“காக்கா கூட்டத்தை பாருங்க!”

“காக்கா கூட்டத்தை பாருங்க!”


“என்ன அநியாயம்?.... வாங்கிட்டு வந்து போட்டு நாலு நாள் கூட ஆகல அதுக்குள்ளார பியூஸ் போயிடுச்சே!”  புலம்பியபடி சமையல் அறை பல்பை கழற்றிக் கொண்டிருந்த நரசிம்மன் வாசல் பக்கம் இருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்க கையில் இருந்த பல்பை அலமாரி மேல் வைத்து விட்டு வெளியே வந்தான்.

“நாகராஜன் சார் வீடு இதுதானே?” கேட்டவன் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் பளிச்சென்று இருந்தான்.

“ஆமாம்!.. எங்க அப்பா தான்!.. அவர் இப்ப வெளிய போயிருக்காரு.....நீங்க யாரு? என்ன விஷயம்?” தோளில் இருந்து துண்டால் முகவியர்வையை துடைத்தபடி கேட்டான் நரசிம்மன்.

“கள்ளிமேடு வீதி...நாராயணசாமி தெரியும் இல்லைங்க?”

“ம்...தெரியும்!.. சொல்லுங்க!”

“அவர் இன்னைக்கு காத்தாலே மாரடைப்புல இறந்துட்டாருங்க!”

அதிர்ச்சி அடைந்த நரசிம்மன்,  “அடப்பாவமே!... முந்தா நாள் கூட பார்த்தேனே?... நல்லாத்தானே இருந்தார்?”

“க்கும்!... மாரடைப்பு எல்லாம் சொல்லிட்டா வருது தம்பி?...  “திடு...திப்”ன்னு வந்துடுது!”

“சரிங்க... நான் அப்பா வந்ததும் தகவல் சொல்லிடறேன்....நீங்க கிளம்புங்க!”

அந்த மனிதனை அனுப்பி விட்டு வீட்டிற்குள் திரும்பிய நரசிம்மன் யோசித்தான்.  “அப்பாவுக்கு எப்படி தகவல் தெரிவிக்கிறது?... அவர் இப்ப எங்க இருப்பார்?ன்னு சொல்ல முடியாதே!... வியாபாரி பல கடைகள் ஏறி இறங்குறவரு... எங்கே?ன்னு தேடிப் பிடிக்கிறது?... சரி...எப்ப தகவல் கிடைக்குதோ அப்போ அவரா வரட்டும்!... நாமாவது உடனே போவோம்” தனக்குத்தானே முடிவு செய்தவனாய் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினான்.

மேடான சாலையில் சைக்கிளை மிதித்துச் செல்லும் போது இறந்து போன நாராயணசாமியை அவன் மனம் நினைத்தது.  “ஹும்...மனுஷனா அவன்? மகா மோசமான பேர்வழியாச்சே!... ஒருத்தர் ரெண்டு பேரா?... எத்தனை பேர் வயித்தெரிச்சலை கொட்டியிருப்பான்?.. அதான்...எல்லாரும் கொடுத்த சாபம்... இந்த வயசிலேயே போய்ச் சேர்ந்திட்டான்!... அவனுக்கென்ன இருந்தா ஒரு... நாப்பத்திஅஞ்சு... நாப்பத்திஆறு வயசிருக்குமா ?”

சாவு வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த சைக்கிள்களின் நடுவில் தனது சைக்கிளையும் நிறுத்தி விட்டு, அங்கிருந்த பெஞ்சில் சென்றமர்ந்த நரசிம்மன் பார்வையை சுற்றும்முற்றும் செலுத்த, தன் தந்தை அங்கே இருக்கக் கண்டு, ஆச்சரியமானான்.

“அட... இவரு இங்க இருக்காரே?... இவருக்கு எப்படி தகவல் போயிருக்கும்?” யோசித்தவாறே எழுந்து அவரை நோக்கிச் சென்று கேட்டான்.

“அதுவா அக்ரஹார வீதியில் ஒரு கடையில தகவல் சொன்னாங்க!...  ‘சரி’ன்னு இப்படியே வந்துட்டேன்!” என்று தந்தை சொல்ல, நரசிம்மன் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

“தகவல் தெரிஞ்சாலும் அப்பா இந்த பன்னாடைப் பயலோட சாவுக்கு வரமாட்டாரு!ன்னல்ல நினைச்சேன்!.. ஆனா எனக்கு முன்னாடி வந்து நின்னுட்டு இருக்காரு”

அவன் அப்படி நினைத்ததற்கு காரணம் இருந்தது. நான்கு தினங்களுக்கு முன்னாடி அவன் தந்தைக்கும் இறந்து போன நாராயணசாமிக்கும் நடந்த சண்டையை இப்போது நினைத்தாலும் அவனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. 

