Ticker

6/recent/ticker-posts

"தைவானை எங்களோடு இணைப்பது தவிர்க்க முடியாதது" - சீனாவின் கருத்தால் உலகளவில் மீண்டும் பரபரப்பு !

இரண்டாம் உலகப் போரின்போது , சீனாவை ஆண்டு வந்த கோமிங்டாங் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் கோமிங்டாங் கட்சியை அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரித்த நிலையில், மக்கள் ஆதரவு காரணமாக அந்த போரில் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றது.

கம்யூனிஸ்டுகளின் இந்த வெற்றியைத் தொடர்ந்து கோமிங்டாங் கட்சியின் தலைவர் சியாங் காய்-ஷேக் தலைமையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் சீனாவுக்கு அருகில் இருந்த தைவானுக்கு தப்பிச்சென்றனர். தொடர்ந்து நாங்கள்தான் உண்மையான சீனா என கோமிங்டாங் கட்சியினர் கூறிக்கொள்ள, சீனாவின் 90% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்களே உண்மையான சீனா என்று கூறியது.

ஆரம்பத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் தைவானை உண்மையான சீனா என அங்கீகரித்த நிலையில், காலால் செல்ல செல்ல சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனாவை அங்கீகரிக்க தொடங்கின. தற்போதைய நிலையில், தைவானை உலகின் 14 நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா கூட இன்னும் தைவானை அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில். தைவானை சீனாவுடன் இணைப்பது தவிர்க்க முடியாதது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரையில், "தாய்நாட்டை மீண்டும் ஒருங்ணைப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது. சீனா நிச்சயமாக மீண்டும் ஒருங்கிணைக்கப்படும். தைவான் ஜலசந்தியின் இருபுறம் இருப்பவர்களும் ஒரு பொதுவான நோக்கத்துடன் பிணைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சீனாவின் இந்த கருத்துக்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. அதேபோல், தைவானின் தேர்தல் முடிவுகளை சீனா மதிக்க வேண்டும். தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இருதரப்பும் பொறுப்பு" என தைவான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments