சிற்றலைகளும், மணல் வீடுகளும்!

சிற்றலைகளும், மணல் வீடுகளும்!


வகுப்பறையிலிருந்து சற்று முன்னமே கிளம்பி, ஹாஸ்டலுக்கு வந்தான் குமரகுரு.  அறையைத் திறந்து உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாய் சூட்கேஸை எடுத்து துணிமணிகளை அதனுள் திணிக்க ஆரம்பித்தான். ஊருக்குப் போகும் உற்சாகம் அவன் வாய் வழியே விஸிலாய் ஒலித்தது. 

பொதுவாகவே, வெளியூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்குப் புறப்படும் வேளையில் உற்சாகமாய்த்தான் இருப்பர்.  அது பிறந்து, வளர்ந்த மண்ணைப் பார்க்கப் போகும் களிப்பு, பெற்றோரை, உற்றோரை, சக தோழர்களைக் காணப் போகும் திளைப்பு.  

ஆனால், குமரகுரு எல்லா விஷயத்திலுமே வித்தியாசமானவன்.  ஊருக்குப் போவதில் அவன் அடைந்திருக்கும் உற்சாகத்திற்குக்கான காரணம்  மிகமிக வித்தியாசமானது.  அவன் “அதை”ப் பார்க்கத்தான் ஆசை, ஆசையாய் ஊருக்குப் போகிறான்.  அவன் மனசு முழுவதும்  “அது”தான் நிறைந்திருக்கின்றது.  “அதை”க் காணத்தான் அவன் விழிகள் ஏங்குகின்றன. அதன் குரலைக் கேட்டு மகிழத்தான் அவன் செவிகள் துடிக்கின்றன.

சரி....அதென்ன...அது?

“அது” என்பது ஒரு பொன்னிறப் பறவை. எந்த நாட்டைச் சேர்ந்தது?...எந்த இனத்தைச் சேர்ந்தது?...குயிலினமா?..இல்லை....மயிலினமா?...குருவி வகையா?...இல்லை கொக்கு வகையா?....வௌவால் இனமா?...இல்லை உல்லான் இனமா?

இன்னதென்று தெரியாத அந்தப் பொன்னிறப் பறவையை, ஓராண்டிற்குப் பிறகு, மறுபடியும் பார்க்கப் போகின்றான்.  பார்த்து ரசிக்கப் போகின்றான். சில சமயம் அவனை நினைத்தால் அவனுக்கே சிரிப்பாய் இருக்கும்.  ஒரு காதலியைப் பார்க்க ஓடும் காதலனின் ஆர்வத்தோடு, ஒரு பெயர் தெரியாத பறவையைப் பார்க்க ஓடுகிறோமே?..என்று தன்னைத்தானே சுயபரிகாசமும் செய்து கொள்ளுவான். 

ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் மாத இறுதியில், அவன் வீட்டின் பின்புறமிருக்கும் அந்தப் பெரிய வேப்ப மரத்தில் வந்தமரும் அந்தப் பறவை,  வினோதமாய்...வித்தியாசமாய்....கிட்டத்தட்ட ஷெனாய் வாத்தியம் போன்ற ஒரு இனிமைக் குரலில் இதமான ராகமிசைக்கும். தங்க நிறத்தில் இருக்கும் அதன் இறகுகள் நிலவொளியில் “தக...தக”வென மின்னும்.  அது பறந்து செல்லும் போது, அதன் உடலிலிருந்து தெறிக்கும் வெளிச்சம் தரையில் பிரதிபலிக்கும். ஒரு வருடம்...இரண்டு வருடமல்ல...ஏறக்குறைய ஏழு வருடங்களாய் அவன் அதைக் கவனித்துக் கொண்டுதானிருக்கின்றான்.  சொல்லி வைத்தாற்போல் பௌர்ணமிக்கு முந்தின தினம் வரும், தொடர்ந்து மூன்று நாட்கள் வந்து விட்டு, பிறகு காணாமல் போய்விடும்.