“டேய் என் பொண்டாட்டிய நான் அடிப்பேன்...உதைப்பேன் நீ யாருடா அதை கேட்க” நாராயணசாமி அடித்தொண்டை கத்தலாய் சொல்ல,

“நாராயணசாமி நீ உன் பொண்டாட்டியை என்ன வேணாலும் பண்ணு!... நான் வேண்டாங்கலே!... ஆனா அதை வீட்டுக்குள்ளார வச்சுப் பண்ணு!... இப்படி நடு ரோட்ல வெச்சு நாலு பேர் பார்க்கிற மாதிரி பண்ணாதே” நாகராஜன் சாந்தமாகவே சொன்னார்.

“டேய்... நீ யாருடா அதைச் சொல்ல?... நீ என்ன ஜில்லா கலெக்டரா?”

“வேண்டாம் நாராயணசாமி இப்படி மரியாதை இல்லாம பேசாதே!... அப்புறம் நானும் உன் லெவலுக்கு இறங்க வேண்டி வரும்!”

“என்னடா... என்னடா பண்ணிவிடுவேன்?” நாராயணசாமி வேட்டியை தொடை வரைக்கும் ஏற்றிக் கட்டிக் கொண்டு சண்டைக்குத் தயராக,

“ச்சீய்!... நீ எல்லாம் ஒரு மனுஷனா?” அவனைப் பார்த்து வெறுப்பாய் சொல்லிய நாகராஜன், அவன் மனைவி பக்கம் திரும்பி,  “இந்தாம்மா... நீ போம்மா வீட்டுக்குள்ளார” என்று கனிவாய் சொன்னார்.

“டேய் நீ யாருடா என் பொண்டாட்டிக்கு உத்தரவு போடறதுக்கு?.... நீ என்ன அவளை வச்சிருக்கியாடா?”

அமைதியாக நின்று சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மன் நாராயணசாமியின் அந்தப் பேச்சினால் உசுப்பப்பட்டு, பாய்ந்து வந்தான்.  “அப்பா என்னப்பா நீங்க... அவன் பாட்டுக்கு தாறுமாறா ஏதேதோ பேசிட்டே போறான்.... நீங்க பேசாமலே நிக்கிறீங்களே?” என்றபடி அந்த நாராயணசாமியை வேகமாக பிடித்து கீழே தள்ளினான். 

“பொத்”தென மண்ணில் விழுந்த நாராயணசாமி நீண்ட நேரம் அப்படியே கிடந்தான். 

“சரி.... போகலாம் வாடா!” நாகராஜன் மகனையும் இழுத்துக் கொண்டு திரும்பி நடந்த போது,
சட்டென எழுந்து வேகமாய் ஓடி வந்த நாராயணசாமி, நாகராஜனின் பின்புறம் அசுரத்தனமாய் உதைத்து விட தடுமாறி விழுந்தார் அவர்.

மூக்கில் ரத்தம் கொட்டியது.
தந்தை தாக்கப்பட்டதில் கோபமுற்ற நரசிம்மன், அந்த நாராயணசாமியை பின்னியெடுக்க, கூட்டமே வந்து இருவரையும் பிரித்தெடுத்து தனித்தனியே அனுப்பி வைத்தது. 


“இவன்தான் என் மகன் நரசிம்மன்” அப்பாவின் குரல் கேட்க, சுயநினைவுக்கு வந்த நரசிம்மன் அவருடன் நின்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்து கைகூப்பினான். 

“நரசிம்மா... இவர் ராஜன் என்னோட பால்ய சிநேகிதர்” என்றவர் திரும்பி தன் நண்பரிடம், “ஆனாலும் இந்த நாராயணசாமிக்கு இவ்வளவு சின்ன வயசுல இப்படி ஒரு சாவு வந்திருக்கக் கூடாதுப்பா!... பாவம்... ரொம்ப நல்ல மனுஷன்!... அப்பாவின்னா அப்பாவி... அப்படியொரு அப்பாவி!... சூதுவாது தெரியாத குழந்தை மனசு” என்று நாராயணசாமியைப் பற்றி அப்பா சொல்ல நரசிம்மன் நொந்து போனான்.

“என்ன மனுஷன்யா இவரு?....  நாலு நாளைக்கு முன்னாடி அந்த நாராயணசாமி இவரை நாறடிக்கிற மாதிரி பேசினதும் இல்லாம,  நடுரோட்டில் வெச்சு உதைச்சான்!... இவரு அவனை போய், “நல்ல மனுஷன்... அப்பாவி” அதுஇதுன்னு சொல்லிட்டிருக்கார்.

அத்தோடு மட்டுமல்லாது சாவு வீட்டில் பல பேரிடம் அவர் அதே வசனத்தை திருப்பி திருப்பி சொல்லுவதும் நாராயணசாமியின் திடீர் மறைவுக்கு வருந்துவதுமாய் இருக்க நரசிம்மனுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. தன் அப்பாவை பற்றி அவன் மனதில் ஒரு மோசமான எண்ணமே தோன்றியது.  “சண்டை போட்டப்ப இதே வாய் அந்த நாராயணசாமியை கண்டபடி திட்டிச்சு!... இன்னிக்கு அதே வாய் புகழாரம் சூட்டுது!... எதுக்கு அப்பா இப்படி இரட்டை வேஷம் போடுறார்?... விடக் கூடாது அவர் கிட்ட இதை கேட்டு தீரணும்”. மனசுக்குள் கருவினான்.

