசிகளும், கடற்கரைகளில் உல்லாசப் பயணத்தைக் கழித்துக் கொண்டிருந்தோரும் தமது உயிர்களையும், உடைமைகளையும் இழந்தனர். 
ஆழிப்பேரலை ஏற்பட்டு சுமார் மூன்று மாதங்களின் பின்னர் ஊர்ஜிதமான தகவல்களின்படி இந்தோனேசியாவிலேயே அதிகமானோர் இறந்துள்ளனர். அது சுமார் 2,36,012 என்றும், அடுத்தபடியாக 31,150 இலங்கையர்களும், இந்தியாவில் 16,749 பேரும், அந்தமான் - நிகோபார் தீவுகளில் 1925 பேரும், தாய்லாந்தில் 5395 பேரும், சோமாலியாவில் 298 பேரும், மாலைத்தீவில் 82 பேரும், மலேசியாவில் 68 பேரும் மியன்மாரில் 69 பேரும், பங்களாதேசில் 2 பேரும், கென்யாவில் ஒருவருமாக இறந்துள்ளதோடு, பாதிப்புக்குள்ளான நாடுகளில் சுமார் 14,374 பேர்கள் காணாமற்போயினர்.  இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் மாத்திரம் இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழக்க நேர்ந்தது. 

இலங்கையின் கடற்கரை நீளம் சுமார் 1675 கிலோ மீற்றர்களாகும். நாட்டின் முழுச் சனத்தொகையில் 33% மக்கள் கடல் சார்ந்த பிரதேசங்களிலேயே வாழ்கின்றனர். நாட்டின் நகரங்கள் 65% கடலோரங்களிலேயே அமைந்துள்ளன. 

இலங்கைக் கடற்கரையைச் சுற்றியுள்ள 12 துறைமுகங்களில் 10 அனர்த்தம் காரணமாகச் சேதமடைந்தன. அனர்த்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்குள்ளான கடற்கரைவாசிகள் 1,77,785 என்றாலும், கடலை அண்டித்தொழில் புரிந்த சுமார் எட்டு இலட்சம் பேர்
பாதிப்புக்கப்பட்டனர். இவ்வனர்த்தம் காரணமாக இலங்கையில் தாய், தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் 1060 பேர்கள் என்றும், தாயை அல்லது தந்தையை மட்டும் இழந்தோர் சுமார் 3414 பேர்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

சுனாமி அனர்த்தம் காரணமாக வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான வைத்தியசாலைகள் சேதமடைந்தன. வைத்திய சேவைக்கு சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக அறிய முடிகின்றது. அனர்த்தம் காரணமாக வடக்கு-கிழக்குப் பகுதிகளில் சுமார் 430 கிலோ மீற்றர் நெடுஞ்சாலைகளும், அதனோடிணைந்த பாலங்கள் 26ம் பழுதடைந்தன. அத்தோடு 163 கீலோ மீற்றர் புகையிரத வீதிகளும், அதனோடினைந்த 6 பாலங்களும் பாதிப்புற்றன. 

நிலநடுக்கம் அல்லது பூமியதிர்ச்சி என்பது இருவகைகளில்  உண்டாகலாம். ஒன்று தரைப்பகுதிகளில் ஏற்படுதன் மூலம், தரைப்பிரதேசங்களை அதிர்வுக்குள்ளாக்கி, நிலையான சொத்துக்களை உலுப்புவதன் மூலம் உயிரினங்களுக்கும், உடைமைகளுக்கும் சேதங்களையும், அழிவையும் ஏற்படுத்தலாம். இவ்வாறான நிலநடுக்கம் அதிகமாக ஜப்பான் போன்ற நாடுகளிலேயே ஏற்படுகின்றன. 

நாம் 2004 டிஸம்பரில் சந்தித்த பூமியதிர்ச்சி இரண்டாம் வகையைச் சார்ந்தது. இது கடலுக்கடியில் சுமார் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் உள்ள தரைப்பகுதியில் தகடுகளின் உலுப்பல், உராய்வு அல்லது வெடிப்பின்போது ஏற்படும் உந்தல் காரணமாக கடலலைகள் வெகு வேகமாக கடற்கரை நோக்கி வந்து, கடற்கரையையும் தாண்டி  கடல் நீர் பிரவாகிக்கின்றது. இதுவே, சுனாமி என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. ஜப்பானிய மொழியிலான இச்சொல்லுக்கு ‘துறைமுகத்தைத் தாக்கும் பேரலைகள்’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.  1964க்குப் பின்னரே பாரிய கடலலைகள் தரைப்பகுதிக்கு அடித்து வருவதை சுனாமி என்ற பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கியபோதிலும் அதற்கு முன்னர் இது ‘பூமியதிர்வுக் கடலலைகள்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது. 

