Ticker

6/recent/ticker-posts

திரைகள்..!


வழக்கம் போல், மீன் சந்தை கூடும் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தேன். மீன் வரத்து குறைவாகவும், அதேநேரம் விலையும் அதிகமா காணப்பட்டதால், வாடிக்கையாளர்களின் வரவும் குறைவாகவே காணப்பட்டது. 

அதிக விலைகொடுத்து வாங்கிய மீனை, பையில் போட்டுக் கொண்டு திரும்பினேன். எதிரே வந்துக் கொண்டிருந்தார், என் அம்மாவின் வயதையொத்த அந்த வயதான பெண்மணி.

"என்ன ராஜா... எப்டி இருக்கே...?"

"நல்லாயிருக்கேன். மருது எப்டி இருக்கான்?. பார்த்து நிறைய நாளாச்சு.!"

நான் கேட்டதும், அந்த அம்மாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"அவன், இப்போ வெளிநாட்ல இருக்கான். வருஷத்துக்கு இரண்டு தடவ வருவான். என்ன பார்க்க வரமாட்டான். பொண்டாட்டி வீட்ல வருவான், போவான். மாசா மாசம் இரண்டாயிரம் ரூபா, எனக்கு அனுப்புவான். அதில... எண்ணூறு ரூபா வீட்டுவாடக, கொடுக்கணும். மீதி ரூபாவை வெச்சுதான், இந்த வயித்த கழுவுறேன். மீன் சாப்பிட்டு நிறைய நாளாச்சு. அதான் அம்பதுரூபாக்கு, எதாவது வாங்கிட்டு போலாம்ன்னு வந்தேன்..."

இன்னிக்கு இருக்கிற மீன்விலைல, ஐம்பது ரூபாய்க்கு மீன் கிடைக்குமான்னு நான் யோசித்தேன்.

"இந்தாங்க... இந்த பணத்தை வெச்சிருங்க." சொல்லிக் கொண்டே, இருநூறு ரூபாவை எடுத்து அந்த அம்மாவிடம் கொடுத்தேன்.

"வேணாம் ராஜா..." சொல்லிக் கொண்டே, நடுங்கும் கையால் ரூபாயை வாங்கிக் கொண்டார். 

"கேட்க மறந்திட்டேன். பிள்ளைங்க படிக்கிறாங்களா..?"

"நல்ல படிக்கிறாங்க..."

"அம்மா, அப்பா எப்டி இருக்கா.? பார்த்து நாளாச்சு. ஒருவிஷயம் சொன்னா தப்பா நினைக்காதே. பெத்தவங்கள, என்னிக்குமே பெத்தவங்கதான். மனசுல வெச்சுக்க. மறந்திடாதே..."

மருதுவின் அம்மா, சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், எனது இதயத்தை குத்திக் காட்டியது.

அங்கிருந்து கிளம்பிய நான், அருகில் இருந்த காய்கறிகடைக்கு சென்று, நூறுரூபாய்க்கு, காய்கறிகளை வாங்கியதும், தொலைவில் இருந்த அம்மாவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கனத்த இதயத்துடன்...!"

கோபால்.


 



Post a Comment

0 Comments