பகல் நேரங்களில், தான் செல்லும் வழிகளில் உள்ள மரங்களிலெல்லாம் குமரகுரு அதைப் பறவையைத் தேடுவான். ம்ஹூம்...அது கண்ணிலேயே படாது.  அது போன்ற பறவையைப் பற்றிய விபரங்களை     நூலகத்திலுள்ள புத்தகங்களில் தேடிப் பார்த்தான்.  எதிலும் அப்படியொரு பறவை இருப்பதாகவே சொல்லப் படவில்லை.

கணிப்பொறி வித்தகனான தன் நண்பன் ஒருவனிடம் அந்தப் பறவையின் தோற்றத்தை விவரித்து, அதை இணைய தளத்தில் தேடிப் பார்க்கச் சொன்னான்.  அதன் முடிவும் பூஜ்யமாக வந்தது.

“நான் காண்பது நிஜ உருவமா?...இல்லை மாய பிம்பமா?”  என்கிற சந்தேகம் அவனுக்குள் உருண்டு கொண்டேயிருக்கும்.  அதன் காரணமாகவே, அந்தப் பறவை வந்து போகும் நாட்களில் இரவு நேரத்திலும் வந்து அதைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பான்.

“ஏண்டா குமரு...இப்படி நடு ராத்திரில வந்து வேப்ப மரத்தை அண்ணாந்து பார்த்திட்டிருக்கியே...உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருச்சா?...போடா...போயி படுத்துத் தூங்குடா!...வயசுப்பையன் இப்படி அகலத்துல வந்து வேப்ப மரத்தடில நின்னா மோகினிப் பிசாசு பிடிச்சுக்கும்டா!” என்று போன வருஷம் அவன் தந்தை வந்து அவனை அதட்டிய போது,

“அப்பா..அப்பா...அங்க பாருங்கப்பா அந்தப் பறவையை!...எப்படி தங்கமாட்டம் ஜொலிக்குதுன்னு!” என்றான் வெகு ஆர்வமாய்,

அவன் காட்டிய திசையில் அண்ணாந்து பார்த்த அவன் தந்தைக்கு அந்தப் பறவையின் உருவம் தெளிவாகத் தெரியாததால், “ப்ச்!...இன்னேரத்துக்கு வேப்பம் பழங்களைத் திங்க பழந்தின்னி வவ்வாலுக வரும்...அதைப் போயி அதிசயமாப் பார்த்திட்டு நிக்கறியே!” என்றார்.

“இல்லப்பா...இது நிச்சயம் வௌவால் இல்லை!...உண்மையைச் சொல்லப் போனா...இது நம்ம நாட்டுப் பறவையே இல்லைன்னு நினைக்கிறேன்!...ஏதோ வெளிநாட்டுப் பறவை போலிருக்கு!...”

“ஹி...ஹி..ஹி..”என்று சிரித்த அவன் தந்தை, “அடப் போடா!...வெளிநாட்டுப் பறவையும் இல்லை...வேற்றுக் கிரகப் பறவையும் இல்லை...நிச்சயமா அது பழந்தின்னி வவ்வாலுதான்!”

“இல்லப்பா...நான் பழந்தின்னி வௌவாலுகளைப் பார்த்திருக்கேனே!...அதுக வேற மாதிரியல்ல இருக்கும்!...கண்டிப்பா இது வெளிநாட்டுப் பறவைதான்!..வேடந்தாங்கலுக்கு எப்படி வெளிநாட்டிலிருந்து பறவைக வருஷத்துக்கொரு தரம் கரெக்டா அதே மாசம்...அதே தேதில வந்திட்டுப் போகுதுகளோ?...அதே மாதிரிதான் இந்தப் பறவையும் வருஷத்துக்கொரு தரம் நம்ம வீட்டு மரத்துக்கு இதே மார்ச்சு மாசக் கடைசில வந்திட்டுப் போகுதுப்பா!...நான் ஏழு வருஷமாக் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்!”

