ஃபத்வா ரமழானிய்யா
(ரமழான் மாத நோன்பு
தொடர்பான ஃபத்வாக்கள்)
நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன்.
இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் தமிழாக்கம் செய்துள்ளேன்.
அபூ அப்னான்
கேள்வி:
நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
பதில்:
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.’ (2:183)
இந்த ஆயத்தைப் பார்த்தால் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். தக்வாவும் அல்லாஹ்வை வழிப்படுவதும்தான் நோன்பு கடமையாக்கப்பட்டமைக்கான காரணமாகும். தக்வா என்றால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து நடப்பதாகும். அதாவது, ஏவப்பட்டதை எடுத்து நடப்பதும், தடுக்கப்பட்டவற்றை விட்டும் தவிர்ந்து கொள்வதும் தக்வா என்று கூறலாம்.
‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பாணத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி- 1903
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பொன்மொழியும் நோன்பாளி ஏவப்பட்ட கடமைகளை எடுத்து நடக்க வேண்டும் என்பதையும், தடுக்கப்பட்ட சொற்கள், செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. ஒரு நோன்பாளி மனிதர்கள் பற்றிப் புறம் பேசலாகாது; பொய் சொல்லலாகாது; மக்களுக்கு மத்தியில் கோள் சொல்லி மூட்டிவிடலாகாது; தடுக்கப்பட்ட விதத்தில் வியாபாரம் செய்யலாகாது. தடுக்கப்பட்ட அனைத்தையும் விட்டும் தவிர்ந்து நடக்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் ஒரு மனிதன் இப்படி இருந்து பயிற்சி எடுத்துவிட்டால் அவன் வருடம் முழுவதும் இதனைப் பேணி வாழ்வதற்கான பக்குவத்தைப் பெற்றுவிடுவான்.
ஆனால், அதிகமான நோன்பாளிகளின் நோன்புடைய நாளுக்கும் நோன்பு அல்லாத நாட்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும். அவர்கள் நோன்புக்கு முன்னர் வழமையாக கடமைகளைப் பேணாமலும் ஹறாம்களைச் செய்தும் வந்தார்களோ, அப்படியே நோன்பு காலங்களிலும் நடந்து கொள்கின்றனர். நோன்பினது கண்ணியத்தைப் பேண வேண்டும் என அவர்கள் உணர்வதில்லை. இந்தப் போக்கு நோன்பை முறித்துவிடாது. என்றாலும், நோன்பின் கூலியைக் குறைத்துவிடும். சில போது குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க நோன்பின் கூலிகள் அப்படியே வீணாகிவிடவும் வாய்ப்புள்ளது.
(அஷ்ய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)
(தொடரும்)
தமிழாக்கம் (அபூ அப்னான்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments