Ticker

6/recent/ticker-posts

யாருக்கு குறி? அணுஆயுத சோதனைக்கு ரகசியமாக தயாரான சீனா.. காட்டிக்கொடுத்த போட்டோ.. அலறும் நாடுகள்

பெய்ஜிங்: அண்டை நாடான சீனா இந்தியாவுடன் தொடர்ந்து வாலாட்டி வரும் நிலையில் தற்போது சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை நடத்துவதற்கான களத்தை தயார் செய்து வருவதை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனா.. வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது. நமக்கு அண்டை நாடாக உள்ள சீனா அடிக்கடி நம்மிடம் வாலாட்டியும் வருகிறது. அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி வருவதோடு, லடாக் எல்லையில் நம் ராணுவ வீரர்களிடம் சண்டைக்கும் சென்று வருகிறது. இப்படியான சூழலில் சீனாவுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க சீனா இந்தியாவை போல் பிற நாடுகளிடமும் முரண்டு பிடித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் நிலவி வருகிறது. சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனாவும் பல விஷயங்களில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனா மிகப்பெரிய சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான இடத்தை சீனா ரகசியமாக உருவாக்கி வருவதாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சீனாவில் லோப்நூர் எனும் பகுதி உள்ளது. வறண்டு போன உப்பு ஏரி பகுதியான இது தற்போது பாலைவனம் போல் உள்ளது. சீனாவின் சின்ஜியாங்கில் இருந்து தக்லமாகன் மற்றும் கும்டாக் பாலை வனத்துக்கு இடையே இந்த லோப்நூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா தனது முதல் அணுகுண்டை சோதனையை நடத்தியது. அதன்பிறகு சீனா தொடர்ந்து அணுஆயுதங்களை அதிகரித்து கொண்டது.

இந்நிலையில் தான் சீனா மீண்டும் லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. நவீன அணுஆயுதங்களை சோதனையிடும் வகையில் அங்கு களம் தயாராகி வருகிறது. அணுஆயுத சோதனை நடத்த வசதியாக 60 அடி ஆழத்தில் பல இடங்களில் துளைகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமெரிக்க கண்காணித்து வந்தது. இந்நிலையில் தான் லோப்நூர் பகுதியில் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு சீனா தயாராகி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது லோப்நூர் பகுதியில் எடுக்கப்பட்ட சேட்டிலைட் போட்டோக்கள் இதனை உறுதி செய்துள்ளன. அதன்படி லோப்நூர் பகுதியில் பல்வேறு கட்டுமானங்களும், ஆழமான துளைகள் இருப்பதும் உறுதியாகி உள்ளது. இதுமட்டுமின்றி புதிய ரோடுகளும் அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதோடு அங்குள்ள கட்டமைப்புகள் அடிப்படையில் பார்த்தால் சீனா அணுஆயுதங்களில் நவீனமயமாக்கும் முயற்சியில் இறங்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை பென்டகனின் (அமெரிக்க பாதுகாப்புத்துறை) ஒரு அங்கமான நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியின் முன்னாள் ஆய்வாளர் ரென்னி பாபியார்ஸால் கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோன்மென்ட்டின் அணுசக்தி நிபுணர் டோங் ஜாவோ கூறுகையில், ‛‛சேட்டிலைட் போட்டோக்களின் ஆதாரங்கள் என்பது சீனா மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்துவதற்கு தயாராகி வருவதை உறுதி செய்கிறது'' என்றார். நியூ மெக்சிகோவில் உள்ள லாஸ் அலமோஸ் ஆயுத ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநரான சீக்ஃப்ரைட் எஸ் ஹெக்கர் கூறுகையில், ‛‛லோப்நூர் பகுதியில மறுகட்டமைப்பு என்பது அசாதாரண சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது உலக நாடுகள் இடையே அணுஆயுதங்கள் சார்ந்த போட்டியை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது'' என்றார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் இதுதொடர்பாக சீனா இன்னும் வாய்த்திறக்காத நிலையில் இந்த சேட்டிலைட் போட்டோக்கள் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. தற்போதைய சூழலில் சீனா எதையும் வெளிப்படையாக கூறுவதை தவிர்த்து வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாடு புதிய அணுஆயுத சோதனைக்கான இடத்தை தயார் செய்வது ஏன்? எந்த நாட்டை குறிவைத்து இந்த திட்டத்தை சீனா கையில் எடுத்துள்ளது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை உள்ளது.


oneindia


 



Post a Comment

0 Comments