அவன் பேச்சை அசுவாரஸியமாய்க் கேட்டு விட்டு, “ஆவ்” என்று கொட்டாவி விட்டவர், “ம்ம்...சரி...சரி!...எதுவோ...எங்கிருந்தோ...வந்திட்டுப் போவுது...அதைப் பத்தி நமக்கென்ன?...போ...போய்த் தூங்கு!” சொல்லியபடியே வீட்டிற்குள் நடந்த தந்தையை கோபமாகப் பார்த்தான். “ச்சே!...என்ன மனுஷன் இவர்?...இப்பேர்ப்பட்ட ஒரு அதிசயமான விஷயத்துல...ஆச்சரியமான விஷயத்துல கொஞ்சம் கூட சுவாரஸியம் காட்டாமப் போறாரே...இவருக்குத் தெரிஞ்சதெல்லாம் வியாபாரமும்...லாபமும் மட்டும்தானா?

“என்ன மாம்ஸ்...ஊருக்குக் கிளம்பிட்டாப்ல இருக்கு!” அறைத் தோழன் ரவியின் குரல் அவன் சிந்தனை வலையை அறுக்க,

“ம்...ஆமாம்..ரவி!...ஊருக்குத்தான்!” என்றான் குமரகுரு.

“அது சரி..என்ன திடீர்ன்னு ஊருக்கு?...அதுவும் ரிவிசன் டெஸ்ட் நடந்திட்டிருக்கற இந்த நேரத்துல லீவு போட்டுக்கிட்டு?”

சட்டென்று அவன் கேட்டு விட்டதால் என்ன பதில் சொல்லுவதென்று புரியாமல், “அது...வந்து...”என்று இழுத்தான் குமரகுரு.

“என்ன மாம்ஸ்...ஒரு மாதிரி இழுக்கறே...ஏதாச்சும் விசேஷமா?” அந்த ரவி கண்ணடித்துக் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா!” என்று ஒப்புக்குச் சொன்ன குமரகுரு யோசித்தான்.  “இவனிடம் அந்தப் பறவையைப் பற்றிச் சொல்லாமா?...வேணா இவனையும் கூடக் கூட்டிட்டுப் போய் அதைக் காட்டலாமா?”

“ம்ஹூம்...உன்னோட முகத்தைப் பார்த்தா நீ எதையோ என்கிட்டச் சொல்லத் தயங்குறேன்னு புரியுது!..இட்ஸ் ஓ.கே...நீ சொல்லாட்டிப் பரவாயில்லை...பார்த்து பத்திரமா போயிட்டு வா!”

நாகரீகமாக நகர்ந்தான் அறைத் தோழன் ரவி.

ஒரு நெடிய இரவுப் பயணத்திற்குத் தயாராய் நின்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் சிரமமின்றி இடம் பிடித்தான் குமரகுரு.  

பேருந்தின் மிதமான ஓட்டமும், ஜன்னலோர இதமான காற்றும், உறக்கத்தை அவன் மீது வலுக்கட்டாயமாய்த் திணிக்க, தன்னையுமறியாமல் உறங்கிப் போனான்.

உயரக் கொம்பில் அமர்ந்திருந்த அந்தப் பொன்னிறப் பறவை, வழக்கமான தன் ஷெனாய் இசைக்கு பதிலாக, ஹீனக் குரலில் கதறியபடி, “பட...பட”வென தன் தங்க நிறச் சிறகை அடித்துக் கொண்டு, ஆவேசமாக இந்தக் கிளைக்கும், அந்தக் கிளைக்கும் மாறி மாறிப் பறந்தது. அதன் சிறகிலிருந்து சில இறகுகள் பிய்ந்து போய்க் காற்றில் பறந்தன. மரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்த குமரகுரு தன் பிரிய பறவைக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்றுணர்ந்து அதன் ஆவேசத்தைத் தணிக்கும் விதமாய்  “ச்சூ...ச்சூ...” என்று சப்தமெழுப்பினான். அதைச் சிறிதும் கண்டு கொள்ளாத அந்தப் பறவை தொடர்ந்து தாறுமாறாய்ப் பறந்து கொண்டேயிருந்தது.  சில நிமிடங்களுக்குப் பிறகு திடீரென இறக்கையடிப்பதை நிறுத்தி விட்டு, வேகமாய் பூமியை நோக்கி தலைகீழாய் வந்து, கன்ணிமைக்கும் நேரத்தில் தரையில் “படீர்” என விழுந்து ரத்தக் களறியானது.   தங்க நிறச் சிறகுகள் குருதிச் சிவப்பில் பயங்கரம் காட்டின.   “அய்யய்யோ...” என்று கத்தியபடி அதனருகில் சென்ற குமரகுரு, அதைத் தொடக் கையை நீட்டிய போது, சரேலென எழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட உயரப் பறந்து, விண்ணில் ஏறி, மறைந்தே போனது அந்தப் பொன்னிறப் பறவை.

பேருந்தின் திடீர்க் குலுக்கலில் அரண்டு போய்க் கண் விழித்த குமரகுரு “மலங்க...மலங்க” விழித்தான்.  அவன் உடல் அவன் கட்டுப்பாட்டை மீறி நடுங்கியது. “கடவுளே!...என்னவொரு மோசமான கனவு?”

தொடர்ந்து உறக்கம் தொலைந்து போய் விட, சிந்தனைக் கிறுக்கலில் தீவிரமானது மனது.

“எப்படியாவது இந்த வருஷம்...அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்து, என்னோட அந்தத் தங்கப் பறவையைக் காண்பிக்கணும்!....எல்லோர்கிட்டேயும் தேதியைக் குறிச்சு வெச்சுக்கச் சொல்லி...அடுத்த வருஷம் அதே தேதியில் மறுபடியும் வரவழைத்துக் காட்டி...நான் கண்ட அதிசயத்தை மெய்ப்பிக்கணும்!”

“அநேகமா இந்த வருஷம் அது ரொம்பவே பெரிசாகி இருக்கும்னு நெனைக்கறேன்!...ஏன்னா...மொதல் வருஷம் பார்த்தப்ப ரொம்ப சின்னதா இருந்திச்சு....அதே போன வருஷம் பார்த்தப்ப நல்லாவே பெருசாகி இருந்திச்சு?...அதனால இந்த வருஷம் செம சைஸ்ல இருக்கும்!...முடிஞ்சா ஒரு நல்ல கேமரா ஏற்பாடு பண்ணி, அதை போட்டோ எடுத்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கணும்!...”

அவன் மனதில் திடீரென்று வேறொரு சந்தேகமும் வந்தது. “ம்ம்ம்..அது ஆண் பறவையா?...இல்லை பெண் பறவையா?...முட்டை வைக்குமா?...அதோட முட்டையும் தங்க நிறத்துல இருக்குமா?”

விடிய, விடிய அந்தப் பறவை பற்றிய சிந்தனையிலேயே கிடந்தான் குமரகுரு.

சரியாக காலை ஐந்தரை மணிக்கு அவனது ஊரை அடைந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து திரும்பி நின்றது பஸ்.

பதினைந்து நிமிட நிதான நடைக்குப் பின், தன் விட்டை அடைந்தவனைப் பார்த்து அவன் தாய் ஆச்சரியமுற்றாள்.  “அடடே...குமரு...என்னப்பா.. “திடு..திப்”ன்னு வந்து நிக்கறே?...காலேஜி லீவு விட்டுட்டாங்களா?”

“அந்தப் பறவையைக் காண வேண்டித்தான் நான் ரிவிசன் டெஸ்டையெல்லாம் தூக்கி வீசிட்டு வந்திருக்கேன்!”என்கிற உண்மையைச் சொன்னால் அம்மா “காச்...மூச்”சென்று கத்துவாள் என்பதை உணர்ந்த குமரகுரு, “ம்...வந்து...ஆமாம் லீவுதான்!...அடுத்த வாரம் பரிட்சை...அதுக்குப் படிக்கறதுக்காக இந்த வாரம் பூராவும் லீவு!” பொய் சொல்லி விட்டு, “ஆளை விடு சாமி!” என்கிற விதமாய் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு, உள் அறையை நோக்கி ஓடினான் குமரகுரு.

எதிரே வந்த தந்தையும் அதே கேள்வியைக் கேட்க, அதே பதிலை அவருக்கும் தந்து விட்டு நழுவினான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, பயணக் களைப்பைப் போக்கிக் கொள்ள குளியலை நாடியது அவன் மேனி.

டவலை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றவன்... “அ.....ய்....யோ!”

பத்தாயிரம் இடிகள் ஒட்டு மொத்தமாய் தலையில் விழுந்தது போல் அதிர்ந்தான்.

அங்கே...அங்கே..அந்த வேப்ப மரமே காணாமல் போயிருந்தது, என்பதை விட, அங்கு அப்படியொரு மரம் இருந்ததற்கான சுவடே தென்படவில்லை.

“அ....ப்....பா!” அடி வயிற்றுக் கத்தலாய்க் கத்தினான்.

என்னவோ?...ஏதோ?...என்று பதறிப் போய் ஓடி வந்தார் அவன் தந்தை.  “என்ன குமரு...என்னாச்சு?”  அவர் குரலில் பரவலாய்ப் பதட்டம்.

“இ...இங்கே...இருந்த...அந்த வேப்ப...மரம்?”

“அடச்சே!...இதுக்குப் போயா அப்படிக் கத்தினே?...என்ன பயலப்பா நீ?...அதைத்தான் வெட்டி வித்துட்டோமே?” வெகு சாதாரணமாகச் சொன்னார்.

அவர் சொன்ன பதிலில் குமரகுருவின் மொத்த உடலும் நடுங்கியது.  விழியோரம் கண்ணீர் குமிழ்கள் உற்பத்தியாகின. நா தழுதழுக்க, “ஏம்பா...ஏம்பா...இப்படிப் பண்ணினீங்க?” கரகரத்த குரலில் கேட்டான்.

அவன் கேள்வியின் பின்புலத்தில் மறைந்திருக்கும் விபரங்களை அறியாத அவர், “அட...இதென்னப்பா கேள்வி?...மரம் ரொம்பப் பெருசா வளர்ந்து...ஏகத்துக்கும் விரிஞ்சிடுச்சு!...இலைக எக்கச்சக்கமா விழுது...தெனமும் ஏழெட்டு தடவை கூட்டிப் பெருக்கினாலும் தீரமாட்டேங்குது!...எல்லாத்துக்கும் மேல இதோட வேர்கள் பக்கத்துச் சுவர்களுக்கு அடில பரவலா ஓடினதுல பாரு...சுவர்களிலெல்லாம் விரிசல்!...அதான் பார்த்தேன், நம்ம வெறகுக்கடை மகாதேவன் வேற ரொம்ப நாளா, “வெட்டிக்கட்டுங்களா சாமி?...வெட்டிக்கட்டுங்களா சாமி?”ன்னு கேட்டுட்டேயிருந்தான்... “சரி வெட்டிக்கடா!”ன்னுட்டேன்!...”

வாய் மேல் கையை வைத்துக் கொண்டு அவரையே வெறுப்பாய்ப் பார்த்தான் குமரகுரு.

“சும்மா இல்லைப்பா....சுத்தமா இருபத்திரெண்டாயிரம் கெடைச்சது!”

“ச்சே!...என்ன மனிதர் இவர்?”  மனதிற்குள் சொல்லியபடி நெற்றியில் அடித்துக் கொண்டவன்,  வெளிறிய முகத்துடன் அவரையே வெறித்துப் பார்த்தான்.

அவனது அந்தத் தவிப்பிற்கும், துடிப்பிற்குமான, காரணம் புரியாத அவனது தந்தை, “பயல்...ராத்திரி பூராவும் பஸ்ஸுல தூங்காமலே வந்திருப்பான் போலிருக்கு....அதான் மொகமெல்லாம் என்னமோ மாதிரியிருக்கு!” என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, “போப்பா...போய்க் குளிச்சிட்டு...நல்லா ஒரு தூக்கம் போடு...” என்றார்.

அன்று பகல் முழுவதும், அறையை விட்டு வெளியே செல்லாமல், ஜூரம் வந்தவன் போல் அறைக்குள்ளேயே படுத்துக் கிடந்தான் குமரகுரு.  அவன் மனம் வெம்பித் தவித்தது. “அப்பா...உண்களைப் பொறுத்தவரையில் அது ஒரு மரம்...வேப்ப மரம்!...வெட்டிப் போட்டால் வெறகுக்குப் பயன்படும் மரம்!...அவ்வளவுதான்!...ஆனால் அந்தப் பறவைக்கு...அந்த மரம் வருஷத்துக்கொரு முறை வந்து தங்கிட்டுப் போற விருந்தினர் மாளிகை!...எங்கியோ...ஏதோ ஒரு நாட்டிலிருந்து...நம்ம நாட்டை...அதுவும் நம்ம வீட்டைத் தேடி வர்ற அந்த வெளிநாட்டுப் பறவை இனிமே இங்க வருமா?...அப்படியே வந்தாலும் எங்க தங்கும்?...எப்படித் தங்கும்?...அதோட வீட்டைத்தான் இடிச்சிட்டீங்களே!”

அவன் உள்மனம் “ஓ”வெனக் கதறியது.

இரவு.

அனைவரும் உறங்கிய பின் மெல்ல எழுந்து, பின் புறக் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான் குமரகுரு.  அந்த வேப்ப மரம் இருந்த இடத்தில் நின்று அண்ணாந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.  நம்ம வீட்டிற்கு வராவிட்டாலும் எப்படியும் அந்த வழியே நிச்சயம் பறந்து செல்லும், என்கிற நம்பிக்கை அவனுள் ஆழமாய்ப் பதிந்திருந்தது.  காத்திருந்தான்.

அரைமணி நேரம்..... முக்கால் மணி நேரம்...... ஒரு மணி நேரம்.......

ம்ஹூம்...அந்தப் பறவை வருவதற்கான அறிகுறியே தென்படாது போக, பெருத்த சோகத்திலாழ்ந்தான்.  அழுகை முகமெங்கும் பரவியது.

வெற்று வானத்தையே நடுநிசி வரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களிலிருந்து அவனையுமறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.  தள்ளாட்டமாய் நடந்து வந்து படுக்கையில் விழுந்தவன் தேம்பியழுதான்.  

மொத்த உலகமும் நிம்மதியாய் உறங்கும் வேளையில்,  நெஞ்சில் பாறாங்கல்லாய் பாரத்தைச் சுமந்தபடி இரவை உறக்கமின்றிக் கழித்தான்.

அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணி.

“அடடே...என்ன குமரு?...பொட்டியும் கையுமாய் எங்க கிளம்பிட்டே?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்ட தாய்க்கு மௌனத்தைப் பதிலாய்த் தந்து விட்டு, வாசலை நோக்கி எந்திரம் போல் நடந்தான்.

அவனுடைய அந்த அலட்சியம் அவளுக்குள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, அவசரமாய் அழைத்தாள்.

 வேக, வேகமாய் வந்தவர், “என்னப்பா...என்னாச்சு உனக்கு?...நேத்திக்குத்தான் வந்தே?...அதுக்குள்ளார கெளம்பிட்டே?”

“நான்...நான்..ஹாஸ்டலுக்கே போறேன்!”  அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல், எங்கோ பார்த்தபடி சொன்னான்.

“என்னப்பா?....ஒரு வாரம் லீவு!...பரிட்சைக்குப் படிக்கணும்..ன்னு சொன்னே?”

“நான் அங்கியே போய்ப் படிச்சுக்கறேன்!...”

“ஏன்?...இங்க என்ன குறை?..என்ன இல்லை உனக்கு?” அவன் தாயார் அவசரமாய்ச் சொல்ல,

“ம்...இங்க மரம் இல்லை!...பறவை இல்லை!” என்று சொல்லி விட்டு, நிற்காமல் நடந்தவனை  வினோதமாய்ப் பார்த்து சிலையாய் நின்றனர் பெற்றவர்கள்.

(முற்றும்)

முகில் தினகரன், கோயமுத்தூர்


 



Post a Comment

Previous Post Next Post