சுனாமியின் தாக்கம் பசிபிக் கடலில் ஹவாயன், அலாஸ்கா கடற்கரைகளில் ஏற்பட்ட பின்னரே  ‘சுனாமி சர்வதேசத் தகவல் நிலையம்’ ஹொனலூலு நகரில்  நவம்பர் மாதம் 1965ம் ஆண்டில் நிறுவப்பட்டது. பசிபிக் கடலில் ஏற்படும் சுனாமிப் பேரலைகள் பற்றிய தகவல்களை அறியும் பொருட்டு  UNESCO அணுசரணையுடன் இந்நிலையம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

புவியின் மேற்பகுதி கற்கோளங்களை ஆரம்பகால ஆய்வாளர்கள் 6 தகடுகள் என்றனர். தற்போது இவை 12 தகடுகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இறுதியாக 13வது தகடாக இந்தியத் தகடு குறிப்பிடப்படுகின்றது. 

2004ம் ஆண்டு ஏற்பட்ட பூமியதிர்வானது இந்திய, சுமாத்ரா, அவுஸ்திரேலியாத் தகடுகள் சந்திக்கின்ற இடத்தில், இந்தியத் தகட்டில் ஏற்பட்ட வெடிப்பின் தாக்கத்தினாலேயே நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்வெடிப்பானது இமயமலையை நோக்கி நகர்வதாயும், அதனால் எதிர்காலத்தில் இந்தியப் பிராந்தியத்தில் பூமியதிர்வுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாகவும்  அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 1883ல் கல்கத்தாவில் ஏற்பட்ட பூமியதிர்வானது, இலங்கையில் அருகம்குடாவிலும் ஏனைய சில பகுதிகளிலும்  தாக்கங்களை ஏற்படுத்திய தகவல்களும் வரலாற்றில் உள்ளன. 

இதுவரை உலகில் நிகழ்ந்துள்ள அதிபாரிய பூமியதிர்வு 1960 மே 22ம் திகதி சிலியில் சந்தியாகோ-கொண்கேசன் நகா;களுக்கூடே 9.5 ரிச்டர் அளவிலும், அடுத்த பாரிய பூமியதிர்வு 1964 மார்ச் 28ம் திகதி 9.2. ரிச்டர் அளவில் அலாஸ்காவிலும், 1957 மார்ச் 9ம் திகதி 9.1 ரிச்டர் அளவில் எண்டியநோப் தீவுகளிலும் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியான பாரிய பூமியதிர்வு 2004 டிஸம்பரில் ஏற்பட்ட 9.0 ரிச்டர் அளவிலானதாகும். 

கின்னஸ் புத்தகம் பாரிய அனர்த்தங்களாக 1896ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியையும், 1976 ஜூலை 28ல் சீனாவின் டேங்சான் பிரதேசத்தில் ஏற்பட்ட பூமியதிர்வையும், 1887 ஒக்டோபரில் சீனாவின் ஹொடெங் ஆற்றுநீர் பொங்கியெழுந்ததையும் குறிப்பிடுகின்றது. 

ஆரம்ப காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பூமியதிர்வு பற்றிய புள்ளிவிபரங்கள்   கிடைக்கப்பெறாவிடினும், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 1615 ஏப்ரில் 14ம் திகதி ஏற்பட்ட பூமியதிர்வின்போது பூமி வெடித்து ஒருவகைக் ‘கெந்தகம்’ கலந்த புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும்,  கற்பாலங்கள் விழுந்து நொறுங்கியதாகவும், இதனால் 200 வீடுகள் சிதைவுற்று சுமார் 2000 பேர் உயிரிழந்ததாகவும் அறிய முடிகின்றது.  1880, டிஸம்பர் 31ம் திகதி காலை 7.00 மணிக்கு இலங்கையில் நிகழ்ந்த பூமியதிர்வின்போது ஏற்பட்ட சுனாமிப் பேரலையினால் திருகோணமலைப் பிரதேசத்தில்  200 - 300 வீடுகள் அழிந்ததாகவும்,  2000 - 3000 உயிர்கள்  பலியானதாகவும் கலாநிதி எம். தனவர்தன குருகே எழுதியுள்ள கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். 

சூறாவளி, பெருவெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துப் பழக்கப்பட்டிருந்த இலங்கை மக்களுக்கு 2004ம் ஆண்டைய சுனாமியானது அதிர்ச்சி கலந்ததொரு நிகழ்வின் தரிசனம் என்றே கூற வேண்டும். இனியும் இவ்வாறானதோர் அனர்த்தம் வராதிருக்கவும் - 2004ம் ஆண்டைய அனர்த்தத்தின்போது உயிரிழந்தோருக்காகவும் நாம் பிரார்த்திப்போம்! 

ஐ. ஏ. ஸத்தார் 


 



Post a Comment

Previous Post Next Post