சவம் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் முன்பே வீடு திரும்பி விட்ட நரசிம்மன், அவசர அவசரமாய் குளித்து விட்டு, அப்பாவின் வரவிற்காக காத்திருந்தான்.

“வியாபாரத்திலே கொஞ்சம் முன்னப்பின்னே பேசுறது சகஜம்!.. ஆனா. வாழ்க்கையிலுமா?” நரசிம்மனால் அப்பாவின் அந்த முரண்பாடான நடவடிக்கையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

நாலு மணி வாக்கில் வேகவேகமாக வந்த நாகராஜன், அதே வேகத்தில் குளித்து விட்டு வியாபாரத்திற்கு கிளம்ப, ஓடிப் போய் அவரை வழிமறித்தான் நரசிம்மன்.

“அப்பா கொஞ்சம் நில்லுங்க!... உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்!”

அவர் நின்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, “என்னப்பா என்ன விஷயம்?” கேட்க,

“நான் உங்களை ரொம்ப உயர்வான நினைச்சிட்டு இருந்தேன் அப்பா!.. ஆனா நீங்களும் மத்தவங்க மாதிரி ரெட்டை நாக்கு மனுஷன்!னு இன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன்!” 

நாகராஜன் புருவத்தை உயர்த்திக் கொண்டு மகனைப் பார்த்தார்.

“பின்னே என்னப்பா?... சாவு வீட்டுல எல்லார் கிட்டேயும் அந்த பரதேசிப்பயல் நாராயணசாமியை இஷ்டத்துக்கு புகழ்ந்து தள்ளிட்டு இருந்தீங்களே... என்ன ஆச்சு உங்களுக்கு?... நாலு நாளைக்கு முன்னாடி அவன் உங்களை பேசினதை... எட்டி உதைச்சதை... எல்லாம் மறந்துட்டீங்களா?.... அவனை போய்  “சூதுவாது தெரியாதவன்.... அப்பாவி”ன்னு... ச்சே... என்ன ஆளுப்பா நீங்க?... உங்களை எந்த ரகத்தில் சேர்க்கிறதுன்னே புரியலை” சற்று காட்டமாகவே பேசினான் நரசிம்மன்.

 மெல்ல முறுவலித்த நாகராஜன்,  “டேய் ஒரு மனுஷன் உயிரோடு இருக்கிறப்போ அவன் கூட ஆயிரம் சண்டை போடலாம்... திட்டலாம்... ஏன் அடிக்கக் கூட செய்யலாம்!... ஆனா அந்த வஞ்சத்தை நெஞ்சுல வச்சுக்கிட்டு... அவன் செத்தப்புறம் வஞ்சம் தீர்க்கப் பார்க்குறது.... நாகரீகம் இல்லை!... செத்துப் போனவன் உண்மையிலேயே மோசமானவனாய் இருந்தால் கூட சாவு வீட்ல போய்  “இவன் மகா அயோக்கியன்!... பொறுக்கி.. அதுஇதுன்னு சொல்லக்கூடாது!... யோசித்துப் பாரு!... செத்தவன் செத்துட்டான்!... அவனைத் திட்டறதுல நமக்கு என்ன வந்திடப் போகுது?”

நரசிம்மன் தந்தையின் முகத்தையே கூர்ந்து பார்க்க,

“ஏதோ அவன் பாடை போகும் போது, 
அதுக்குப் பின்னாடி போற பத்து பேராவது,  “ஆஹா... எவ்வளவு நல்ல மனுஷன்”னு பேசட்டுமே!... வாழ்த்தட்டுமே!... அந்த வாழ்த்துக்கள் மூலமா அவனோட ஆன்மாவுக்கு ஏதாவது நல்லது நடக்கும்னா... நடக்கட்டுமே?... நம்மால ஒருத்தருக்கு பணம் காசு கொடுத்து உதவ முடியலைன்னாலும் இந்த மாதிரி பண்பான செயல்கள் மூலமா உதவலாமே?... உதவலாமே என்ன உதவனும்!... அதுதான் மனிதாபிமானம்!.. இப்போ ஒரு காக்கா செத்துப் போச்சுன்னா எல்லா காக்கைகளும் ஒண்ணு கூடிக் கத்தறதில்லையா?...  “செத்துப் போன காக்கா என்னுடைய எதிரி.... ரொம்ப மோசம்”ன்னு சொல்லிக்கிட்டு சாவுக்கு வர மாட்டேன்னு எந்த காக்காயாவது மூஞ்சி திருப்பிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறதா?.... யோசிச்சு பாரு!...”

 அவர் பேசப் பேச அவரை மனதின் இமயத்தில் கொண்டு போய் உட்கார வைத்தான் நரசிம்மன்.

(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
இந்தியா.



 



Post a Comment

Previous Post Next Post