Ticker

6/recent/ticker-posts

8-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)

5.ஆரம்ப தக்பீர் கூறி கைகளை உயர்த்துதல் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விதமாக “அல்லாஹு அக்பர்” என்று ஆரம்ப தக்பீர் கூறி கைகளை உயர்த்துவார்கள் :

1) (சில வேளைகளில்) அல்லாஹு அக்பர் என்று சொல்லிக் கொண்டே கைகளை உயர்த்துவார்கள்

(அபுதாவூத் , இப்னு ஹுஸைமா)

2) (சில வேளைகளில்) அல்லாஹு அக்பர் என்று கூறி முடித்த பின்னர் கைகளை உயர்த்துவார்கள்

(புஹாரி , நஸாஈ).

3) (மற்றும் சில நேரங்களில்) கைகளை உயர்த்திய பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்

(புஹாரி , அபுதாவூத்).

இம்மூன்று முறைகளில் எதையும் ஒருவர் பின்பற்றலாம். அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு முறையை கடைப்பிடிக்கும் போது நபிகளாரின் அனைத்து முறைகளையும் பின்பற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அவ்வாறே நபியவர்கள் மூன்று முறைகளில் கைகளை உயர்த்துவார்கள் :

1) (சில நேரங்களில்) இரு கைகளின் பெரு விரல்களும் காதுச் சோணைக்கு நெருக்கமாக இருக்கும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள் (நஸாஈ).

2) (சில வேளைகளில்) இரு கைகளும் இரு காதுகளின் நுனிகளுக்கு நேராக இருக்கும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள் (புஹாரி , அபுதாவூத்).

3) (மற்றும் சில நேரங்களில்) இரு கைகளும் இரு தோள் புயங்களுக்கு நேராக இருக்கத்தக்கவாறு கைகளை உயர் த்துவார்கள் ( புஹாரி , நஸாஈ).

கைகளை உயர்த்தும் போது விரல்களை பொத்தாமலும் மடக்காமலும் நீட்டி வைத்திருக்க வேண்டும்.

நபியவர்கள் இரு கை விரல்களும் நீட்டப்பட்ட நிலையில் கைகளை உயர்த்துவார்கள் (அபுதாவூத் ,இப்னு ஹுஸைமா).

மேற்கூறப்பட்ட முறைகள் ஆரம்ப தக்பீரின் போது நபியவர்கள் கடைப்பிடித்த ஒழுங்குகளாகும்.இவற்றை நாம் நடைமுறைப்படுத்தும் போதே நபியை பின்பற்றியவர்களாக மாறமுடியும்.

மேற்கூறப்பட்ட நபியின் வழிமுறைகளுக்கு மாறாக ,
  • கைகளை அறவே உயர்த்தாமல் வந்த அதே வேகத்தில் கைகளை கட்டிக்கொள்ளுதல்,
  • தக்பீர் சொல்லும் போது இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்துதல்,
  • கைகளை அரைகுறையாக உயர்த்துதல்,
என்பவை நபிவழிக்கு முரணானவையாகும். இவற்றை நாம் முற்றாக தவிர்த்து விட வேண்டும். 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments