Ticker

6/recent/ticker-posts

ஜூனியர் உலகக்கோப்பையை 4-ஆவது முறையாக வென்றது ஆஸ்திரேலியா... 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக சாம்பயின் பட்டத்தை வென்றது.

தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக ஹேரி டிக்சன் – சாம் கோன்ஸ்டாஸ் களம் இறங்கினர்.

சாம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க டிக்சன் 42 ரன்னும், அடுத்து வந்த கேப்டன் வெய்ப்ஜென் 48 ரன்களும் எடுத்தனர். ஹர்ஜாஸ் சிங் 55 ரன்கள் சேர்க்க விக்கெட் கீப்பர் ரியான் ஹிக்ஸ் 20 ரன்னும், ஆலிவர் பீக் 46 ரன்னும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 253 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். ஓபனிங் பேட்ஸ்மேன் அர்ஷின் குல்கர்னி 3 ரன்கள் எடுத்து தொடக்கத்திலேயே அணிக்கு சரிவை கொடுத்தார். இதிலிருந்து மீள ஆதர்ஷ் சிங் – முஷீர் கான் இணை  போராடியது. முஷிர் 22 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற தொடங்கினர்.

தனியொருவனாக போராடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் சேர்த்தார். 8 ஆவது வீரராக களமிறங்கிய முருகன் அபிஷேக் 42 ரன்கள் சேர்த்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இருப்பினும் 43.5 ஓவர்கள் தாக்குப் பிடித்த இந்திய அணியால் 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக கடந்த 8 மாதங்களில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், ஜூனியர் உலகக்கோப்பை ஆகியவற்றை இந்திய அணி இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

news18
 


 



Post a Comment

0 Comments