Ticker

6/recent/ticker-posts

13-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)


10.அஊது& பிஸ்மி ஓதுதல் : 

முதல் தக்பீருக்குப் பின் ஆரம்ப துஆவை ஓதியதை தொடர்ந்து ஸூறா பாதிஹாவை ஓத முன்னர் அஊது& பிஸ்மி கூற வேண்டும்.

அஊது-வை இரகசியமாக ஓதுதல் : 

அல்குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் போது அஊது ஓதுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும்.

தொழுகையில் அஊது ஓதும் போது சத்தமில்லாமல் இரகசியமாக ஓதுவதே நபிவழியாகும்.

தொழுகையில் அஊது ஓதுவதைப் பொறுத்தவரை அறிஞர்களிடையே இரு வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன :

முதல் கருத்து :

முதல் றக்அத்தில் மட்டும் அஊது ஓத வேண்டும். ஏனைய றக்அத்துகளில் அஊது ஓதாமலே ஸூரா பாதிஹா ஓத வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். ஹனபி மற்றும் ஹம்பலி மத்ஹப் அறிஞர்களில் பலர் கூறும் இக்கருத்தை இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) & இமாம் ஷவ்கானி (ரஹ்) ஆகியோர் சரிகாணுகின்றனர்.

(பார்க்க : ‘ஸாதுல் மஆத்”(1ஃ242)& ‘நைலுல் அவ்தார்” (2ஃ231). 

இக்கருத்துக்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸை குறிப்பிடுகின்றனர் :

அபூஹுரைரா (ரழி) கூறுகிறார்கள் : ‘நபியவர்கள் இரண்டாவது றக்அத்துக்கு எழுந்தால் மௌனமாக நிற்காமல் (நேரடியாக) ‘அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்று ஓத ஆரம்பித்துவிடுவார்கள் (முஸ்லிம்& இப்னு ஹுஸைமா). 

‘மௌனமாக நிற்காமலே அல்ஹம்து… என்று ஓத ஆரம்பிப்பார்கள் ” என்று இந்த ஹதீஸ் குறிப்பிடுவதன் மூலம் நபியவர்கள் முதல் றக்அத்தை தவிரவுள்ள ஏனைய றக்அத்துகளில் அஊது ஓதவில்லை என்பது தெளிவாகிறது என்பதாக இவ்வறிஞர்கள் விளக்குகின்றனர்.

இரண்டாவது கருத்து:

எல்லா றக்அத்துகளிலும் அஊது ஓத வேண்டும் என மறுசாரார் கூறுகின்றனர். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாக காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான் : ‘(நபியே!) அல்குர்ஆனை ஓத நாடினால் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக|| (16:98). 

இக்கருத்தை இமாம் ஷாபிஈ (ரஹ்)& இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) உள்ளிட்ட பல அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேற்படி வசனம் குர்ஆன் ஓதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அஊது ஓத வேண்டும் என்பதை பொதுவாகவே கூறுவதால் எல்லா றக்அத்துகளிலும் அஊது ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்.

அவ்வாறெனில் முதல் சாரார் ஆதாரமாக காட்டும் ஹதீஸுக்கு என்ன விளக்கம்?

ஆம். அந்த ஹதீஸில் வரும் ~மௌனமாக நிற்காமல் அல்ஹம்து என்று ஓதினார்கள்| என்பது ஆரம்ப துஆவை ஓதாமல் விட்டதை கூறுவதற்காக சொல்லப்பட்டதாகும். அஊது ஓதவில்லை என்பதை அது குறிக்காது என்று இரண்டாம் சாரார் கூறுகின்றனர்.

இவற்றை வைத்து நோக்கும் போது இந்த இரண்டாவது கருத்தே (அதாவது ஒவ்வொரு றக்அத்திலும் அஊது ஓத வேண்டும் என்பது) ஆதார வலுக்கூடியதாக தெரிகிறது. அல்லாஹு அஃலம்.

பிஸ்மியை இரகசியமாக ஓதுதல் : 

அஊது ஓதிய பின் -ஸுறா ஒன்றின் ஆரம்பமாக இருந்தால் – பிஸ்மி ஓதுவது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும்.

சத்தமிட்டு ஓதி தொழப்படும் தொழுகைகளிலும் (உ-ம் : மஃரிப்& இஷா& ஸுப்ஹ்& ஜும்ஆ) அஊதுவை போன்றே பிஸ்மியையும் சத்தமின்றி இரகசியமாக ஓதுவதே நபியவர்களின் நடைமுறையாகும்.

அனஸ் (றழி) அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்களுக்கு பின்னாலும் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி),உஸ்மான் (ரழி) ஆகியோருக்கு பின்னாலும் தொழுதுள்ளேன். அவர்கள் அனைவரும் ‘அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்றே ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலோ, இறுதியிலோ பிஸ்மியை ஓத மாட்டார்கள் (புஹாரி& முஸ்லிம்). 

மற்றொரு ஹதீஸ் அறிவிப்பின் படி ‘நபியவர்கள் பிஸ்மியை சத்தமிட்டு ஓதமாட்டார்கள்.இரகசியமாக ஓதுவார்கள்” (இப்னு ஹுஸைமா). 

அப்துல்லாஹ் இப்னு முஹப்பல் (ரழி) அவர்களின் மகன் ஒரு தடவை தொழுகையில் பிஸ்மியை சத்தமிட்டு கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு முஹப்பல் (ரழி) அவர்கள் மகனை நோக்கி 

‘மகனே! உன்னை நான் எச்சரிக்கிறேன். நபித் தோழர்களில் யாரும் இவ்வாறு பிஸ்மியை சத்தமிட்டு ஓதியதை நான் பார்த்ததில்லை. இஸ்லாத்தில் ஒரு விடயம் புதிதாக உருவாக்கப்பட்டால் நபியவர்களுக்கு அது அதிக கோபத்தை ஏற்படுத்தும். நான் நபியுடனும் அபூபக்ர், உமர்,உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோருடனும் தொழுதிருக்கிறேன். அவர்களில் எவரும் பிஸ்மியை (சத்தமிட்டு) கூறியதை நான் கண்டதில்லை. நீயும் கூற வேண்டாம். நீ ஓத ஆரம்பித்தால் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொடங்கு” என்று கூறினார்கள் (திர்மிதி,நஸாஈ, அஹ்மத்). 

மேற்படி சம்பவம் ஆதாரபூர்வமானது என ஹதீஸ் துறை ஆய்வாளர்களான இமாம் திர்மிதி (ரஹ்),ஹாபிழ் ஸைலஈ (ரஹ்), ஷெய்க் அஹ்மத் ஷாகிர் (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். 

(தொடரும்)

ARM.ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments